
2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மெட்ராஸின் போரூர் பகுதியில் வசித்து வந்தேன். துவக்கத்தில் மதனந்தபுரத்திலும் பின்பு மங்களா நகரிலும் குடியிருந்தேன்.
வீடு போரூரில், அலுவலகம் இருந்தது ராயப்பேட்டையில். வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பி முகலிவாக்கம் கேதார் மருத்துவமனை தாண்டி பூவிருந்தவல்லி ட்ரங்க் ரோடு சென்று கிண்டி வழியாக அலுவலகம் செல்வேன். நாளடைவில் கேதார் மருத்துவமனைக்கு பக்கத்து சாலைக்குள் நுழைந்து ஐயப்பன் கோயில் வழியாக ட்ரங்க் ரோடு என புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அப்போது அப்பகுதியில் நல்ல சைவ உணவகம் என்பது அருகாமையில் இல்லை என்ற நிலை. உடுப்பி அனுக்ரஹா என்றொரு உணவகம் போரூர் ரவுண்டானா அருகே குன்றத்தூர் சாலை துவங்கும் இடத்தில் இருந்தது. வீட்டிற்கு வெளியே உணவருந்தும் சைவ போஜனப் பிரியர்களின் வடிகாலாக அது விளங்கியது.
ஒரு சனிக்கிழமை இரவு அலுவலக்திலிருந்து கிளம்பும் போது வீட்டிலிருந்து அலைபேசி அழைப்பு. சங்கதி எளிமையானது. இரவு உணவாக சாம்பாரும் பொரியலும் மட்டும் இருக்கிறது. சரியென்றால் கிளம்பும் போது போன் செய்து தகவல் சொன்னால் சூடாக சாதம் வடிக்கப்படும். சாப்பாடு வேண்டாம் வெளியே இரவு உணவு முடித்துக்கொள்வதாக இருந்தால், உடனே சொல்ல வேண்டும்.
நான் வெளியே சாப்பிடுகிறேன் என்றேன்.
மெட்ராஸின் மையப்பகுதியில் இருந்து வாகனத்தில் வரும் போது எந்தவொரு இடத்திலும் சாப்பிடத் தோன்றவில்லை. உடுப்பி அனுக்ரஹாவில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ட்ரங்க் ரோட்டில் மனம் போகும் பாதையில் வண்டியையும் செலுத்தி ஐயப்பன் கோயில் அமைந்துள்ள சாலைக்குள் நுழைந்தேன். ரவுண்டானாவுக்கு நேரே செல்ல வேண்டுமே என்று புத்திக்கு உரைத்தது. கோயிலுக்கு எதிர்புறம் சற்றுத் தள்ளி சிறியதொரு உணவகம் இருந்தது. ஜனப்புழக்கம் மிகுந்து காணப்பட்டது. வண்டியை வெளியே நிறுத்திவிட்டு, கடை வாசலில் நின்று கொண்டிருந்தவரிடம் சைவம் தானே என்று கேட்டேன். ஆம் என்றார். இட்லி இல்லை, பரோட்டா மற்றும் ரோஸ்ட், இரவு உணவு முடிந்தது. ருசி பந்தத்தைத் துவக்கியது.
வீட்டில் சமைக்கவில்லை என்றால், இரவு வேலை முடித்து தாமதமாக வீடு திரும்புவதென்றால்... என சந்த்தர்ப்பம் அமையும் போதெல்லாம் அங்கு தான் போஜனம்.
காலை மற்றும் இரவு வேளைகளில் மட்டுமே அவ்வுணவகம் இயங்கும். காலை ஆறு மணி முதல் முற்பகல் பதினோரு மணி வரை, மாலை ஆறு மணி முதல் இரவு பதினொன்றரை மணி வரை!
மங்களா நகருக்கு குடி போன பின்பு சகோதரி கருவுற்றார். பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். என் அலுவலகம் அப்போது தி.நகருக்கு மாறி இருந்தது. அக்கா கருவுற்ற நான்காம் மாதம் முதல் குழந்தை பிறந்து சில மாதங்கள் என சுமார் ஒரு வருட காலம் அக்காவுடன் அம்மா அவர் வீட்டில் தங்கி இருந்து பார்த்துக் கொண்டார். ஞாயிறு காலை வந்து என்னைப் பார்த்து ஏதேனும் உணவு செய்து தந்துவிட்டு மீண்டும் கிளம்பி விடுவார்.
சுமார் ஒரு வருட காலத்திற்கு காலை இரவு என இரு வேளையும் சாப்பாடு அந்தக் கடையில்! மதிய சாப்பாட்டிற்கு தி.நகரில் என இரண்டு உணவகங்களை தேடிக் கண்டுபிடித்தேன். அதையும் கூடிய விரைவில் எழுதுகிறேன்.
அண்ணன் தம்பி என இரு சகோதரர்கள் அந்த உணவகத்தை நடத்துகிறார்கள். இரவு வேளையில் மூன்று இட்லி மற்றும் ஒரு ரோஸ்ட் அல்லது கோபி தோசை அல்லது பொடி தோசை என்பது என் உணவு. எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் எனக்காக மூன்று இட்லிக்களை தனியாக எடுத்து வைத்துவிடுவார்கள்.
