தொடர்கள்
கதை
கோடை விடுமுறை - சத்யபாமா ஒப்பிலி

2023032207001341.jpeg

(AI வரைந்த படம்)

" அம்மா, கோடை விடுமுறைனா என்ன?"

அவிழ்ந்து விழும் ட்ரவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டே ஓடிவரும் தன் மகனைப் பார்த்தாள் தனம்.

" அது, உனக்கு முழு பரிட்சை முடிஞ்சா லீவ் விடுவாங்க இல்ல அதுதான்."

" எல்லாரும் ஊருக்கு போவாங்களா?"

" போக இடம் இருக்கறவங்க, காசு இருக்கறவங்க போவாங்க" மெதுவாக சொன்னாள்

புரியாமல் முழித்த தன் மகனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே,

" நீ விளையாட போல?" என்று கேட்டாள்.

" அங்க, சங்கரு, அவன் மாமா வீட்டுக்கு போறானாம், ராசு, அவன் அத்தை வீட்டுக்கு போறானாம். நீ எங்க போறன்னு கேட்டாங்க. கேட்டு சொல்றேன்னு சொன்னேன்"

பாத்திரம் கழுவி கொண்டிருந்த கைகளை அருகில் இருக்கும் வாளி நீரில் முக்கி எடுத்து, பின் புடவையில் துடைத்துக்கொண்டு, தன் மகனை அருகில் இழுத்தாள். தன் தாலி கயிறில் தொங்கும் ஒரு பின்னை எடுத்து அவன் ட்ரவுசரை இறுக்கி சரி செய்தாள்.

"அவங்க கிட்ட போய் குத்தாலம் போகப் போறேன்னு சொல்லு" என்றாள்.

"குத்தலாமா? அது எங்கம்மா இருக்கு? அங்க யாரு இருக்கா?"

" அதெல்லாம் அப்பொறமா சொல்றேன். இப்போ நீ போய் விளையாடு" என்று அவனை முதுகில் தட்டி அனுப்பி வைத்தாள்.

தனத்திற்கு ஒரு மகள், ஒரு மகன். மகளுக்கு பத்து வயதாகிறது. மகனுக்கு ஆறு வயது. அவள் கணவன், மாரி, சற்று வித்யாசமானவன். அதிகம் பேசமாட்டான், என்ன வேலை குடுத்தாலும் செய்வான், பொய் சொல்லவோ, ஏமாற்றவோ தெரியாது. குழந்தைகளை அழகாக கவனித்துக்கொள்வான். ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. அனால், ஏனோ அவனால் ஒரு வேலையிலுமே, ஸ்திரமாக இருக்க முடியவில்லை.

தனம், நாலு வீட்டில் வேலை செய்தும், மாரி குடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டும் கடன் வாங்காமல் குடித்தனம் செய்யப் பழகி இருந்தாள்.

இந்த கோடை விடுமுறை என்பது சிறுவயதிலிருந்தே அவளுக்கு கிடைக்காத ஒன்று. எல்லா நாளும் ஒரே நாள் தான். அவளுக்கு என்றுமே சொல்லிக்கொள்ளும் படி உறவு இருந்ததே இல்லை. ஊருக்கு போக ஒரு தூண்டுதலும் கிடையாது, கையில் பணம் இருந்ததும் கிடையாது. அவள் தாய் வேலை பார்த்துக்கொண்டிருந்த இடத்தில் அவர்கள் குற்றாலம் போவது பற்றி பேசிக்கொண்டிருந்தனர். போய் விட்டு வந்த பிறகும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். அப்போதிலிருந்தே அவளுக்கு குற்றாலம் போக ஒரு ஆசை. யாருக்கும் தெரியாமல், சிறிது சிறிதாக ஒரு ஐந்தாயிரம் சேர்த்து வைத்திருந்தாள். அவள் மகன் கோடை விடுமுறை பற்றி சொன்னதும், அடி மனதில் இருந்த அவள் ஆசை மேலெழும்பி, குற்றாலம் போகலாம் என்று முடிவு செய்துவிட்டாள்.

இரவு குழந்தைகள் தூங்கிய பின் கணவனிடம் சென்று குற்றாலம் செல்லும் தனது திட்டத்தை சொன்னாள்.

"காசு?" என்றான்.

தன்னிடம் இருக்கும் பணத்தைப் பற்றி சொன்னாள்.

"இப்போ தண்ணி இருக்குமா?" சந்தேகத்துடன் கேட்டான்.

" அதான், நல்ல மழ பெஞ்சுட்ருக்கே கொஞ்ச நாளா! போய் தான் பாப்போம்."

"தண்ணி இல்லன்னா, குழந்தைங்க வருத்தப்படுமே!"

