தொடர்கள்
பொது
கண்ணீரின் ஈரம் காயும் முன்… - மரியா சிவானந்தம்

2020930094952312.jpg

சில ஆண்டுகளுக்கு முன் ஜனநாயக மாதர் சங்கம் வேலூரில் நடத்திய பெண்கள் மாநாட்டுக்குச் சென்றிருந்தேன், பல வருடங்களாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கும் அலுவலராகவும், தொழிற்சங்க ஈடுபாடு கொண்டு இயங்கியதாலும் அந்த மாநாட்டுக்கு என்னை அழைத்தனர். மாநாட்டுக்கு அகில இந்திய அளவில் பெண் தலைவர்கள் வந்திருந்தனர். பாப்பா உமாநாத், பாலபாரதி எம்.எல்.ஏ., வாசுகி உமாநாத் என்று எல்லோரும் அறிந்த தலைவர்கள் அமர்ந்திருந்த மேடையில், இளநீல நிறச் சேலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். “யார் இப்பெண்மணி?” என்ற கேள்வி என்னுள் எழுந்தது. விழாவில் அவரை அறிமுகப்படுத்திய பின் பேசத் தொடங்கினார். அவரது மாறுபட்ட குரல் அவர் யாரென சொன்னது. அவர் ‘பிரியா பாபு’ என்னும் திரு நங்கை, எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர். அவர் பேசப் பேச எனக்குள் ஒரு கதவு திறந்தது.

ரயிலில், வீதிகளில் நாம் லேசான மிரட்சியுடன் சந்திக்கும் திருநங்கைகள், தம் வாழ்வில் அனுபவிக்கும் துன்பங்களை அவர் விவரித்த போது, என் கண்களில் நீர் பொங்கியது. இயற்கை நிகழ்த்தும் வினோத விளையாட்டால், உணர்வால் பெண்மைத் தன்மையை பெற்ற அவர்கள் ‘பெண்ணாக’ இவ்வுலகில் வாழ, குடும்பத்தில், சமூகத்தில் எதிர் கொள்ளும் போராட்டங்களை அவர் சொன்ன போது, அதிர்ந்து போனேன். அதன் பிறகு திருநங்கைகள், திரு நம்பிகள் பற்றிய என் பார்வை மாறியது. சமூகத்தில் உரிய அங்கீகாரம் மட்டுமல்ல... கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே அவர்கள் தினமும் போராடிக் கொண்டிருக்கும் அவலம் தொடர்வதை உணர்ந்தேன்.

இவர்களுக்கான உலகம் விடியாமலே இருந்தது. சமீப காலமாக வெளிச்சச் கீற்றுகள் ஆங்காங்கே தென்படுகின்றன. தமிழகத்தில் பிரித்திகா யாஷினி, பல சட்டத் சிக்கல்களைத் தீர்த்து காவல் துறையில் துணை ஆய்வாளரானார். சத்யஸ்ரீ ஷர்மிளா இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். பத்மினி பிரகாஷ் லோட்டஸ் தொலைக்காட்சியில் செய்தி அறிவிப்பாளர். லிவிங் ஸ்மைல் வித்யா எழுத்தாளர், சமூக செயற்ப்பாட்டாளர். மேற்கு வங்காளத்தில் மனாபி படோபத்யா கல்லூரி முதல்வர். மேலும் ஷபீ கிரி இந்திய கடற்படை அலுவலர். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல ஜோதிகா மண்டல் என்பவர் நீதிபதியாகி இருக்கிறார். நர்த்தகி நட்ராஜ், ஆர்வத்துடன் நடனம் பயின்று, பரதக்கலையில் சிறந்து விளங்கி... பத்மஸ்ரீ விருதினையும் பெற்று உள்ளார். ‘ஆடம் ஹாரி’ என்னும் திருநம்பி கேரள அமைச்சர் ஷைலஜாவின் உதவியால் பைலட் பயிற்சி முடித்த செய்தியை சமிபத்தில் செய்தித்தாள்களில் படித்தோம்.

விதியை வெல்லும் வல்லமை பெற்ற விதி விலக்குகள் இவர்கள். ஆனால் பெரும்பாலான திருநங்கைகளுக்கு, வாழ்க்கை முறை போராட்டங்கள் நிறைந்தது. கௌரவமான வேலை, வாழத் தேவையான பொருள், சமூகத்தில் மனித உயிருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை, இவைகளைதான் இவர்கள் கேட்கிறார்கள். திருநங்கைகள் தமக்குள் ஒற்றுமை காத்து, சுய வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வை நடத்த முயற்சிக்கிறார்கள். அத்தகைய ஒரு முயற்சி தான் கோவை நகரில் உருவான ட்ரான்ஸ் கிச்சன் (Trans Kitchen) என்னும் உணவகம். கோவை ஆர்.எஸ். புரத்தில் சங்கீதா என்னும் திருநங்கை தன்னுடன் 10 திருநங்கைகளை இணைத்துக் கொண்டு, இந்த உணவகத்தை செப்டம்பரில் தொடங்கினார். இந்தியாவில் திருநங்கைகளை கொண்டே நடத்தப்படும் முதல் உணவகம் இது.

