தொடர்கள்
கதை
இரு கோடுகள்...  –  பா.அய்யாசாமி

2020930151023864.jpeg

“ஏன் ராதா இன்னுமா உன் வீட்ல எலுமிச்சை மரம் காய்க்கல? என சாத“ரணமாக” கேட்டாள் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த சித்தி.

“ஆமாம், அதை ஏன் கேட்கிற போ! என்னென்னமோ பண்ணியாச்சு! ஒன்றும் வேலைக்காகல” என அலுத்துக் கொண்டாள் ராதா.

“விளக்கமாத்தை எடுத்து அடிச்சியா?” எனக் கேட்டாள் சித்தி.

“என்ன சொல்றே?”

“காய்க்காத மரம், பூக்காத செடி இவைகளை விளக்கமாத்தல அடிச்சா காய்க்காத மரம் கூட வெட்கப்பட்டு சட்டுனு காய்க்க ஆரம்பித்துவிடும் என்பது நம்பிக்கை” என்றாள் சித்தி.

“அப்படியா..? “மரத்துக்கே அப்படின்னா, பிள்ளை பெறாதவளை எதைக் கொண்டு அடிக்க..?” என தன் மகன் மனோகர் காதலித்து மணம் புரிந்து இரண்டு வருடமாகும் தன் வலுகட்டாய மருமகள் சித்ராவை இடித்துக் காட்டினாள்.

அடிக்கடி கேட்டு கேட்டு, புளித்துப் போனதால் சித்ராவும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ‘அப்படி அடிக்கனும்னா உம் புள்ளையைத்தான் முதல்ல அடிக்கனும்” என மனத்தில் நினைத்தபடி கடந்து சென்றாள்.

“எம் புருஷன் கண்னை மூடின உடனே, பேரப் புள்ளையாக வந்து பிறப்பார்னு நினைச்சேன்.. ம்.. அதுக்கும் வழி இல்லை” என அலுத்துக்கொண்டாள்

“அவரை என்ன டார்ச்சர் பண்ணினயோ? என மனத்தில் நினைத்துச் சிரித்தாள் சித்ரா..”

அத்தையைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு,வீட்டு வேலையெல்லாம் தானே செய்து அத்தைக்கு முழு ஓய்வு கொடுத்தவள்.

“இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறாள், இப்படி சொல்வதால் என்ன நடக்க வேண்டும் என அத்தை எதிர்பார்க்கிறாள்” என நன்கு புரிந்தவள் சித்ரா.

அங்கு வந்த மனோகர்,

அம்மா, “நம்ம கீதாவுக்கு நல்ல இடத்தில் வரன் ஒன்று வந்து இருக்கு, பொருத்தம் நல்லா இருக்கு. நாளைக்கே பெண் பார்க்க வரலாமான்னு கேட்டாங்க.”

“நான் அம்மாவை கலந்துக்கிட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன் நீ என்னம்மா சொல்றே?” கேட்டான் மனோகர்

“நீ நல்லவன்டா. எவ்வளவு பொறுப்பா இருக்கே உனக்கு வந்து வாச்சதுதான் சரியில்லை.”

“இப்ப எதுக்கு அவளை இழுக்கிறே?” என்றான் மனோகர்

“அம்மாவுக்கும் வருத்தம் இருக்குமில்லே... உனக்கு ஒரு குழந்தை பிறக்கனும், அதை காலாகாலத்திலே கொஞ்சனும்.. இதெல்லாம் ஆசைப்படறது தப்பில்லையே” என்றாள் விருந்தாளியாக வந்த சித்தி.

“உங்க பெண்னுக்கு எத்தனை குழந்தை?” மனோகர் கேட்டதும்...

இன்னும் பிறக்கல..

ஏன்? “முதலிலே போய் நல்ல டாக்டராப் பார்த்து சரி பண்ணுங்க!”

