தொடர்கள்
நெகிழ்ச்சி
கலெக்டராக தேர்வான மாற்றுத் திறனாளி !- மாலாஸ்ரீ

2020929222215717.jpeg

கடந்த 20!9-ம் ஆண்டுக்கான இந்திய குடிமை பணிகள் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மதுரை அருகே கண்பார்வை குறைபாடு உடைய மாற்று திறனாளி பெண் 286-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மதுரை அருகே சிம்மக்கல், மணி நகரை சேர்ந்தவர்கள் முருகேசன்-ஆவுடைதேவி தம்பதியர். இவர்களின் மகள் பூரணசுந்தரி (27). இவரது 5-வது வயதில் கண் நரம்புகள் சுருங்கியதால் பார்வை குறைபாடு ஏற்பட்டது. பார்வை குறைபாடு கொண்ட மாற்று திறனாளியாக இருந்தாலும், தனது தன்னம்பிக்கையை தளரவிடாமல், ஒன்றாம் வகுப்பில் இருந்தே பூர்ணசுந்தரி முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று வந்திருக்கிறார்.

முதலில் சம்மட்டிபுரத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளியில், மதுரை ஒருங்கிணைந்த சிறப்பு கல்வி திட்டத்தின்கீழ் பூர்ணசுந்தரி படித்தார். இங்கு 10-ம் வகுப்பு பொது தேர்வில் 471 மதிப்பெண் பெற்றிருக்கிறார். பின்னர் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 1092 மதிப்பெண்ணுடன் வென்றிருக்கிறார். இதையடுத்து இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறார் பூர்ணசுந்தரி.

சிறுவயதிலேயே மாற்றுத் திறனாளியாக கல்வி கற்பதில் எதிர்கொண்ட சவால்கள்தான் இவரை இந்தளவுக்கு சாதிக்க தூண்டியது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஐஏஎஸ் பணி, டிஎன்பிஎஸ்சி மற்றும் வங்கி தேர்வுகளை பூர்ணசுந்தரி எழுதியுள்ளார். ஒருசில தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும், ஒரு நாள் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவோம் எனும் முனைப்பில் இருந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு வங்கி தேர்வில் வெற்றி பெற்று, ஊரக வளர்ச்சி வங்கியில் பூர்ணசுந்தரி கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டில் 4-வது முறையாக இந்திய குடிமை பணிகள் தேர்வு எழுதியுள்ளார். இதில் 286-வது இடத்தை பிடித்து பூர்ணசுந்தரி வெற்றி பெற்றிருக்கிறார்.

இதுகுறித்து பூர்ணசுந்தரி கூறுகையில், ‘ஒரு பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளியாக பல்வேறு சவால்களை சந்தித்தேன். இவை எனது பெற்றோரின் உதவியால் எளிதாகியது. எனக்கு பாடங்களை ஆசிரியராக இருந்து தாய் படித்து காட்ட, அவற்றை நான் மனனம் செய்து கொண்டேன்.

போட்டி தேர்வுக்காக சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்குச் சென்றபோது, அங்கு கிடைத்த நண்பர்களின் உற்சாகம், என்னை வெற்றியாளராக உருவாக்கியது. ஆசிரியராக இருந்து தாய் சொல்லித் தந்த பாடங்களை உன்னிப்பாக கற்றுக்கொண்டேன். அது, எனக்கு போட்டி தேர்வுகளில் உதவியாக இருந்தது.

2020929222151202.jpg

எனக்கு மாற்றுத் திறனாளி என்ற எண்ணம் வராத அளவுக்கு என்னுடைய பெற்றோர் பார்த்து கொண்டனர். நான் சந்தித்த சவால்களே, என்னை இந்தளவுக்கு உயர்த்தியது.இந்திய குடிமை ஆட்சி பணியின்போது, மக்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்களை நேரடியாக கொண்டு சேர்க்கும் பாலமாக இருக்க விரும்புகிறேன். என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம்’ என பூர்ணசுந்தரி உறுதியுடன் பதிலளிக்கிறார்.