
முதலாம் தலாக்...
கணவனுக்கு பிரியாணி பரிமாறினாள் உம்தாபேகம். சிக்கன் கிரேவி வைத்தாள். தயிர்பச்சடி வைத்தாள். தக்காளி ஜாம் வைத்தாள். தால்ச்சா ஊற்றினாள்.
கணவன் சாப்பிடுவதை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் உம்தா. ஆகிப் கையூம் தொடை சிக்கனை எடுத்து கடித்தான்.
“ஏங்க... இன்னைக்கி சமையல் எப்படி பண்ணிருக்கேன்?”
“ம்!”
“இதென்ன ஒற்றை எழுத்துல பதில்? சமையல் சூப்பரோ சூப்பர் என்கிற ‘ம்’மா? சமையல் சராசரிக்கு கீழேன்னாவா ‘ம்’மா?”
தொடர்ந்து சாப்பிட்டவாறே மனைவியை முறைத்தான் கையூம்.
“என்ன முறைக்கிறீங்க? சமையல் நல்லாயிருக்கா. இல்லையா?”
“என்னடி சாப்பாட்டை போட்டுட்டு இம்சைப்படுத்ற? இப்பநான் சாப்பிடவா. எழுந்து போகவா?”
“ஆசைஆசையா சமைச்சிருக்கேன்... இப்படி பேசுறீங்களே...”
“என்னடி இது... உன்னோட பெரிய தொந்திரவா போச்சு! சமையல் நல்லாயிருந்துச்சுன்னு வச்சுக்க!”
“உங்களுக்கு கொலாஸ்டிரால் ஏறிடக்கூடாதேன்னு பிரியாணிக்கு நெய் போடாம சூரியகாந்தி எண்ணெய் ஊத்திருக்கேன். சிக்கனின் புறத்தோலையும் கொழுப்பையும் அறவே அகற்றியிருக்கேன் உப்பு மிதமா போட்டிருக்கேன். தால்ச்சால கடிக்க வசதியா இருக்குமேன்னு சாதா எலும்புக்கு பதில் நெஞ்கெலும்பு போட்டிருக்கேன்..”
“ஆக மொத்தத்ல பத்திய பிரியாணி போட்ருக்க. உன் கணக்குபடி நான் ஒரு வியாதியஸ்தன் இல்லையா? இப்பச் சொல்றேன்டி... பிரியாணி பிரியாணி மாதிரி இல்லை. தக்காளி சாதம் சாப்டுற மாதிரி இருக்கு போதுமா?”
“நீங்க ஒரு நன்றி கெட்ட மனுஷன். என்ன ஆக்கிப் போட்டாலும் நாக்கை சுழற்றி தின்றுவிட்டு குறை சொல்வீங்க. உங்க சாதிசனத்தோட பிறவிக்குணம் இது!”
“பொட்டச்சிகள்தான் நன்றி கெட்டவள்கள். நரகத்ல அதிகமாக இருக்கப்போறது லேடீஸ்தானாம். ஏன்னா வாழ்நாள் முழுக்க உதவிகள் செய்தாலும் ஒருநாள் உதவி செய்ய மறந்திட்டா, அந்த ஆண் மோசம் அவன் எனக்கு எதுவுமே செய்யலை-ன்னு நன்றி கெட்டதனமா பேசுவாங்களாம் லேடீஸ்...”
“ரொம்ப பேசாதிங்க... நீங்க ஒண்ணும் என் சமையலுக்கு சர்டிபிகேட் தர வேணாம். சாப்பட்டுட்டு போங்க!”
“சூடுசொரணையில்லாம கொட்டிக்கங்கன்றியா?”
“என்னை மேல மேல பேச தூண்டாதே... அப்றம் நான் தாறுமாறா பேச ஆரம்பிச்சிடுவேன்!”
“என்னடி... என்னை நீ –வா-போன்ற!”
“என் தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் சீண்டி பாக்ற உனக்கெதுக்குய்யா மரியாதை? வார்த்தை தடிச்சா வாடாபோடான்னு கூட பேசுவேன்!”