சங்கீதா, கோவை மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவியாக இருந்தவர். அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர, உழைத்தவர். 39 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய சங்கீதா, சொந்தமாக தொழில் செய்து உழைத்து ஒரு முன்னுதாரணமாக இருந்தவர்... தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகி, உதவி பெற்று வாழ்வாதாரமின்றி தவித்து வந்த பல திருநங்கைகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கியவர்.

வங்கிக் கடன் பெற்று 2019ம் ஆண்டு, இருபது நடமாடும் உணவக வண்டியும், அதற்கான சமையல் பாத்திரங்களையும் இலவசமாக வழங்கினார். தையல் கலை தெரிந்த திருநங்கைகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கியுள்ளார். கோவிட் கால லாக் டௌனால் பல திருநங்கைகள் வேலை இழந்து தவித்தனர். அவர்களின் துயரைத் துடைக்க, விபத்து ஏற்பட்டு கால் உடைந்த நிலையிலும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு ‘டிரான்ஸ் கிச்சன்’ தொடங்கினார் சங்கீதா. பிஷப் அப்பாசாமி சமையல் கலை நிறுவனத்தில், திருநங்கைகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ததோடு, அவர்களைக் கொண்டே அந்த உணவகத்தை நடத்தினார்.

2020930095156403.jpeg

ட்ரான்ஸ் கிச்சன், கோவை மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரு நல்ல ‘பிரியாணி ஜாயிண்ட்’ என்ற பெயரைப் பெற்றது. பத்துப் பேரை வைத்து சமையல், பரிமாறுதல், பேக் செய்தல் என எல்லா வேலைகளையும் செய்ய வைத்து, தானும் அவர்களுடன் பம்பரமாக சுழன்று, இந்த உணவகத்தை நடத்தினார். 32 பேர் அமர்ந்து சாப்பிடும் இந்த உணவகம், நல்ல முறையில் வளரும் என்னும் அறிகுறிகள் தென்பட்டன.

இந்நிலையில் சங்கீதா கொலை செய்யப்பட்டு உள்ளார் என்ற செய்தி திருநங்கைகளுக்கு மட்டுமல்ல, கோவை மக்களுக்கும் இடியாக இறங்கியது. சாய்பாபா காலனி பகுதியில் வசித்து வந்த சங்கீதாவின் இல்லம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்படாத நிலையில் இருந்துள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை காலை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்த காவல்துறையினர், வீட்டிற்குள் சென்று பார்க்கையில்... தண்ணீர் பிடித்துவைக்கும் ட்ரம் ஒன்றில், திருநங்கை சங்கீதாவின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இக்கொலை வழக்கை விசாரித்து குற்றவாளிகளை தேடிப்பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சங்கீதாவின் உணவகத்தில் பணிபுரிந்த இருவர் தலைமறைவாகியிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சொத்து பிரச்சனை காரணமாகவும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நாகையைச் சேர்ந்த ரமேஷ் என்னும் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் விசாரணையில், அவர் சங்கீதாவுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக தெரிய வருகிறது. 60 வயதான சங்கீதாவுக்கு 23 வயது ராஜேஷ் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளான். தன்னை கண்டித்த சங்கீதா, போலீசில் தன்னைப் பற்றி புகார் கொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில், ராஜேஷ் கொலை செய்ததாக தெரிய வருகிறது. மற்ற கோணங்களிலும் விசாரணை தொடர்கிறது...

இதுதான் திருநங்கைகளின் நிலைமை. அவர்கள் அரும்பாடுபட்டு படித்து ஆசிரியர், வழக்கறிஞர், நீதிபதி, தொழிற் முனைவோர் ஆகலாம். ஆனால் பொதுவெளியில், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

ஒரு குடும்பக் கட்டமைப்பு இல்லாமல் தனித்து வாழும் வாழ்க்கை, அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. பெண்களே தனித்து வாழும் காலம் இது. நம் சமூக அமைப்பில் அவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்னும் உண்மை நிதர்சனமாக உள்ளது.

சங்கீதா ஒரு தன்னம்பிக்கை நிறைந்த கம்பீரமான பெண்மணி. கனிவும், கண்டிப்பும் மிக்கவர் என்று அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். தன்னைப் போன்றவர்களுக்கு ஒரு தாயாக இருந்து, வாழ்க்கையில் வழி காட்டியவர். அவருக்கே இந்நிலை என்றால், இது போன்ற சமூகப் பணி ஆற்ற யார் முன் வருவார்கள்...?

கொஞ்ச நாளில் சங்கீதாவை உலகம் மறந்து விடும். இவருக்காக நாம் சிந்தும் கண்ணீரின் ஈரம் காயும் முன், இவர் போன்றோருக்கு சமூக பாதுகாப்பும், சட்ட பாதுகாப்பும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, நம் அனைவரின் கடமையுமாகும்.

இவர்கள் நம்மிடம் வேண்டி நிற்பது நம் அனுதாபத்தை அல்ல, அடிப்படைத் தேவைகளான படிப்பு, வேலைவாய்ப்பு ,பாதுகாப்பு மற்றும் சக மனிதருக்கான மரியாதை.

இவர்களுக்கும் ஆனதல்லவோ இவ்வுலகு?