தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 23  : “அளவற்ற பிழையும் முப்பிழையும்” – மோகன் ஜி

20260422132711114.jpeg

புலவர்கள்தம் கற்பனைக்குத் தான் எல்லைகள் ஏது?

எதையும் பிறருக்குத் தோன்றாத கோணங்களில் கண்டு, சொல்மலர்களால் பாக்கள் தொடுத்து, படிப்போருக்கு பரவசமூட்டும் ரசவாதம் நிகழ்த்த வல்லவர்கள் புலவர் பெருமக்கள்.

திருசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய நூல் ‘அகிலாண்ட நாயகி மாலை’. இது மாலை வகையிலான பிரபந்தம்.

இந்த மாலையிலிருந்து கற்பனை நயமிக்க பாடல் ஒன்றை இன்று பார்க்கலாம்.

தன் மேனியில் சரிபாதியை உமையம்மைக்கு அளித்து மாதொரு பாகனாக இருப்பவர் சிவபெருமான்.

20260422132806209.jpeg

அதே பரமன்தான் பிறைமதியை சூடி இருக்கும் தன் தலையின் மேல் கங்கையையும் அல்லவா வைத்திருக்கிறார்?

இதைப் புலவர்பிரான் பார்க்கும் கண்ணோட்டத்தை இனி காண்போம் ;

பாடல் ;

அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை
அணிஉருப் பாதியில் வைத்தான்
தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்
சடைமுடி வைத்தனன் - அதனால்
பிளவியல் மதியம் சூடிய பெருமான்
பித்தன் என்று ஒரு பெயர் பெற்றான்!
களமர்மொய் கழனிசூழ் திரு ஆனைக்கா
அகிலாண்ட நாயகியே!

விளக்கம்

நெற்க்களத்திலிருக்கும் உழவர்கள் நிறைந்த கழனிகள் சூழ்ந்திருக்கும் திருவானைக்காவில் உள்ள அகிலாண்ட நாயகியே !

அனைவரின் பிழைகளையும் பொறுத்து காத்து ரட்சிக்கும் தாயே!

அளவில்லாப் பிழைகளை பொறுத்துக் காத்திடும் உனக்கோ, தன் மேனியில் பாதியை மட்டுமே சிவன் அளித்திருக்கிறான்.

ஆனால், மூன்றே மூன்றுமுறை மட்டுமே பிழை பொறுக்கும் ஜல மங்கையாகிய கங்கையையோ தன் தலைமேல் அல்லவா தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடுகிறான்?!

20260422132938752.jpeg

அதனால்தான் பிறைமதியை தன் சிரசின் மேல் சூடிய சிவனின் மதிநலத் தின்பால் கொண்ட சந்தேகத்தால், அவனை ‘பித்தன்’ என அழைப்பதும் பொருத்தம் தானோ?

நீரில் விழுந்து மூழ்கும் ஒருவனுக்கு, பிழைத்து வெளிவர மூன்று முறை தான் தண்ணீர் பிழை பொறுக்கும் என்பது முதுமொழி. நீரில் விழுந்தவர் தளர்ந்து தத்தளிக்கும் பிழையை ‘தளர் பிழை’ என்று குறிப்பிடுகின்றார்.

அளவில்லாத பிழைகளையும் பொறுத்தருளும் அகிலாண்ட நாயகிக்கு, தன் இடப்பாகம் மட்டும் தந்து, மூன்றே பிழைகளை பொறுக்கும் நீரான கங்கைக்கு தலைமேல் இடம் கொடுத்தது சரியா என்று சாடுகின்றார்.

ஆக, சிவபெருமானுக்கே யாருக்கு எந்த இடம் தர வேண்டும் என்ற குழப்பம் இருப்பதாக இப்பாடல் நயம்பட குறிக்கின்றது.

அன்னை அகிலாண்டேஸ்வரி அனைவரையும் காக்கட்டும்.

அடுத்த வாரம் மேலும் ஒரு இலக்கியமுத்துடன் சந்திப்போம்.