“ஒரு வருடத்திற்கு முன்பு, நான் ஜெய்ஷில் இணைந்தேன். நீண்ட காத்திருப்பிற்கு பின்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளேன். இந்த வீடியோவை நீங்கள் காணும் போது, நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பேன்” என்று ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி அகமது தார் சொன்ன காணொளியை புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்ட பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகம்மது வெளியிட்டது.
2019 பிப்ரவரி 14 ஆம் நாளன்று ஸ்ரீநகரிலிருந்து, ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக இந்திய ராணுவ வீரர்கள் வந்த வண்டி ஒன்றின் மேல், சுமார் 350 கிலோ எடைகொண்ட வெடிபொருட்கள் இருந்த மஹிந்திரா காரை ஓட்டிக்கொண்டு வந்து மோதி 40க்கு மேற்பட்ட ராணுவ வீரர்களை கொன்று தானும் உயிரை விட்டான் இந்த தீவிரவாதி அகமது தார்.
கோழைத்தனமான இக்கொடூரச் செயலுக்கு உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியா அந்த சமயத்திலேயே புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் இருப்பதாக கூறியபோது, பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது. ஆனால் இந்த வியாழக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில், பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி பேசியபோது.... புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதாகவும், இது இம்ரான் கானின் மிகப்பெரிய வெற்றி எனவும் கூறி குட்டை உடைத்து இருக்கிறார்.

இந்த செய்தி அவர் வாயால் எப்படி வெளியானது என்றால்...
நாடாளுமன்ற உறுப்பினரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் தலைவரும் ஆன அயாஸ் சாதிக், “இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை நாம் கைது செய்து வைத்திருந்த போது, இந்தியா எதிர் தாக்குதல் நடத்த தயாராக இருந்ததை அறிந்த அச்சத்தில் தானே அபிநந்தனை விடுவித்தீர்கள்” என அம்பலப்படுத்திய கேள்வி கேட்டதால்தான்!
நாடாளுமன்றத்தில் மேலும் பேசிய அயாஸ் சாதிக், “ இந்திய விமான படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிப்பட்ட போது, பாகிஸ்தானில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்றது. அதில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பிரதமர் இம்ரான் பங்கேற்கக் கூட இல்லை. அப்போது அறைக்குள், ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா நுழைந்த போது... அவரது கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. தளபதி வெகுவாக வியர்த்திருந்தார். ‘தயவு செய்து அபிநந்தனை விடுவித்து விடுங்கள். இல்லை என்றால், இன்று இரவு 9 மணிக்கு இந்தியா தாக்குதல் நடத்தும்’ எனக் கூறினார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில் உள்ளது” எனக் கூறினார்.
இந்த உண்மையை... இப்படி வெட்ட வெளிச்சமாக போட்டுடைத்த முஸ்லிம் லீக் தலைவரின் பேச்சை கேட்டு அதிர்ந்து போன பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி பதட்டத்துடன், “இம்ரான் அரசு தான் புல்வாமா தாக்குதலை நடத்தியது. நாங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து கொலை செய்துள்ளோம். புல்வாமா தாக்குதல் இம்ரான் அரசின் மிகப்பெரிய வெற்றி” என்று உண்மையை உளறி விட்டார்.
நாடாளுமன்ற சபாநாயகர் உடனேயே சவுத்ரியை அமைதிப் படுத்த முயல..அவர் தன் தவறை உணர்ந்து அமைதியாக அமர்ந்து விட்டார்.
ஏற்கனவே... செப் 23 அன்று...
பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, ஐஎஸ்ஐ உளவு அமைப்பு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபயஸ் ஹமீது ஆகியோர் அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி இருந்தனர். அதில் கூட்டாக சில முடிவுகளும் எடுக்கப்பட்டு.... அதில் முக்கிய அம்சமாக, இனி வரும் தேர்தல்களில் ராணுவமோ அல்லது உளவு அமைப்புகளோ எவ்வித பங்கும் வகிக்காது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
மேலும், விரைவில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி மாநாட்டில் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சிகளின் உணர்வுகளுக்கு அவர் செவிசாய்க்கத் தவறினால், இம்ரான் கானை ஆட்சியிலிருந்து அகற்ற நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க ஒரு குழுவும் உருவாக்கப்பட்டு, போராட்டங்கள் தொடங்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். ஆக மொத்தம் பாக்.பிரதமர் இம்ரானுக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இது போதாதென்று இன்னொரு சோதனையாக பலூசிஸ்தான் பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்து இருக்கிறது.
பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனி நாடாக பலூசிஸ்தான் வேண்டும் என்ற கோரிக்கை குறித்து வெளிப்படையான குரல் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியான பி.டி.எம் (PDM) நடத்திய பேரணியில், ஜாமியத் உலமா-ஈ-பாகிஸ்தான் தலைவர் ஓவைஸ் நூரானி ஆசாத், தனி பலூசிஸ்தான் விரைவில் அமைக்கப்படும் என அறிவித்தார்.
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில், பலூசிஸ்தானை தனி நாடாக ஆக்க வேண்டும் என்று எழும் கோரிக்கை, பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலூசிஸ்தானின் வளங்களை பாகிஸ்தான் அரசு கொள்ளை அடிக்கிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது இம்ரான் அரசிற்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. பலூச் எதிர்ப்பு போராட்டங்களை கண்டு, பாகிஸ்தான் இராணுவம் மிகவும் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை சீனாவிற்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்துக்கு ஏன் நெறிகட்டுகிறது என்று எண்ண வேண்டாம்... சீனா தான், ஏமாந்த நாடுகளில் எல்லாம் உள்ளே நுழைந்து பனைமரங்களை நட்டு வருகிறார்களே..!
சீனா, பலுசிஸ்தானில் லட்சக்கணக்கான டாலர்களை முதலீடு செய்து, இங்குள்ள இயற்கை வளங்கள், தாதுப்பொருட்கள் முதலியவைகளை தம் பக்கம் வசப்படுத்தி வருகின்றது. இதைக் கொண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தையும் வளமாக்கி வருகின்றதாக கூறப்படுகிறது. இதனால், பலூச் மக்கள் நெடுங்காலமாகவே பாகிஸ்தான் அரசை எதிர்த்து வருகின்றனர்.
தங்கள் நிலங்களை சீனாவிற்கு தாரை வார்க்கும் அரசின் செயலை, பலூசிஸ்தானில் உள்ள உள்ளூர் மக்கள் எதிர்க்கும் போது, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயால் கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த மிருகத்தனமான நடவடிக்கைக்கு உள்ளூர் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பலுச்சிஸ்தான் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட “பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்” பாகிஸ்தான் இராணுவத்தை தாக்கி தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். அண்மையில், அவர்கள் பாகிஸ்தான் துணை ராணுவப் படைகளின் மீது நடத்திய தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த கிளர்ச்சியாளர்கள் இயக்கம், சீனா - பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டமான (China-Pakistan Economic Corridor (CPEC)) திட்டதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறது. இந்த அமைப்பு, பாகிஸ்தானில் பணிபுரியும் சீன குடிமக்களை தாக்குவதாகவும் பல முறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில், கராச்சியில் உள்ள சீனத் தூதரகத்தை தாக்கியதாகவும் இந்த அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சுவாரஸ்யமான விஷயமாக பாக் நாடாளுமன்றத்தில் புல்வாமா தாக்குதல் பற்றிய உண்மையை சொன்ன அதே வியாழக்கிழமை அன்று... நாடாளுமன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது,எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பியதாகவும், அதில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை “மோடி..மோடி” என்று முழக்கமிட்டதாகவும் வீடியோ கிளிப்புகள் சமூக ஊடகங்களில் பரவியது. இது திட்டமிட்டே பரப்பப்பட்ட மோடி ஆதரவாளர்களின் பரப்புரையாம்!
உண்மையில் அவர்கள் “voting, voting” என்றே சத்தமிட்டனர். சார்லி ஹெப்டோ சம்பவம் மற்றும் இஸ்லாமோ ஃபோபியா குறித்து வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி போன்றோர் பேசத் தொடங்கிய பின்னர், ‘voting’ கோஷங்கள் எழுப்பப்பட்டன. சபாநாயகரும் “வாக்களிப்பு கண்டிப்பாக நடக்கும்” என்று உறுப்பினர்களுக்கு உறுதியளிப்பதும் அந்த வீடியோவில் தெரிகிறது.
ஆக...காஷ்மீரில் நடக்கும் அனைத்து தீவிரவாத செயல்களுக்கு பின்னால் நாங்கள் தான் இருக்கிறோம் என்று உலக அரங்கில் பாகிஸ்தான் தாமாகவே ஒப்புக்கொண்டது.
தற்போது இம்ரான் அரசுக்கு பலூச்சிஸ்தான் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது மட்டுமில்லாமல்.... எதிர்கட்சியினர், இராணுவ தளபதி மற்றும் ஐஎஸ்ஐ தலைவர் கூட்டணி... இது பத்தாது என்று புல்வாமா தாக்குதல் குறித்து தானாகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது என இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டு முழித்து கொண்டிருக்கிறது இம்ரானின் அரசு.
“கெடுவான் கேடு நினைப்பான்” என்பது பாகிஸ்தான் விஷயத்தில் சரியாகத் தான் இருக்கிறது.


Leave a comment
Upload