சனிக்கிழமைகளில் ஒரு வெஜ் நூடுல்ஸ் & ரோஸ்ட் சாப்பிடுவேன். தொடர்ந்து அங்கேயே சென்று நன்கு பழகிவிட்டதால், சனி இரவு என்னைப் பார்த்தவுடன் உணவக உரிமையாளர் வெங்காயம் போடாம கேப்ஸிகம், கோஸ் தூக்கலா ஒரு வெஜ் நூடுல்ஸ் என்பார். பரிமாற வருபவரிடம் சில்லி சாஸ் மட்டும் பக்கத்துல வை, அதோட பெப்பர் தூள் டப்பாவையும் வை என்று அண்ணன் சொல்ல ஆரம்பித்தார்.
போரூர் பகுதியில் இருந்து வேறொரு பகுதிக்கு குடிமாறிப் போகும் வரை உணவகம் என்றால் அங்கு செல்வது மட்டுமே என்ற பழக்கம் வலுவானது.
சுத்தமான செய்முறை, குறைவான விலை, ருசி, கனிவான உபசரிப்பு, நா அறிந்து கெட்டிச்சட்னி தரும் குணம், வாடிக்கையாளர்களுடன் தன்மையாகப் பழகும் கடையில் இருப்பவர்களின் குணம் என அனைத்திலும் ஸ்கோர் செய்தார்கள்.
ஏறத்தாழ பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் போரூர் பக்கம் சென்ற போது, அவர்கள் கடை நினைவுக்கு வந்து போய் பார்த்தேன். மாஸ்க்கை விலக்கி கொஞ்சமாக முகத்தை காட்டியவுடன் உரிமையாளர் அண்ணன் என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டார். உணவகத்தின் உள்கட்டமைப்பு மேலும் சிறப்பான முறையில் மாறி இருந்தது. பரஸ்பர விசாரிப்புகள் முடிந்து உணவகம் பற்றி கேட்டேன்.
சீன வைரஸ், லாக் டவுன், லாக் டவுன் தளர்வு, அருகாமையில் உள்ள டிஎல்எஃப் கட்டிட்டத்தில் இயங்கி வந்த மென்பொருள் நிறுவனங்களின் பணியாளர் ஆட்குறைப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் என்னும் புதிய கலாச்சாரம்... இந்த காரணிகளால் வியாபாரம் குறைந்து இருப்பதாக சொன்னார். வழமையாக உணவருந்த வருபவர்கள் எப்போதும் போல் வருவதாகவும் தெரிவித்தார். சைவ உணவகம் வெஜிடேரியன் ரெஸ்டாரண்டாக மாறி இருக்கிறது.
இப்போதும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளில் மட்டுமே இயங்குகிறது. பத்து பேர் இருபது பேர் என மொத்த ஆர்டர்களுக்கு மதிய சாப்பாட்டை தயார் செய்து டோர் டெலிவரி செய்கிறார்கள்.
காலை இட்லி ஒன்று ஏழு ருபாய், வடை பத்து ரூபாய், பூரி செட், இடியாப்பம், கிச்சடி, அப்பம், தோசை மற்றும் பொங்கல் போன்ற பதார்த்தங்கள் ஒவ்வொன்றும் முப்பது ரூபாய் என சகாய விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.
மாலை இதே உணவு வகைகளுடன் 2 இன் 1 தோசை, 3 இன் 1 தோசை, மில்லட் தோசை, அடை அவியல், ஆலு பரோட்டா, சிலோன் பரோட்டா, வீச்சு என்று தினுசு தினுசாக பதார்த்தங்கள் தந்தும் அசத்துகிறார்கள்.
துரித உணவுகள் என்று பெயரில் மட்டும் சொல்லப்படும் பதார்த்தங்களிலும் வெரைட்டி காட்டி பட்டையை கிளப்புகிறார்கள்.
போரூர் பகுதியில் வசிப்பவர்கள், அப்பகுதிக்கு பிரயாணிப்பவர்கள் என சகல நண்பர்களும் சபரி நகர் இரண்டாவது மெயின் ரோடு, ஸ்ரீ ஐயப்பன் சந்நிதிக்கு எதிரே உள்ள “ஸ்ரீ ஐயப்பன் டிஃபன் சென்டருக்கு” சென்று கை நனைத்துத் திரும்புங்கள். சுவையான சத்தான உணவு மட்டுமல்ல, நமக்கு தரப்படும் உணவுக்கு பின்னே உள்ள சிறப்பான மனிதர்களையும் காணும் பாக்கியம் கிட்டும்.
உணவக உரிமையாளர் அண்ணனிடம் பேசி விடைபெறும் போது அண்ணன் “சாப்பிட்டு போங்களேன்” என்று சொன்னார்.
“வீட்ல செஞ்சு வெச்சுட்டாங்கண்ணே..”
“ஒரு நூடுல்ஸ் மட்டும் சாப்பிடுங்க... ஆனியன் இல்லாம கோஸ், கேப்ஸிகம் அதிகமா போட்டு...”
முன்பு நான் குடியிருந்த பகுதியின் அடையாளமே மாறி விட்டது. காலியாகக் கிடந்த இடங்கள் அனைத்தும் அப்பார்ட்மென்ட்களாகவும், கடைகளாகவும் அடியோடு மாறிப்போய்விட்டன. மாறாது அன்று போல் இன்றும் இருப்பது தஞ்சாவூர் ஜில்லாவாசியான உரிமையாளர் அண்ணனின் குணம் மட்டுமே!

Leave a comment
Upload