"தண்ணி இருக்கும். போகலாம்!" ஆணித்தரமாய் சொன்னாள்.

மேலே எதுவும் பேசாமல் "சரி" என்று தலை ஆட்டிவிட்டு உறங்கச் சென்றான்.

அவள் ஊரிலிருந்து பேருந்தில் சென்றால் இரெண்டு மணி நேரம் குற்றாலம். பருவ காலத்தின் போது சாரலை அனுபவித்து இருக்கிறாள். ஒவ்வொரு வருடமும் "நான் வருவேன் நான் வருவேன்" என்று சொல்லுவாள் அந்த சாரலிடம்.

மறுநாள் காலையில் எழுந்து தன் கணவனிடம், குற்றாலம் செல்லும் பேருந்தின் நேரம் விசாரித்து வரச்சொன்னாள்.

பின், பெட்டியிலிருந்து கடந்த தீபாவளிக்கு எடுத்த குழந்தைகள் துணியை எடுத்து ஒரு பையில் வைத்தாள். தனக்கு வேண்டிய ஆடைகளும், கணவனின் ஆடைகளும் எடுத்து அந்த பையில் வைத்துத் திணித்தாள். ஒரு ஜிப் போட்ட பை இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக் கொண்டாள். இதுவரை அதன் அவசியமே வந்ததில்லை.

அவளைக் கவனித்துக்கொண்டே வந்த மாரி, சற்று யோசித்து நின்று பின் வேகமாக திரும்பி வெளியே சென்றான். ஒரு அரை மணியில் ஜிப் போட்ட ஒரு புது பையுடன் வந்தான்.

"இது எப்படி வாங்கினீங்க?" ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

"என் கிட்ட கொஞ்சம் பணம் இருந்தது" என்று சொல்லி சில பலகார பொட்டலங்களையும் எடுத்து அவளிடம் குடுத்தான்.

மறுநாள் காலையில் ஆறு மணி பேருந்தில் ஏறினால், 8.30 மணிக்கு போய் சேர்ந்து விடலாம். என்று கூறி விட்டு, மறுபடியும் வெளியே சென்றான்.

குழந்தைகளிடம் ஊருக்கு போவதை சொல்லி விட்டு மறுநாள் காலைக்காக காத்திருந்தாள் தனம்.

மனதிற்குள் அந்த சாரலின் குளிரும் வாசமும் அடித்துக்கொண்டே இருந்தன.

திட்டமிட்டபடி எல்லாம் நடந்தன. 8,30 மணிக்கு குற்றாலத்தில் கால் வைக்கும் போது மனம் லேசாகி இருந்தது. இந்த மண் வாசம், தூறல், சல சல வென்று தண்ணீரின் சத்தம். அவளுக்கு,குற்றாலம் தன்னை ஏமாற்றவில்லை என்று புரிந்தது. இல்லையென்றால், பங்குனி, சித்திரையில் ஏது இத்தனை தண்ணீர்! சிறு வயதில் அவள் அம்மா வேலை பார்த்த வீடு ஞாபகம் வந்தது, அவர்கள் குற்றாலத்தை கொண்டாடியது ஞாபகம் வந்தது. தானும் அதே இடத்தில் தன் குடும்பத்துடன் நிற்கிறோம் என்பதே அவளுக்கு நம்ப முடியவில்லை. கோடைகால விடுமுறை தனக்கும் அமையும், ஒரு வித்யாசமான அனுபவம் கொடுக்கும் என்று தனம் நினைத்ததில்லை. குழந்தைகளைப் பார்த்தாள். இருவரும் தந்தையின் கைகளைப் பற்றிக்கொண்டு பொங்குமாங்கடலை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். கைகளை தூக்கி மலையையும், அருவியும் கும்பிட்டு விட்டு அவர்கள் அருகே போய் நின்று கொண்டாள்.

யாரோ ஒரு பெண் அவர்கள் அருகில் வந்து, "தம்பி, நீங்க இந்த ஊரா?, கோவிலுக்கு எப்படிப் போகணும்?" என்று கேட்டாள்

மாரி, தனத்தைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகை செய்து விட்டு,

"இல்லைங்க. எனக்குத் தெரியாது. நாங்க கோடை விடுமுறைக்கு வந்திருக்கோம்!" என்று சற்று அழுத்தமாகச் சொன்னான்.

கண் கலங்கி மாரியைப் பார்த்து தலை அசைத்து ஆமோதித்து விட்டு, அங்கேயே தரையில் அமர்ந்தாள்.

தன் குழந்தைகளை இழுத்து மடியில் வைத்துக்கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக குற்றாலத்தை உள் வாங்க ஆரம்பித்தாள்.

அத்தனை எளிதில் கிடைப்பதில்லை அனைவருக்கும் கோடை விடுமுறை!