சாப்பாட்டுத் தட்டை சுவற்றில் வீசியடித்தான் கையூம்.
“ஏன்ய்யா மிருகம் மாதிரி நடந்துக்கிற?”
“மிருகம் மிருகம்ன்ன குரல்வளையைக் கடிச்சுப்பிடுவேன்!”
“எங்க... நீ ஒரு தாய்தகப்பனுக்கு பிறந்திருந்தா என்னை கடி பார்ப்பபோம்!”
“என்னடி... சொன்ன சம்பாதிக்ற திமிரா?”
”ஆமாண்டா!” பாய்ந்து மனைவியின் குரல்வளையை பிடித்தான் கையூம். பதிலுக்கு உம்தா கணவனின் குரல்வளையை பிடித்தாள். இருவரும் சுற்றிச் சுழன்றனர்.
“குரல்வளைலயிருந்து கைய எடுடி!”
“நீ மொதல்ல எடுடா!”
மனைவியின் கன்னத்தில் இருகுத்துகள் வெடித்தான். பதிலுக்கு அவள் கணவனின் மேல் இருகுத்துகள் விட்டாள். இருவரும் தரையில் சிதறினர்.
“கைய நீட்டி அடிச்சிட்டியே நீ... உன்னை என்ன பண்றேன் பாருடி!”
“ஐ டோண்ட் கேர்!”
“இனிமேல் உன்னோட வாழமுடியாது... வீட்டை விட்டு வெளிய போடி!”
“நான் வெளில போக முடியாதுடா!”
“உன்னை வெளில விரட்ற ஆயுதம் என்கிட்ட இருக்கு. உன்னை நான் டைவர்ஸ் பண்ணப் போறேன்... அதற்கான வார்த்தையை இப்ப சொல்லப் போறேன்!”
“அய்யய்யோ... சொல்லிடாதே!”
எழுந்து கையுயர்த்தி ஏழாம் வானம் கேட்கும் குரலில் அறிவித்தான். “உன் மீது என்னின் முதலாம் தலாக்!”
இரண்டாம் தலாக்...
கையூம் குளித்துக்கொண்டிருந்தான். அவனது உலா தொலைபேசி சிணுங்கியது. ஏதோ எஸ்.எம்.எஸ் வருகிறது. எடுத்து பார்த்தாள் உம்தா. டிஸ்பிளேயில்...
“கண்ணா! உன்னை பார்க்காம ரெண்டு நாளா கண்ணெல்லாம் பரபரன்னுது. இன்னைக்காவது வீட்டுப்பக்கம் வா செல்லம். ஐ லைக் யூ! - ‘கே’
பூத்துவாலையால் தலையை துவட்டியபடி வந்த கையூம், மனைவி தனது அலைபேசியை நோண்டுவதை பார்த்து விட்டான். ‘‘என்னடி ஸ்பை வேலை பண்ற?”
வந்த எஸ்எம்எஸ்ஸை படித்துக்காட்டி “யாருங்க அந்த கே?”
“தெரியல... யாராவது என கொலீக்ஸ் விளையாடுவாங்களா யிருக்கும்!”
“இந்த கள்ளத்தொடர்பை உறுதியா கைப்பத்தத்தான் எனக்கு முதல் தலாக் சொன்னியாக்கும்!”
”ஆறுமாசம் வாயப்பொத்தி பதவிசா இருந்த திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறுறமாதிரி ஏறுக்குமாறு பேசுறியே...”
“நான் வேதாளம்னா நீ கொள்ளிவாய் பிசாசு!”
“கொள்ளிவாய் பிசாசுன்னு தெரிஞ்சு ஏண்டி குடும்பம் நடத்ற?”
“எல்லாம் சமூக மெப்பனைக்காகதான்!”
வார்த்தைகள் தடித்தன. மீண்டும் வீட்டு சாமான்களை போட்டு உடைத்தான். மனைவியின் அண்ணனையும் தன்னுடைய அண்ணனையும் சாட்சிகளாக வைத்து இரண்டாம் தலாக்கை மனைவி மீது அறிவித்தான். இரு காதுகளையும் பொத்திக் கொண்டாள் உம்தா.
