
ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் அவர்களின் சொற்பொழிவுகளை, உபன்யாசங்களை, அறிவுரைகளை, அனுகிரக பாஷியங்களை தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற நூல் வெளிவந்துள்ளது. திரு இரா. கணபதி அவர்கள் மிகவும் அருமையாக தொகுத்து உள்ளார். அதனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்களையும் மற்றும் சில அனுபவ விஷயங்களையும் நாம் வாரம் தோறும் பார்த்து வருகிறோம்.
அகமும் புறமும்...
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருத்தரும் ஓயாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். எதற்காக? ஏதோ ஒரு ஆசையை பூர்த்தி செய்வதற்காக. வெளியில் இருக்கும் பொருட்களின் மூலம் கிடைக்கும் சந்தோஷத்திற்காக. அந்தப் பொருட்கள் மீது இவனுக்கு ஆசை. அந்த பொருட்களை அடையவே ஓடுகிறான். அந்த பொருட்களின் மூலம் கிடைக்கும் சுகம் தீர்ந்து போனவுடன் மற்றொரு பொருளை தேடி அலைகிறான். அந்த வெளியில் இருக்கிற வஸ்து கிடைத்தால் மட்டுமே அவனுக்கு சந்தோஷம். அதனால் தான் அதனை துரத்திக் கொண்டே இருக்கிறான். இப்படி துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு எப்படி மன அமைதி கிடைக்கும்?!
வெளியில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் மீது நாம் வைக்கும் பற்று எப்போதுமே நிரந்தரமானதல்ல. அந்த பொருள் நம் வசம் எப்போதும் இருப்பதில்லை. அதனால் நமக்கு என்றுமே திருப்தி கிடைக்கப் போவதில்லை. நம்மிடத்தில் இல்லாத ஒரு பொருளை நாம் தேடும் போது அதன் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சில சமயங்களில் அந்தப் பொருள் நமக்கு கிடைத்து விட்டது என்று நாம் எண்ணும் போதே அது நம் கையை விட்டுப் போகும். இதுபோன்ற விஷயங்களால், அந்த ஆனந்தம் நமக்கு எப்போதும் நிலைப்பதில்லை. மாறாக நமது மன நிம்மதியைக் கெடுக்கிறது. ஒரு மனிதன் ஏன் சதாசர்வ காலமும் ஏதோ ஒரு ஆனந்தத்தை தேடி அலைகிறான்? காரணம்.. அந்த ஆனந்தம் அவனுக்குள்ளே பரிபூரணமாக இருப்பதால்தான். தனக்குள் இருக்கும் ஆனந்தத்தால் தான் வெளியிலும் அந்த ஆனந்தத்தை தேடுகிறான்.
இந்த ஆனந்த சொரூபம் நமக்கு மாயையால் தான் ஏற்பட்டது என்பதை அவன் உணர்வதில்லை. இருந்தாலும் அவனுடைய சுபாவம் ஆனந்தமயமாக இருப்பதனால் மேலும் அந்த ஆனந்தத்தை வெளியில் உள்ள பொருட்களிள், வெளியுலகில் தேடுகிறான். எப்படியாவது ஏதாவது ஒரு ஆனந்தத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனிடம் எப்போதும் இருக்கிறது. மனிதர்களில் யாராவது ஆனந்தத்தை தேடாமல் துக்கத்தை தேடியது உண்டா? அவர்கள் தேடும் அந்த ஆனந்தம் அவர்களுக்கு உள்ளேயே இருக்கிறது என்பதை உணராமல், அதை முழுதாக அனுபவிக்காமல் வெளியே அந்த ஆனந்தத்தை தேடி மனநிம்மதி இழக்கிறார்கள். தன்னுடைய உண்மையான சொரூபம் என்ன என்று ஒருவன் அம்பாளின் கிருபையால் பிரார்த்தித்து ஆத்ம விசாரம் செய்து தியானம் செய்து பார்த்தால், தானே பூரண ஆனந்தமான வஸ்து என்று தெரிந்து கொள்வான் என்கிறார் ஸ்ரீ பகவத்பாதாள்.
