
பிரிய தலைமை லாவக டமரு கட்சி பற்றியே மாநிலம் முழுதும் பேச்சு.
அந்த கட்சி கண்டிப்பாக வாக்குகளை அள்ளி ஜெயிக்கும் என்பது பல கருத்து கணிப்பு முடிவு சொன்னது.
பிரிய தலைமை லாவக டமரு கட்சியின் பெயர்க் காரணத்தை அதன் தலைவர் சாதுர்யசாமி விளக்கினார். தங்கள் கட்சி பிரியமுடன் தலைமையை தேர்ந்தெடுத்து கொள்கைகளை லாவகமாக டமரு (முரசு போல் ஒரு வாத்தியம்) ஒலிப்பதுபோல் முழக்கமிட்டு மக்களை வசப்படுத்தும், என்றார். சுருக்கமாக பி.த.லா.ட கட்சி என்று கூறுவதில் பெருமைப்பட்டார்.
அந்த கட்சியின் ஒரே வாக்குறுதி தாங்கள் ஜெயித்தால் ஒவ்வொரு வாக்காளருக்கும் கால் கிரவுண்ட் நிலம் இலவசமாக வழங்கப்படும் என்பது. பெரிய அளவில் மாநிலம் முழுவதும் அமர்க்களமாக பிரச்சாரம் வேறு..
தேர்தல் வந்தது.
பி.த.லா.ட கட்சி வாக்குகளை பெரும்பான்மை இடங்களில் கணிசமாகப் பெற்று ஆட்சியும் அமைத்தது. சில மாதங்கள் மக்கள் பொறுமை காத்தனர். பிறகு பொருமல் துவங்கியது. கால் கிரவுண்ட் நிலம் எப்போது கிடைக்கும் என கேட்க ஆரம்பித்தனர்.எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மக்களைத் தூண்டிவிட்டனர். இதற்கென கிரவுண்ட் ஒர்க் பெரிய அளவில் இருந்தது. ஓராண்டு முடிவில் கிளர்ச்சி வெடித்தது. வாக்குறுதியை நிறைவேற்று என்ற வாசகங்களுடன் பதாகைகள். ஊர்வலங்கள், கிளர்ச்சிகள் என.
மவுனம் கலைத்தார் சாதுர்யசாமி. மக்களை ஒன்று திரட்டி ஓர் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து பேசினார்.
"அகழ்வாரைத்தாங்கும் நிலம் போல் எங்களைத்தாங்கும் இனிய சொந்தங்களே! நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான் பாடுபட்டு வருகிறோம். மாநிலத்தில் இருக்கும் நில அளவில் எல்லாருக்கும் கால் கிரவுண்ட் நிலம் கொடுப்பது சாத்தியமா? என்று கொஞ்சம் யோசித்து வாக்களித்திருக்க வேண்டும். இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. சமுத்திரத்தின் நீரை முழுவதும் வற்றச்செய்து விட்டால், கணிசமான நிலப்பகுதி கிடைக்கும். பிறகு என்ன, ஒவ்வொருவரும் தங்களின் ஒரு கால் பாதத்தை பதித்தால் அதில் வரும் ஏரியாவுக்கு நிலம் எழுதித்தரப்படும். ஒரு கால் பதியும் அளவில் வரும் நிலத்தை சொந்தமாக்கிக்கொண்டால். இருபது வருடம் கழித்து மதிப்பு பல மடங்கு ஏறிவிடும். சந்ததிகளுக்கு அந்த நிலத்தை பிரித்தும் கொடுக்கலாம். கடல் தண்ணீரை வற்றச்செய்யும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்," என்றார்.
மக்களிடையே பெரும் கூக்குரல். ஒரு எதிர்கட்சிக்காரர் உரத்த குரலில், சாத்தியப்படாத ஒரு வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றிய உங்கள் கட்சிக்கு வெட்கம் இல்லையா?, என்றார்.
சாதுர்யசாமி பதிலடி கொடுத்தார். 'வெட்கமா! ஆஹா, மக்கள் மூளையை மழுங்கச்செய்யும் யுக்திகளை கட்சிகள் செய்யும். மக்கள்தான் விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும். பெரிய மேலை நாடுகளிலேயே, தவறான தலைவனைத்தேர்ந்தெடுத்து விட்டு, இன்று உலக அளவில் படும் அவஸ்தையை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்?' என்றார்.
பி.த.லா.ட கட்சி, பெயருக்கு ஏற்றால் போல் பித்தலாட்ட கட்சி தான், பொறுப்பு கொடுத்தது தவறு என்று பலர் முணுமுணுத்துக்கொண்டே கலைந்து சென்றனர்.
ஒரு எதிர்கட்சிக்காரன் தன் தலைவனிடம் கூறினான் ' அண்ணே, அடுத்த தேர்தலில் ஆட்சி நமது தான். ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு ஹெலிகாப்டர் கொடுப்போம் என்ற வாக்குறுதியைக்கொடுத்து ஈஸியா ஜெயிப்போம்.. கவலையை விடுங்க '.

Leave a comment
Upload