தொடர்கள்
தொடர்கள்
நல்லதோர் வீணை செய்தே.... - 2 - வேங்கடகிருஷ்ணன்

2020913220055567.jpg

2020929171415705.jpg

இது எங்களை மிகவும் நெருக்கமாக்கி விட்டது:

விக்னேஸ்வரி என்கிற விக்கியின் கதை...

“என் அம்மாவிடம் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதே என் மாமா தான் என்று நான் சொன்னது, அவளுக்காக, அவளுடைய மருத்துவரோடு நான் ஏற்பாடு செய்திருந்த ஒரு தெரபியின் போது தான். ஏனென்றால் அவளிடம் சொல்வதென்பது எனக்கு மிகவும் கடினமான செயல். நான் அம்மாவை போனில்அழைத்து சொன்னேன்... “அம்மா நான் உன்னிடம் முக்கியமான விஷயம் ஒன்றை பேசவேண்டும், நான் சதாப்தியில் அங்கு வந்து உன்னோடு சேர்ந்து, உன் மருத்துவரிடம் சென்று உனக்கு ஒரு மசாஜ் தெரபி சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது பேசலாமா? எனக்கும் அது மிகவும் சுலபமாக இருக்கும்” என சொன்னேன்....

-----------------------------------

நான் விக்கி என்கிற விக்னேஸ்வரி. நல்லா படிச்சேன். முப்பது வயசுல இப்போ பெங்களூருல வேலையில் இருக்கேன். ஆனா நிம்மதியாவான்னு கேட்டா.....

“இல்ல”ங்கறதுதான் என் பதில்.

உடனே அம்மா கேட்டாள்... “உனக்கு ஒன்னும் இல்லையே, நீ நல்லா தானே இருக்கே?”

நான் சொன்னேன்... “எனக்கு ஒன்னுமில்லமா. நான் நல்லா இருக்கேன்..” ஆனாலும் என் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை அசைக்க...அவள் உடனே ஒரு மனநல மருத்துவரிடம் தெரபிக்காக என்னை பதிவு செய்யச் சொன்னாள். நான் செய்தேன்.

நான் அவளுடைய தெரபிஸ்டிடம், எனது தெரபியின் போது என் அம்மாவும் உடன் இருக்க வேண்டியது தேவை என்று சொன்னேன். இரண்டு வாரம் கழித்து ஒரு நேரத்தை பதிவு செய்து கொண்டேன். அந்த சமயத்தில் நான் இரண்டொரு தடவை அம்மாவை தொலைபேசியில் அழைத்தும் பேசியிருப்பேன், அவள் என்னிடம், “என்ன விவரம்னு சொல்லு, அது தெரியாம எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு” என்றெல்லாம் சொல்லவில்லை... ஆனாலும், கொஞ்சம் பயந்திருந்தாள் என்பது அவள் பேச்சிலேயே தெரிந்தது.

என்னை சென்னை செண்ட்ரலலிருந்து, அவள் தான் அழைத்துச்செல்ல வந்தாள். காரில் செல்லும் போதும் கேட்டாள்... “எனக்கு ரெண்டு கேள்வி தான் கேட்கணும்..! நீ ஏதாவது பயங்கரமான வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கியா?அல்லது ஏதாவது ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கியா?”

என் இதயமே வெடித்துவிடும் போல இருந்தது எனக்கு. இருப்பினும் பதிலளித்தேன்.

“இரண்டுமே இல்லை...”

அவள்... “இப்ப தான் நிம்மதி..”

முடிவாக அவளிடம் நான், “அம்மா..நான் சிறுமியாக இருந்த போது என் மாமா தான் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது” என்றபோது, அவளது பதிலும், முகக்குறிப்புகளும், நான் வரும்போது எதை எதிர்பார்த்தேனோ அதுவாகவே இருந்தது. என்னை கண்ணீரோடு பார்த்தாள்... பின் “ஐ யாம் சாரி” என்றாள்.

காயம்பட்ட குழந்தையை அம்மா தேற்றுவதுபோல், என்னை அப்படியே அரவணைத்துக்கொண்டாள். அதில் பாசாங்கு இல்லை, ஏதோ யோசித்து செய்தது போல் இல்லை. அது அப்படியே உணர்வுபூர்வமான ஒரு தாயின் எதிர் வினை.