மனிதனின் சுபாவம் இயல்பாகவே மகா சமுத்திரம் போல் ஆனந்த மயமாக இருப்பதால், வெளியுலகில் அவன் எந்தப் பொருளின் மீதும் ஆனந்தத்தை அடைந்தாலும், தேடினாலும் அது ஒரு பிடி மண்ணுக்கு சமமானது மட்டுமே. இதை ஒருவன் உணர்ந்துவிட்டால்... அவன் வெளி உலகில் ஆனந்தத்தை எந்த பொருளின் மீதும் தேட மாட்டான். சமுத்திரம் இருக்கிற இடத்திலேயே அதன் கரையை விட்டு கூட வெளியே வராமல், தான் நகராமல் இருந்தாலும், நதிகள் எப்படி ஓடிச்சென்று அதனோடு கலக்கிறதோ... அப்படியே மனிதனிடம் ஆசைகளும் வந்துவிடுகிறது. சமுத்திரத்தில், நதிகள் கலந்து கரைந்து மறைவது போல் மனிதரிடமும் இந்த ஆசைகள் மறைந்து விடுகிறது. மிகப்பெரிய தேவேந்திர பதவி கிடைத்தால் என்ன ஒரு ஆனந்தம் கிடைக்குமோ... அது கூட நமக்குள் இருக்கும் ஆனந்தத்தை ஒப்பிடும்போது கடலில் ஒரு துளி தான் என்கிறார் ஸ்ரீ பகவத்பாதாள்.
பணம், பதவி, பெண், கௌரவம், புகழ்ச்சி, மரியாதை, விளம்பரம்... இவை அனைத்தும் வெளியில் இருந்து நமக்கு கிடைக்கும் என்று நாம் எண்ணி ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். அவைகள் அத்தனையும் சமுத்திரமாக இருக்கிற நமக்கு ஒரு சொட்டு தண்ணீருக்கு சமம். இவைகளின் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை விட, நமக்குள் இருக்கும் ஆனந்தம் மிகப்பெரியது. வெளியில் உள்ள ஒரு பொருள் நமக்கு கிடைக்காமல் போனால், அதனால் நமக்கு எந்த குறையும் வருவதில்லை. அதற்காக நாம் வருத்தப்பட்டால் அது மிகப்பெரிய தவறு. நமக்கு குறை என்ற ஒன்று என்றுமே கிடையாது. நமக்குள் நாம் பூரண வஸ்துவாக இருக்கிறோம். நமக்கு அந்நியமான வெளியுலக பொருள் என்ற ஒன்று இல்லவே இல்லை. வெளியிலே கிடைக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம்.
வெளியுலகில் உள்ள பொருட்களிலிருந்து ஆனந்தம் போன்று சுகமான எவை வந்தாலும் வரட்டும், அவைகள் நமக்குள் இருக்கும் பேரண்டத்தோடு கலக்கும் போது, சமுத்திரத்தில் நதிகள் கடலில் கலப்பது போல் நம்மோடு கலக்கும். அந்த சமுத்திரம், நதிகளை அடக்கிக் கொள்வது போல் அவற்றையும் நாம் உள்ளே இருக்கும் ஆனந்தத்தோடு சேர்த்துக் கொள்வோம். எதுவும் வரவில்லையா, பரவாயில்லை... அதனால் எந்த பாதகமும் இல்லை. எதுவும் கிடைக்காததனால் நமக்கு எந்த குறையும் கிடையாது. நமக்குள்ளேயே இருக்கிற பரமாத்மா என்கிற ஆனந்தம், வஸ்துவின் சிறு சிதறல்கள் தான் வெளியில் இருப்பதெல்லாம் என்கிற தெளிவோடு நாம் எப்போதும் இருக்க முயல்வோம்.
ஓவியம்: ரம்யா மணி

Leave a comment
Upload