தொடர்கள்
கதை
முதுகுக்கு பின்-எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

20230217231913873.jpeg

இந்திரஜித் தனது மடிகணினியில் புதிய சிறுகதை ஒன்றை டைப்பினான்.
சிறுகதையின் தலைப்பு – ‘படுக்கை அறையில் ஒரு ஆணும் இருபதாயிரம் பெண்களும்.’ 1500
வார்த்தைகளில் கதையை முடித்துவிட்டு எழுந்தான். எழுந்தவன் இருகை விரல்களில் நெட்டி முறித்தான். அறை முழுக்க குதித்தபடி பாலே நடனமாடினான்.
திடீரென்று குரல் உயர்த்தி கத்தினான். “டேய் இந்திரஜித்து! உன்னை அடிச்சிக்க ஆளே கிடையாதுடா. உலகத்தின் பெஸ்ட் ரைட்டர் நீதான்டா. உன்னை மாதிரி எழுத்தாளன் முன்ன பிறந்ததும் இல்லை இப்ப வாழ்ந்திருக்கவும் இல்லை இனி பிறக்கப்போவதும் இல்லை. எப்டிர்ரா எப்டிர்ரா…. தமிழ்மொழி வார்த்தைகள் எல்லாம் கைய கட்டி வாயை பொத்தி உனக்கு முன்னாடி வரிசை கட்டி நிக்குது. நீ ஒரு எழுத்து பேரரசன். மற்ற எழுத்தாளர்கள் எல்லாரும் உனக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்கள்!”
கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. சுவர் கடிகாரத்தை பார்த்தான். மணி
நள்ளிரவு 12.50
யோசித்தபடி போய் கதவை திறந்து விட்டான் இந்திரஜித்
எதிரில் ஒரு கனத்த எண்பது வயது மனிதர் நின்றிருந்தார். தலையில்
திரிதிரியாய் ஜடா முடி. கம்பிளிபூச்சி புருவங்கள். அழுக்கடைந்த தாடி
கோமாளிகளின் செயற்கை மூக்கை போன்ற மூக்கு. கழுத்தில் உத்திராட்சங்கொட்டை
மாலைகள். நெற்றியில் விபூதிபட்டை விபூதிபட்டை நடுவே குங்குமம். காவி ஜிப்பா
காவி வேட்டி.
“யார் நீங்க?”
“என் பெயர் மாசாணி மாணிக்கம்…”
“உள்ளே வாங்க!”
உள்ளே வந்தார். மகிழம்பூ போல் மணத்தார்.
“ஓம் ரீம் கரீம்.. ஜலபுலஜங்… என்னை எதிர்த்தவங்க வாயில் மண்!” தனது
வாய்க்குள் துழாவி ஒரு லிங்கத்தை எடுத்துக் கொடுத்தார்.
எச்சிலாக இருந்தாலும் வாங்கிக் கொண்டான்.
“நீ எழுத்தாளன் தானே?”

“ஆமாம்!”
“உலகத்லயே பெஸ்ட் எழுத்தாளன் நீதான் என நினைத்துக் கொண்டிருக்கிறாய்
இல்லையா?”
“ஆமாம்.. உண்மையும் அதுதான்..”
“ஒரு மிகச் சாதாரண நட்சத்திரத்தின் மிகச்சிறிய கிரகத்தில் வாழும் சற்றே
முன்னேறிய குரங்கினம்தான் நாம் என்றார் ஸ்டீபன் ஹாக்கிங். அப்படி பார்த்தால்
உலகத்திலேயே சிறப்பாய் எழுதும் எழுத்தாளக்குரங்கு நீதான் என்கிறாய்!”
“குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதனை நான் ஒப்புக்கொள்ளவில்லை.
ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னதெல்லாம் வேதவாக்கா என்ன?”
“நீ உலகத்தின் பெஸ்ட் எழுத்தாளர் என்பதனை சகஎழுத்தாளர்கள் ஏற்றுக்
கொள்கிறார்களா?”
“சிலர் ஏற்றுக் கொள்கிறார்கள் பலர் ஏற்று கொள்வதில்லை!”
“மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?”
“சிலர் ஏற்றுக் கொள்கிறார்கள் பலர் ஏற்றுக் கொள்வதில்லை!”
“மீடியாகாரர்கள்?”
“ஆதரவு பாதி எதிர்ப்பு பாதி!”
“உன் குடும்பத்தினர்?”
“அவர்கள் என் பக்தர்கள் என்னை கடவுளாக பார்க்கிறார்கள்..”
சிரித்தார் மாசாணி மாணிக்கம்.
“நான் உனக்கு ஒன்று பரிசளிக்க விரும்புகிறேன்!”
“நீங்கள் யார்? என்னை ஏன் பார்க்க வந்தீர்கள்? எனக்கேன் நீங்கள் பரிசளிக்க
வேண்டும்?”
“கேள்விகளைக் குறை”
“சரி கொடுங்கள்… வாங்கிக் கொள்கிறேன்!’
இருகைகளையும் இந்திரஜித்துக்கு முன்னே நீட்டினார். இரு உள்ளங்கைகளை
குவித்து மூடினார். மந்திரங்களை முணுமுணுத்தார். வலது உள்ளங்கையை திறந்தார்.
அங்கே சோப் டப்பா போன்ற வஸ்து இருந்தது. ஈஸ்ட்மென் நிறங்களில்
மினுக்கியது.
“இது சரோஜாதேவி உபயோகித்த சோப் டப்பாவா?”
“கிண்டல் செய்யாதே. உலகத்தில் மனிதர்கள் பேசும் பேச்சுகளை இரு
வகைகளாக பிரிக்கலாம். ஒரு மனிதனின் முகத்துக்கு நேராக ஒரு மாதிரி
பேசுவார்கள். ஒருமனிதனின் முதுகுக்கு பின் வேறொரு மாதிரி பேசுவார்கள்.
இரண்டுமே ஒண்ணுக்கு ஒண்ணு உல்ட்டா புல்ட்டாவாக இருக்கும். முகத்துக்கு நேரே
பேசும் பேச்சில் பொய்புகழ்ச்சியும் எதிராளியை மகிழ்ச்சி படுத்தி ஆதாயம் காணும்