மனைவியின் அண்ணன். “மச்சான்! ஆத்திர அவசரப்பட்டு உம்தா மீது இரண்டாம் தலாக்கை அறிவிச்சிட்டீங்க. இனி மூன்று மாதவிலக்குகள் முடியுறவரைக்கும் உம்தாவை நீங்க தொடக்கூடாது. அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் சமாதானமாய்ட்டா ஒண்ணு சேந்துக்கலாம். சொன்ன ரெண்டு தலாக்கும் காத்தோட காத்தா மறைச்சிடும் இல்ல மூணுமாதவிலக்குகள் முடிஞ்சிருச்சுன்னா.... மூணாவது தலாக் ஆட்டோமேட்டிக்கா அமுலுக்கு வந்திடும். உங்க கணவன்-மனைவி பந்தம் முறிஞ்சிரும்!”
மைத்துனனை திகிலுடன் வெறித்தான் கையூம்.
மூன்றாவது தலாக்(?)
தளர்வாய் அமர்ந்திருந்த கையூமிடம் மனைவியின் தங்கை நகீபா காத்தூன் வந்தாள் “அஸ்ஸலாமு அலைக்கும் பாய்ஜான்!”
“அலைக்கும் ஸலாம் நகீபா. உன்னுடைடய பிஹெச்டி ஆராய்ச்சி எப்படி போவுது?”
“சிறப்பாக... எனது ஆய்வுக்கு பயன்படுத்துவது போன்ற ஒரு கொஸ்டினயரை தயாரித்துக் கொண்டு வந்திருக்கேன்!”
“ஓவ்!”
“இந்தாங்க... இந்த 15கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்க பார்ப்போம்!’
1. எனக்கும் எனது மனைவிக்கும் (அ) கணவனுக்கும் நடக்கும் சண்டைக்கு முதற்காரணம் முன்கோபம். ஆம் / இல்லை
2. சண்டைகள் போட்டாலும் நான் எனது மனைவியை (அ) கணவனை நேசிக்கிறேன் ஆம் / இல்லை
3, எனக்கு மிகமிக பொருத்தமானவளை தான அல்லாஹ் எனக்கு ஜோடி சேர்த்துள்ளான் ஆம்/ இல்லை
4. குண்டூசி விஷயங்களை கடப்பாரையாக்குவது எனது கிங் ஸைஸ் ஈகோதான். ஆம் / இல்லை
5. என் மனைவி (அ) கணவனின் சமையல் ரசனை சுமார்/ பிரமாதம்/ மகா மோசம்
6. என் மனைவி (அ) கணவன் மனதாலும் எனக்கு துரோகம் பண்ண மாட்டாள்-ர் என நம்புகிறேன் ஆம் / இல்லை
7. பொதுவாகவே இரண்டாவது திருமணங்கள் முதல் திருமணங்களை விட தோல்விகரமானவை ஆம் / இல்லை
8.நான் என் மனைவியின் (அ) கணவனின் உறவினர்களை மதிக்கிறேன் நேசிக்கிறேன் ஆம் / இல்லை
9. உலக இன்பங்களை ஒரு தட்டிலும் மறுதட்டில் கணவனை (அ) மனைவியை நிறுத்தினால் கணவனே.(அ) மனைவியோ போதும் என்பேன் ஆம் / இல்லை
10. உங்களின் ஒருவருக்கு தான் சொர்க்கம் என அல்லாஹ் கூறினால் சொர்க்கத்தை மனைவிக்கு (அ) கணவனுக்கு விட்டுக் கொடுப்பேன் ஆம் / இல்லை
11. எங்களது சேவல் கோழி சண்டைகள் குழந்தைகள் பிறந்தால் தீர்ந்துவிடும் என நம்புகிறோம் ஆம் / இல்லை
12. ஒரு நாளில் ஒரு தடவையாவது மனைவி (அ) கணவன் முகத்தை பார்க்காவிட்டால் அன்றைய பொழுது வீண் என நம்புகிறேன் ஆம் / இல்லை
13. கணவன் மனைவி சண்டையில் யார் மீது தவறு இருந்தாலும் யாராவது முந்திக் கொண்டு மன்னிப்பு கேட்டால் ஊடல் போய் கூடல் வந்து விடும் ஆம் / இல்லை
