தொடர்கள்
கவிதை
"வாலி 90 " - ஒரு கவிதாஞ்சலி... - வேங்கடகிருஷ்ணன்

202093018302393.jpg

வாலிக்கு வயது தொண்ணுறாம், இருந்திருந்தால்... நான் சொல்வேன்
வாலிக்கென்றும் பதினாறே, எப்போதும்... என்றென்றும்
இதென்ன வாலி என்று பெயர் வைத்தாய்,
எங்கே உன் வால் என்றாசிரியர் கேட்டிட்ட எகத்தாள கேள்விக்கு
இதோ என் பதில் எனச் சொன்னாய் கவிதையிலே..“வாலில்லை என்பதனால் வாலியாகக்கூடாதா?
காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?”
விடை கேட்ட ஆசிரியர் விஸ்தாரமாய் வாழ்த்தினார்.


கவியரசு கண்ணதாசன் போல நீர் எழுதமுடியுமா?
கவியரங்கில் உம்மிடம் கேட்ட கேள்விக்கு.. நானும்
‘கவி’யரசு தான் என்று கவித்துவ பதில் தந்த கலைக்களஞ்சியம் நீ....
உன் பேனா “மாதவிபொன் மயிலாலும்” எழுதும்
“முக்காலா முக்காபுலாவும்” கக்கும்...
இளைஞர்களின் இதயத் துடிப்பும் அறிந்தவன்
தமிழனின் தன்மானமும் தெரிந்தவன்!
சங்கக் கவிதையும், சந்தக் கவிதையும் அது எந்தக் கவிதையானாலும்
சொந்தக் கவிதையாய் நின்னில் சூல் கொண்டு,
உன் நாவழி பிறக்கும், அது நாளும் நிலைக்கும்.

இசையமைப்பது யாராயினும், நீ இசைப்பது ஒன்றே,
அது உன் தாம்பூல நாவழி திரை தொடு தமிழே!
ராசாவும், ரஹ்மானும் உனக்கு ஒன்று தான்
மாலும் முருகனும் உன் இரு கண்கள்
கவியரசுக்கு எதிரே கடைவிரித்தவன் நீ!வள்ளலார் போல் சொல்ல வேண்டிய வாய்ப்பு வரவில்லை உனக்கு, ஆம் எல்லோரும் கொண்டார்கள் உன் தமிழை.

ஸ்ரீரங்கம் தந்த சீரே, தமிழ்கவிகள் கொண்டாடும் முன்னத்தி ஏறே!
புரட்சி தலைவருக்கு நீ பாட்டில் எழுதியது,
நாட்டில் நடந்தது கண்டு ஊரே வியந்தது அன்று!
மக்கள் திலகம் மகிழ்ந்து கொண்டாடினார் உன்னை
நடிகர் திலகமோ “வாத்தியாரே” என்று வாஞ்சையாய் விளிப்பார் உன்னை
ரமண திலகமோ ரசித்துக் கரம்பிடித்தே தன் வாழ்வில் இணைத்தார் உன்னை.
வெற்றித்திலகமாய் வலம் நீ வரவே வெற்றிவேலன் அருளினான் உன்னை.

உன் முன்னோடி கவியரசோ இயேசு காவியம் படைத்தார்
உன் பேனாவோ அழகிய சீயம் முதல் அவதாரபுருஷன் வரை அற்புத காவியம் ஆயிரம் படைத்தது!
உப்பிட்டவரை மட்டுமல்ல உனக்கு உண்டியிட்டவரையும் நீ மறக்கவேயில்லை
ஸ்ரீகாந்தும் நாகேஷும் உன் அறைத் தோழர்கள் மட்டுமல்ல ஆயுள் தோழர்கள் ஆனார்கள்.
சோறில்லா நேரத்திலும் சோறு உண்ண நேரமில்லா போதினிலும்
பாரினில் உன்னைப்போல பாசாங்காட்டும் பேர் யார்?
மெல்லிசை மன்னரின் சொல்லிசையே, நல்லிசை தந்திடவே நாத்தழும்பேறிய நின் சொல்லிசை கண்டு சொக்காதோர் ஆருளர்?

பொன்னம்மாள் சீனிவாசன் பெற்றெடுத்த பெரும்பேறே
எண்ணம்போல் ஏட்டினிலே வார்த்தெடுத்த தமிழ் ஆறே
இன்னம் நீ இருந்திருந்தால் வண்ணத் தமிழாலே வாழ்த்தொன்று பாடி
கண்மறைந்த கானக்குயில் பாலுவையும் நோயினால் விழாமலே தாயெனக் காத்திருப்பாய்.

“காட்டுக்குள் தேனிக்குள் கூட்டுக்குள் வைத்ததை தன் பாட்டுக்குள் வைத்தவனே” என் கண்ணதாசனைப் பாராட்டி நீ சொன்னது உனக்கே பொருந்தும் என்பது தான் கலைவாணியின் அருள்.

“வாலிப வாலியே, பல்லாண்டுன் புகழ் வாழியே - உன் மலர்த்
தாளினை போற்றியே சொல்வேன் நின் தமிழ் பல்லாண்டு வாழியே!!”

2020930183101402.jpg