இருபது வருடங்கள் என் கண் முன்னே உருண்டோடின. “கடவுளே, எதற்காக நான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்? இதை அப்பவே என் தாயிடம் சொல்லியிருக்கலாமே, இவ்வளவு பரிவு உள்ளவளாக இருக்கிறாளே, அவள் நான் சொன்னது எதையும் மறுக்கவே இல்லையே!” என நெகிழ்ந்தேன்.

தெரபியின் பாதியிலேயே அவள் மனந்திறந்தாள், தான் எவ்வளவு அறியாமையில் ஒருவித மோசமான தாயாக இருந்திருக்கிறோம்..தன் தம்பியை எவ்வளவு தூரம் தன் குழந்தைக்கு பாதுகாப்பாக இருப்பான் என நம்பினோம் என்று வருத்ததுடன் சொன்னாள். பின்னர் என் மாமா மேல் உச்சகட்ட கோபம் கொண்டாள், நேரே அவர் வீட்டிற்கு சென்று துப்பாக்கியால் அவருடைய மூளையை சுட்டு அவரை கொல்ல வேண்டும் என்றாள். எனக்கு அவளது கோபம் மிகவும் பிடித்திருந்தது.

இளமையில் நடந்ததை என் அம்மா முன்னிலையில் நான் அவளது தெரபிஸ்டிடம் சொன்னதால் நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகி விட்டோம். இன்றும் எங்களால் வெகுவாக மனம் திறந்து பேச முடிகிறது. இது என் தெரபிஸ்டின் அறிவுரை. “நீ நினைப்பது போல எதுவும் நடக்காது, உன் அம்மா உனக்கு எதுவானாலும் சப்போர்ட் பண்ணுவாங்க பார்” என்று அவர் சொல்லியிருந்தார். மனதால் தெரபிஸ்டிக்கு நன்றி சொன்னேன்.

சொல்லி வைத்தாற்போல் நாங்கள் தெரபிஸ்ட் கவுன்சலிங் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் டெலிபோன் மணி அடித்தது.. அம்மா தான் எடுத்தாள்...... “ஓ அப்படியா.. சரி...” என்றவள்... போனை வைத்து விட்டு, நேரே பாத்ரூமிற்கு சென்றாள்.

“என்னம்மா என்றேன்...”

“ம். தல முழுகப்போறேன்” என்றாள்.

“ஏதாவது துக்க செய்தியா?”

“ஆமா...அந்த உன் மிருகமாமா ஆக்சிடெண்ட்ல செத்துட்டானாம், அவன் பையன்தான் சொன்னான்” என்றாள்... குரலில் ஒரு வித வெறி. பழி வாங்கிவிட்ட நிம்மதி...

எனக்கு ஏனோ அழவேண்டும் போல இருந்தது........


விக்கியின் கதை குறித்து மன நல மருத்துவர் கம் தெரபிஸ்ட் டாக்டர். ஸ்மிதா ராஜன் அவர்களின் கருத்து...

2020929170216840.jpg

சிறார் சீரழிப்பு என்பது தற்போது ஒரு மிகப் பெரிய பாதகம் விளைவிக்கும் செயலாக உலகெங்கிலும் கருதப்படுகிறது. இந்த பாதிப்புகள் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களிடம் இருக்கும்.

இதை தடுப்பதற்கான முயற்சிகளை தனியொருவரிடத்தில், குடும்ப நிலையில், சமூக அளவில், சமூகம் சார்ந்த கட்டமைப்பு அளவில் என பல்வேறு தளங்களில் முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது.

உங்கள் குழந்தைகளிடத்தில் நல்ல தொடுதல் எது, தீய தொடுதல் எது என்பதைப் பற்றி தாராளமாக, சுதந்திர உணர்வோடு பேச வேண்டிய தருணம் இது. அவர்களைப் பொறுத்தவரையில், எந்த ஒரு செய்தியையும் உங்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்கும். கெட்ட எண்ணம் பிடித்த வக்கிர புத்தியாளர்களிடமிருந்து இதை தெரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

ஆசிரியர்களோ, குழந்தை அக்கறை பணியாளர்களோ அல்லது வேறு எவரோ அவர்களுக்கு வேண்டிய நம்பிக்கையை தந்து, எந்த நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தினர் இணைந்து, குழந்தைகளுக்கான ஒரு நம்பிக்கை பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவது மிகவும் அவசியம்.