போக்கும் 0.001சதவீதம் உண்மையும் புரண்டோடும். முதுகுக்குபின் பேசும் பேச்சில்
அவதூறு பொறாமை 99.999 சதவீத உண்மை வஞ்சபுகழ்ச்சி பொங்கி பீரிடும். இந்த
கருவி உன் முகத்துக்கு நேரே பேசுபவர்கள் உன் முதுகுக்கு பின் என்ன
பேசுகிறார்கள் என்பதை விடியோ கிளிப்பிங்காக காட்டிடும்!”
“இந்த கருவி எனக்கெதுக்கு?”
“முகத்துக்கு நேராக கோடிரூபா பெறும் பொருள் முதுகுக்குபின் முக்காதுட்டு
பெறாது. உண்மையில் நீ யார்? உன் எழுத்தின் வன்மை என்ன? உன்னை பற்றியான
வெகுஜன அபிப்ராயம் என்ன? இப்படி எல்லா விஷயங்களையும் தெரிந்து தெளிவு
பெறலாம் நீ!”
“இதற்கு நான் எதாவது பணம் தரவேண்டுமா?”
“இல்லை இதற்கு நீ பத்து பைசா தரவேண்டாம்..”
“மகிழ்ச்சி!’‘
“நான் புறப்படுகிறேன் இக்கருவி விடியற்காலை ஆறுமணியிலிருந்து வேலை
செய்ய ஆரம்பிக்கும் ஜெய் மாசாணியம்மா!”
மாசாணி மாணிக்கம் கிளம்பிப் போனர்.
காலை.
மனைவி காமாட்சியை அழைத்தான் இந்திரஜித் “இதோ வரேங்க..”
“காபி கொண்டு வா!”
பவ்யமாய் மனைவி சமையலறைக்கு போக கருவி வேலை செய்ய
ஆரம்பித்தது. அதில் காமாட்சி “நைட்டெல்லாம் முழிச்சிருந்து கண்ட கருமாந்திரத்தை
எழுதுது. பைசாவுக்கு பிரயோஜனமில்லை. தலை முழுக்க டன் கணக்கில்
தற்பெருமை. ஆறிலிருந்து அறுபது வரை எந்த பொம்பிளைய பாத்தாலும் ஜொள்ளு
விடுறது. காபியை கொண்டா கீபியை கொண்டன்னு மொட்டை அதிகாரம் வேற.
இருடி காபில இருபது வயித்தால போற மாத்திரை கலந்து தரேன். கரடி குட்டி
மாதிரி இருந்துக்கிட்டு ஆணழகன் பில்டப் குடுக்றது. இந்த பொழைப்பு
பொழைக்கிறதுக்கு பதில் தபால் ஆபிசில உக்காந்து யாருக்காவது லட்டர் எழுதிக்
கொடுத்து அஞ்சு பத்து சம்பாதிக்கலாமில்ல? கழிசடை தீவட்டி தெண்டபுண்ணாக்கு!”
மனைவி இந்திரஜித்தை கழுவிகழுவி ஊற்றினாள்.
முகத்தை துடைத்துக் கொண்டான் இந்திரஜித்.
கை துறுதுறுத்தது.
இந்திரஜித்துக்கு ஒரு அல்லக்கை எழுத்தாளன் துணை. இந்திரஜித்தின்
புகழ்பாடுவதே அதன் வேலை.

