

காவிரி மைந்தன்

ஒத்திகை பார்க்க வரவேற்பேன்!
அன்பே!
மனக்கோவில் சிலையாய் நீயும் எனக்குள்ளே அமர்ந்திருக்கும் மகராணியே! மலர்மாலை தினம் சூட்டி தரவேண்டுமா அர்ச்சனைகள் என்று கேட்டதற்கு, கவிமாலை போதும் என்று கண்ணசைவால் பதில் சொன்னாய்!
புத்தம் புதியதாய்.. உன் புகழ் பாடிடவே.. கற்பனை மேகங்களில் கொஞ்சம் தவழ்ந்து.. காற்று, மழை இவை யாவிலும் ஊர்வலம் கண்டு நீ போற்றும்வகையில் கவிமடல்கள் வரைந்திட நானும் கற்றுக் கொண்டேன்!!
சுகமும் சோகமும் சொந்தம் கொள்ளும் மனித மனம் காதலிலே விழுந்துவிட்டால் இந்தக் கலவை வந்து பற்றிக்கொள்ளும்!
இது மகிழ்ச்சியின் உச்சமா என்று முன்மொழிந்தால்.. சில நேரம் கவலை என்னும் வலையாகவும் இது மாறும்!
வாழ வந்தவள் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டே என்னை ஆளவந்தவளாய் மாறுகின்ற விசித்திரம் என்ன?
இதயத் தாமரையில் இதழ்கள் விரிப்பு எல்லாம் சிறப்பாய் நடப்பது எப்போது தெரியுமா.. உன் முகம் பார்த்து உறவாடி.. உயிரின் சுமையை உள்ளம் மறந்து உன் மடியில் தலை சாய்ப்பேனே அப்போது!!
தேவ சுகம் என்பதெல்லாம் இதுதான் என்று தேவியே உன்னிடம் நான் கண்டேன்! அதுவும் தேவைகள் அறிந்து சேவைகள் செய்வது உறவின் பெருமையல்லவா?
வாய் திறந்து பெண்மை சொல்லும் வழக்கமான ஒற்றைச் சொல்லும் அங்கே வந்து வந்து போகும்! வண்ணக் கனவை எண்ணம் சுமந்து சுகமாய் தாளம் போடும்!
எதையோ சொல்ல வாய் திறக்க.. அதையே சொல்லி நீ தடுக்க.. நெஞ்சங்கள் இரண்டும் சங்கமமாகும் திருக்கோலம் என்ன சொல்ல?
வற்றாத ஜீவநதி போல் நாளும் வளரும் காதல் மோகம்.. தொட்டால் மலரும் பூவாய் தொடங்கும் கதைகள் என்ன?
விரல் பட்டால் சிலிர்க்கும் பூவை.. விழிமலர் திறந்து விடைதரும் பார்வை என்வசமாகும்போது.. விடியும்வரை கதைபடிக்கும் படலம் தொடரும்!
அம்மம்மா.. என்று நீ மூச்சுவிடுவது ஆனந்தலஹரியாக.. அங்கேதான் தோன்றும் இன்பம் எப்படி வார்த்தையில் சொல்ல?
கயல்விழி ஜாலம் கிடைத்திடும்போது கவிதைக்கு ஊற்று பெறுவேனே!
புதுமொழி பயிலும் மாணவனாக உன்முன் நானும் நிற்பேனே!! அறிமுகம் ஏதும் இல்லா நிலையில் அரிச்சுவடியிலிருந்து தொடங்குவேனே!
கிளிமொழி பேசும் காதலியின் அடிமனம் தொட்டுப் பாடிடுவேன்!
அன்பின் சுவாசம் இனி வேண்டும் என்றே அனுதினம் அடைக்கலமாகி வென்றிடுவேன்!
இதுவரை நடந்த நாடகத்தை மறு ஒத்திகை பார்க்க வரவேற்பேன்!
இனித்திடும் இரவுகள் இன்று முதல் என்று உன் இருவிழிவாசலில் எழுதிவைப்பேன்!!
எதுவரை இன்பம் எனக்கேட்டால்.. நம் உயிர்வரை பயணம் தொடரட்டுமே!!

Leave a comment
Upload