14. பெரும்பாலும் சண்டை போட்டுவிட்டு யாராவது வந்து சமாதானம் செய்து வைக்க மாட்டார்களா என ஏங்குகிறோம். ஆம் / இல்லை
15. தலாக் என்கிற வார்த்தையை எல்லா கணவன்மார்களும் மனைவிமார்களும் அம்னேஷியா வந்து மறந்து விடவேண்டும் என விரும்புகிறேன் ஆம் / இல்லை
-எல்லா கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்ற பதிலை ‘டிக்’ செய்திருந்தான் கையூம் “பாருங்க பாய்ஜான்... உம்தா கிட்ட குடுத்த கொஸ்டினயரிலும் உம்தா எல்லா கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்று ‘டிக்’ செய்திருப்பதை பாருங்க!... மனசில இவ்ளவு காதலை வச்சுக்கிட்டு சண்டை போடலாமா நீங்க? உம்தாவின் ரெண்டு மாதவிலக்குகள் முடிந்துவிட்டன. மூன்றாவது மாதவிடாய் வந்து போக இன்னும் இரு வாரங்கள் உள்ளன. போனால் வராது பாய்ஜான். ஈகோவை விட்டெறிந்து உம்தாவை அரவணைத்துக் கொள்ளுங்க பாய்ஜான்!”
“ஆகா!” என்றபடி இருதரப்பு உறவினர்களும் உட்பட்டனர்.
“சில முஸ்லிம் ஆண்கள் முந்திரிக்கெட்டைதனமாய் மூன்று தலாக்குகளை ஒரே நேரத்தில் சொல்லி விடுகிறார்கள் மூன்று தலாக்குகளிடையே இடைவெளிகளை ஏற்படுத்தி மீட்சித்தலாக்குக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளான் அல்லாஹ். என்ன சொல்றீங்க மாப்பிள்ளை?”
“உம்தா எங்க? அவளிடம் மன்னிப்பு இறைஞ்சி மீண்டும் அவளுடன் ஜோடி சேர வேண்டும் நான்!”
உம்தா அழைத்து வரப்பட்டாள்.
“ஏற்கனவே நான் இருமுறை கூறிய மணமுறிவு வாசகங்களை ரத்து செய்கிறேன்!” மனைவியின் கைகளைப் பற்றினான்.
“பிரிந்தவர் கூடிவிட்டனர் இனிநமக்கு இங்கென்ன வேலை?”
அனைவரும் அகன்றனர்.
இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். “என்னை மன்னிச்சிருங்க... என் மேலதான் தப்பு!’
“என்னை மன்னிச்சிரு... என்மேலதான் தப்பு!”
“ம்ஹிம்... என் மேலதான் தப்பு!” உம்தா
“எதிர்த்து பேசாதே... என் மேலதான் தப்பு!”
“தப்பை ஒத்துக்கிட்டாலும் அதையும் எதிர்த்து ஆர்க்யூ பண்றது உங்க வழக்கமா போச்சு. நீங்க ஒரு ஆணாதிக்கவாதி!”
“உதைப்பேன்!”
“பதிலுக்கு உதைப்பேன்!”
இடைவெளி விட்டு இருவரும் சிரித்தனர். “பேசிபேசி திரும்ப சண்டை போடப் போறோம் போல!”
“சண்டை போடுவது நம் பிறப்புரிமை. ஆனா, இனி மணமுறிவு வாசகங்களை மட்டும் சொல்லாதிருப்போமாக!”
“பார்ப்போமாய்யா?” கணவனின் கன்னத்தில் செல்லமாக தட்டினாள் உம்தா.
“பார்ப்போம்டி!” மனைவியின் கன்னத்தில் செல்லமாக தட்டினான் கையூம்.

Leave a comment
Upload