“விருந்தாளியா வந்தோமா, விசாரிச்சோமான்னு இருக்கனும். வெறுமனே தாளிச்சுட்டுப் போகக் கூடாது. எங்க குடும்ப விஷயம் நாங்க பார்த்துக்கிறோம். சரியா?” என்று கடுகடுத்தான்.

இப்ப என்ன சொல்லிட்டோம்னு இப்படி பாயுற... ஆனாலும் கல்யாணத்திற்குப் பிறகு, நீ ரொம்பவே மாறிட்டே மனோகர் என்றபடி ஒதுங்கி நின்றாள்.

சரி, சரி.. நாளைக்கு அவர்களை பெண் பார்க்க வர சொல் என்றாள்.

நாள் பார்த்து திருமணத் தேதியும் வைத்து. ஆறு மாதத்தில் திருமணமும் முடிந்து, நான்கு மாதம் கடந்திருந்தது.

தெலைபேசி் அடிக்கவும் சித்ரா எடுத்தாள். மறுமுனையில் கீதா.

அண்ணி, அம்மா பக்கத்திலே இருக்காங்களா?

இருக்காங்க, இப்போ வருவாங்க, சொல்லு நீ எப்படி இருக்கே என்று சித்ரா கேட்டதுதான் தாமதம்...

“அண்ணி, நானும் அவரும் எங்களுக்குள் பேசி, இப்போதைக்கு குழந்தை வேண்டாம்னு முடிவு எடுத்து இருக்கோம்.. அதை அத்தைக்கிட்ட சொன்ன பின்பும் என்னை ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க...”

“உன் வீட்டுக்காரர் என்ன சொல்றார்?”

அவர், தான் தன் தங்கையின் திருமனத்திற்குப் பிறகு, நாம அதைப் பற்றி யோசிக்கலாம்னு தெளிவா சொல்லிட்டு என்னை வேலைக்கு செல்லவும் அனுமதித்தார். ஆனால், இவங்க டார்ச்சர் பண்றாங்க அண்ணி. நிம்மதியாவே இல்லே... அதான் அண்ணன்கிட்ட சொல்லலாம்னு அம்மாவை கூப்பிட்டேன்.

சரி, நானே சொல்றேன். இதோ அத்தை வந்திட்டாங்க பேசு.

என்ன சித்ரா? கீதா என்ன சொல்றா...?

“பேசுங்க என போனை அத்தையிடம் கொடுத்தாள்.”

அடிப்பாவி! “சொன்னப் பிறகும் தொல்லைப்படுத்தறாளா ? இப்ப என்ன அவசரம் குழந்தை எப்ப பெத்துக்கனும்னு நீங்கதான் முடிவு பண்ணணும்.”

அவங்களுக்கு என்ன? “நீ வேலைக்குப் போறது அவளுக்குப் பிடிக்கலை. அவங்களுக்கு வீட்டு வேலையெல்லாம் தானும் தம் பொன்னும் செய்யனுமேனு நினைக்கிறாங்க போல..”

“எதாக இருந்தாலும் பையன்கிட்ட பேசிகிடுங்க என பட்டுனு சொல்லிடு.
நீ ஏன் பயப்படறே? எனச் சொல்லிவிட்டு போனை வைத்தாள்.”

ஆதித்யா டிவியில் வடிவேலுவின் காமெடி நடந்துக்கொண்டு இருந்தது.

ஒலியை சப்தமாக வைத்தாள் சித்ரா.

“ஏண்டா, உனக்கு வந்தா ரத்தம்.
எனக்கு வந்தா தக்காளி சட்னியா?”

அத்தைக் காதில் விழுந்திருக்கும் போல... வெட்கப்பட்டு முதன் முதலாய் பிடிக்காத மருமகள் சித்ராவைப் பார்த்து சிரித்தாள்.

இரண்டு நேர்கோடுகள் ஒன்றிணைந்தது.

மறுநாள் காலையில்... தாயாவதற்கு குறியீடாய் இரண்டு நேர்கோடுகள் கண்டாள் சித்ரா, மகப்பேறு பரிசோதனை சாதனத்தில்.