எதிர்முனை உயிர்த்தது “சொல்லுங்க தமிழுக்கு மட்டன் பிரியாணி ஊட்ட வந்த
ஆசானே… தமிழின் ஊட்ட எழுத்தே…”
“ரொம்ப புகழாதாடா எஸ்விஎஸ்!”
இந்திரஜித்தின் முதுகுக்கு பின் எஸ்விஎஸ் பேசும் விடியோ கிளிப்பிங்
பார்வையானது. “இவன் ஒரு சுண்டைக்காய் எழுத்தாளன். சிலருக்கு மண்டை
கொழுப்பு மண்டைல கொஞ்சமா இருக்கும். ஆனா எண்பது தொண்ணூறு கிலோ
மண்டைக் கொழுப்பே இந்திரஜித்தா மாறி நிக்குது. இலக்கண பிழை இல்லாம சுத்த
தமிழ்ல நாலுவரி எழுத தெரியாது இந்த கழுதைக்கு. இதுகிட்ட நான் ஒட்டிக்கிட்டு
இருக்கிறதே இது அப்பப்ப வாங்கித்தர்ற சரக்குக்காகதான்!”
யூ ட்யூப் சானலில் இருந்து ஒருவர் இந்திரஜித்தை அழைத்தார்.
“எழுத்தாளர்களின் வாத்தியாரே வணக்கம். இன்னைக்கி சாயந்தரம் உங்க
நேர்காணலை வச்சுக்குவமா? நாலு பாகங்களா போட்ருவோம்!”
“சரி!”
முதுகுக்குபின் அந்த யூட்யூப்பர் பேசுவது பார்வையானது. “இந்த எழுத்தாளன்
கீமான் மாதிரி ஒரு சர்ச்சை பார்ட்டி. ஒரு டுபாக்கூர். ஒரு ரீல் மாஸ்டர். சுஜாதா,
வாண்டுமாமா, தி.ஜானகிராமன், ராகி ரங்கராஜன், ஜரா சுந்தரேசன், வாஸந்தி, அம்பை
இவர்களின் கால்தூசி பெற மாட்டான் இவன். இந்த இந்திரஜித் பேட்டில ஏறுக்கு
மாறா நாலு கருத்து சொல்வான். இவனோட கோமாளி கூத்தை பார்க்க சந்தாதாரர்கள்
கூடுவர்!’‘
அவமானம் இந்திரஜித்தை பிய்த்து தின்றது.
வாசகர்களின் முதுகுக்கு பின் கருத்துகள் இதோ-
‘இந்த இந்திரஜித் ஓட்டை பானைக்குள் நண்டை விட்டமாதிரி சலம்புவார். இந்த
தமுக்கடிக்ற ஆளை நாங்க படிக்கிறதில்லை’
‘பெண்கள் படிக்காத ஆதரிக்காத எழுத்து நிற்காது. பெண்களுக்கும் இந்திரஜித்
எழுத்துக்கும் உள்ள தூரம் சென்னைக்கும் அலாஸ்காவுக்கும் இடையே உள்ள தூரம்!’
‘எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் மாதிரி லாபி பண்ண ஆரம்பிச்சிட்டான்க.
லாபி பண்றதில இந்திரஜித் ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ டைப்’
மாலை ஆறுமணி. கடந்த 12மணிநேரத்தில் 2678 முதுகுக்கு பின் பதிவுகள். ஒரு
பதிவு கூட இந்திரஜித்தை துளி பாராட்டடவில்லை. எல்லாம் எதிர்மறை
விமர்சனங்கள்தான். கொதித்து போயிருந்தான் இந்திரஜித்.
இந்த பின்னூட்டங்களிலிருந்து ஒரு துளியும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை
இந்திரஜித். மாசாணி மாணிக்கம் கொடுத்து போன கருவியை முகத்துக்கு நேராக
வைத்து நெற்றிக் கண்ணை திறந்தான் இந்திரஜித்.

‘எனக்கு முதுகுக்கு பின் பேசுபவர்களை பற்றி எனக்கு கவலையில்லை.
முகத்துக்கு நேராக பேசுவதே போதும். இந்தக் கருவி என்னை பிடிக்காத யாரோ
செஞ்ச சதி வேலை. இனி ஒரு நிமிஷம் இதனை நான் வைத்திருக்க மாட்டேன்!’
தீயில் வீசினான் இந்திரஜித். ‘நீ ஒரு கோயாபல்ஸ். நீ ஒரு தற்புகழ்ச்சி
குடோன். நீ ஒரு அறியாமை பெட்டகம். கலாபமயில்களின் முன் ஆடும் வான்கோழி
நீ!’ சபித்தபடியே கருவி வெடித்து கருகி சாம்பலானது.