
நிலமகள்
அவள் பாரமாக
நினைத்தாளா
மனித இனப்
பெருக்கத்தை?
அவளைப் புதைத்துப்
பூதங்கள் போல்
பொட்டலாக்கிப்
பொசுக்கினோம்.
அகழ்ந்தும்
அகமழியா
நில மடந்தையவள்.
காணாமற் போன
கால்வாய்கள்
கண்மாய்கள்
ஏரிகள் எல்லாம்
பெரு நகர வளர்ச்சி
எனும் பெயரில்
கட்டிடங்களாய்!
மண்ணழித்து
மலையழித்து
மரமழித்து
மரையகன்ற
மனிதரானோம்!
அவள் அளித்த
அருந் தண்ணீரை
ஆவியாக்கி
நா வற்ற அவள்
தவித்த நிலையில்
மழைச் செல்வமில்லா
மலடானோம்!
கழிவு நீர் களமாக்கி
மீதேன் கொள்ளும்
கலனாக்கி
காற்றும் மாசுபட
அவள் நிரந்தரமாய்
தூசுபட!
மாறவில்லை அவள்,
மாறியிருந்தால்
சீறியிருப்பாள்
எரிமலையாய்!
சிதைத்திருப்பாள்
நம்மை!
புதைத்திருப்பாள்
நில நடுக்கமாய்
மண்ணுக்கடியில்
பிணமாய்!
அவளைப் புதைத்த
மானிடரைப்
புதைக்க
நொடி போதும் அவளுக்கு!
பூமித் தாயவள்
பொறையுடன் நம்
கோணம் பார்க்கிறாள்.
அவளைப் பேணும்
நற்குணம் பார்க்கிறாள்.
அவள் பூணும் அணிகலனாய்
மண்ணும் மழையும் வேண்டி!
புரியட்டும் மானிடர்க்கு அவளிடர்.
புலரட்டும் புனர் வாழ்வு பூமிக்கு.
அதனால் புவியோர்க்கும்!

Leave a comment
Upload