
மயிலாடுதுறை அருகே விளநகர் பகுதியில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான துறை காட்டும் வள்ளலார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அடுத்த மாதம் 4-ம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில், இக்கோயிலின் வடபுறத்தில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டுவதற்காக 10 அடியில் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது கோயிலின் உள்பிரகாரத்தை ஒட்டி, மிகப் பழமையான மெல்லிய செங்கற்களால் 4 அடிக்கு 4 அடி கொண்ட சுவர் இருப்பதை கண்டறிந்தனர். அந்தச் சுவரை உடைத்து பார்த்தபோது, அதற்குள் ஒரு நீண்ட சுரங்கம் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.
அதன் உள்ளே சுமார் 10 அடி தூரம்வரை சென்று பார்த்தபோது, அங்கு மற்றொரு மெல்லிய சுவர் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஓய்வுபெற்ற ஒரு தொல்லியல்துறை ஆய்வாளர் கூறுகையில், ‘தஞ்சையை ஆண்ட சோழர்களின் இளம் வாரிகளுக்கு போர் பயிற்சி உள்பட அனைத்து பயிற்சிகளுக்கும் இந்த ரகசிய சுரங்கப் பாதை பயன்பட்டு உள்ளது. மேலும் யுத்த நேரத்தில் அரசவம்சத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டால், இந்த கோயில் சுரங்கப்பாதை வழியே அவர்கள் தப்பிச் செல்வதற்கான முன்னேற்பாடாகவும் இச்சுரங்கப்பாதை பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்’ என தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a comment
Upload