தொடர்கள்
சோகம்
ஒரு ஆடுகள சோகம்!– ஆர்.ராஜேஷ் கன்னா

2020929180429607.jpg

திருவிழா காலங்களில் சேவல் சண்டை நம்மூரில் மிகப்பிரசித்தம்…சேவல் சண்டையில் இரு தரப்பினர் ஈடுபட்டாலும், கிராமங்களில் ஜெயிக்கும் சேவல் மீது பந்தயம் கட்டி, ஜெயிப்பது நம்மூர் கிராமவாசிகளுக்கு அலாதி பிரியம்.

பிரத்யேகமாக தயாரிக்கப்படும் கூர்மையான கத்திகளை, சண்டையில் ஈடுபடும் சேவல்களின் கால்களில் கட்டிவிடுவது வழுக்கம். சேவல்கள் சண்டையிடும் போது அதன் கால்களில் கத்தி கட்டப்படுவதால் கத்திகட்டு அல்லது சேவற்கட்டு என்று சேவல் சண்டையை அழைக்கின்றனர்.

சேவல் சண்டையில் ஈடுபடுத்தப்படுத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பு கோழி குஞ்சுகளை தரம் பிரித்து, அதற்கு பிரித்யேகமாக தயார் செய்யப்பட்ட தீனியும், பயிற்சியையும் கொடுத்து சண்டைக்கு விடும் சேவல்களை தயார் படுத்துவார்கள்.

சேவல் சண்டையில் ஜெயிக்கும் தரப்பினருக்கு, தோற்கும் சேவலை கொடுத்து விட வேண்டும். சண்டையில் தோற்கும் சேவலை ‘கோச்சை’ என அழைக்கின்றனர். கோச்சை சேவல்கள் சில இடங்களில் பணத்துக்காக விற்கப்பட்டாலும், பெரும்பாலான பகுதிகளில் சேவல் விருந்துதான்.

வெளிநாடுகளிலும், சேவல் சண்டை மற்றும் ஜெயிக்கும் சேவல் மீது பந்தயம் கட்டி ஜெயிப்பது என நீண்ட கால பழக்கமாகவே இருந்து வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு சேவல் சண்டை, அரசு அனுமதியுடன் நடக்கும். கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், சென்ற ஆகஸ்டு மாதம் முதல் மக்கள் அதிகம் கூடும் வீர விளையாட்டான சேவல் சண்டையை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் முற்றிலும் தடை செய்தது.

30 வயதிற்க்குள் இருக்கும் பிலிப்பைன்ஸ் இளைஞர்கள், காவல்துறையின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு சேவல் சண்டை நடத்தி பந்தயம் கட்டி ஜெயிக்கும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. சில இளைஞர்கள் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, அண்டர்கிரவுண்டு கட்டிடத்தில் கூட சேவல் சண்டையை நடத்தி விடுகின்றனர்.

பிலிப்பைன்ஸ் வடக்கு சம்மார் ப்ரோவின்ஸ் பகுதியில் இருக்கும் மாதுகெங்க் என்ற கிராமத்தில் சேவல் சண்டையை இளைஞர்கள் சட்ட விரோதமாக நடத்துகிறார்கள். இதனால் இந்தப் பகுதியில் பெருமளவில் மக்கள் கூட்டம் கூடுவதால், கொரோனா நோய் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என காவல்துறைக்கு தகவல் சென்றது.

2020929180511216.jpg

சேவல் சண்டை நடக்கும் பகுதிக்கு காவல்துறையின் தலைமை அதிகாரி லெப்டினண்ட் கிறிஸ்டியன் போலக் விரைந்து சென்றார். காற்றில் பறந்து வேகமாக சண்டையிட்டு கொண்டு இருக்கும் சேவல்கள் அருகே சென்றவர், சேவல் சண்டையை நிறுத்தும்படி இரு தரப்பினரையும் எச்சரித்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் காற்றில் பறந்து வந்த சேவல் தனது காலில் கட்டி யிருந்த கூரான கத்தியால் காவல்துறை அதிகாரி தொடையில் கீறிவிட்டது. அடுத்த சில நொடிகளில் காவல்துறை அதிகாரியின் தொடை நரம்பிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது.

சேவல் சண்டையை பார்த்து கொண்டிருந்தவர்கள், அதிக ரத்தபோக்குடன் அரை மயக்க நிலையில் தரையில் சரிந்த காவல்துறையை அதிகாரியை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு உடன் வந்த காவலர்கள் உதவியுடன் தூக்கிச் சென்றனர்.

காவல் அதிகாரியின் தொடையில் உள்ள முக்கிய நரம்பு அறுபட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே காவல்துறை அதிகாரி இறந்துவிட்டார் என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறை உயரதிகாரிகளால் பிலிப்பைன்ஸ் ஆடுகளம் இன்று கவனிக்கத்தக்க இடமாகி விட்டது!