குடும்பங்களுக்கு நான் தரும் ஒரு ஆலோசனை என்னவென்றால், குடும்ப நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு வளையத்தின் உறுப்பினர்கள் அடங்கிய புகைப்படத்தை உருவாக்குவதற்கு உங்கள் குழந்தைக்கு உதவுங்கள். உங்கள் குழந்தை இந்த பாதுகாப்பு வளையத்தின் உறுப்பினர்களை அவர்களுடைய புகைப்படம் கொண்டு உருவாக்கட்டும். அவர்களுடைய தொடர்பு எண்களும், அவர்களிடம் தெரியப்படுத்தப்பட வேண்டும். இதனை உங்கள் வீட்டின் முக்கிய வாயிலின் கதவின் பின்புறமோ அல்லது அவர்கள் அறையின் சுவரிலோ ஒட்டப்படவேண்டும். ஏதாவது தீய தொடுதலோ அல்லது ஒரு பயம் கொண்ட சூழ்நிலையோ உருவாகும் போதும், யாரைப் பற்றியாவது ஒரு பயமான எண்ணம் அவர்கள் மனதில் உருவானாலும், இந்த நம்பிக்கை வளையத்திலுள்ள யாராவது ஒரு உறுப்பினரை தொடர்பு கொள்ளும்படி அவர்களுக்கு பயிற்சி அளியுங்கள்.

சமீபத்தில் வந்த குறும்படம் ஒன்றில் ஒரு சிறுமியிடம், “உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை..உன்னை உன் அம்மா ஆஸ்பத்திரிக்கு கூட்டி வரச்சொன்னாள்” என குடும்ப நண்பரொருவர் வீடுக் கதவினை திறக்கச் சொல்கிறார். கதவு திறக்காது வீட்டினுள்ளே இருக்கும் சிறுமி, ‘அப்படியா! எனில் என் அம்மா உங்களிடம் சொல்லியனுப்பிய பாஸ்வோர்டை சொல்லுங்கள், அதை நீங்கள் தராத பட்சத்தில் நான் காவல் நிலையத்திற்கு தகவல் சொன்ன பின்பே கதவினை திறக்க இயலும்” என்கிறாள். அந்த ஆசாமி உடனேயே தெறித்து ஓடுகிறான். இது போல ஆபத்து கட்டம் வந்தால் சமாளிக்க ஏதுவாக உங்கள் குழந்தைகளுக்கும் உங்களுக்கும் ஒரு தனித்த பாஸ்வோர்டை உருவாக்கிக் கொள்வதும் நன்றே.

குழந்தைகளை பொருத்தவரை அவர்கள் தங்களுக்கு நேர்ந்தது பற்றி வெளியே தெரிவிக்க மிகவும் கஷ்டப்படுவார்கள். ஏனென்றால் இந்த துன்புறுத்தலுக்கு பிறகு, அவர்கள் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்தும் அவர்கள் மிகவும் குழம்பி இருப்பார்கள். இது போன்ற நேரங்களில், பெற்றோர்கள் ஏதாவது வித்தியாசத்தினை தங்கள் குழந்தைகளிடம் உணர்ந்தால்... உடனே ஒரு கவுன்சிலரை எவ்வளவு சீக்கிரமாக அணுக முடியுமோ அணுகி, குழந்தைகளின் பிரச்சனையை விளக்கிச் சொல்லவும். அவர்கள் அந்த கவுன்சிலரை நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டு, தங்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம்.

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... உங்கள் குழந்தைகளை, முடிவெடுக்கும் நிலைக்கு நீங்கள் உயர்த்துவது மிக மிக முக்கியம்.

இந்த கதை அதனை உங்களுக்கு நன்றாக புரிய வைத்திருக்கும் என்று நம்புகிறேன்.