தொடர்கள்
பொது
போலீஸ் எஸ்.ஐ. கெஞ்சிய வைரல் வீடியோ ! மாலா ஶ்ரீ

20230322090346349.jpeg

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை சரகத்துக்கு உட்பட்ட பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்ப்பவர் பரமசிவம். இவர் பணி நேரம் போக, ஓய்வு நேரங்களில் பல்வேறு சமூகசேவை பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இதற்கிடையே பென்னலூர்பேட்டை ஊராட்சி, திடீர் நகரில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகள் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு அனுப்பப்படுவதில்லை என எஸ்ஐ பரமசிவத்துக்குத் தகவல் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அவர் கடந்த சில நாட்களாக திடீர் நகர் பகுதிக்கு அடிக்கடி சென்று, அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களிடம், ‘‘உங்களின் குழந்தைகள் படித்து முன்னேறுவதற்கு பள்ளிக்கு தயவுசெய்து அனுப்புங்கள். அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்…’’ என்று அப்பகுதி பெண்களிடம் வலியுறுத்தி வந்திருக்கிறார். இதற்கு அப்பகுதி ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், தன்னிடம் எதிர்ப்பு காட்டிய ஆண்களிடமும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கிய பெண்களிடமும், ‘‘தங்களின் குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு காவல்துறை 24 மணி நேரமும் தயார்நிலையில் உள்ளது. உங்களுக்கு கூப்பிடு தூரத்திலேயே காவல் நிலையம் அமைந்துள்ளது. அங்கு பள்ளி கட்டணம், சாப்பாடு, கணவர் உள்பட பல்வேறு தரப்பினரால் பிரச்னை என எதுவாக இருந்தாலும், அவற்றை தீர்ப்பதற்கு போலீசார் உதவியாக இருப்பர்.

இதுதவிர, பள்ளிக்கு சென்றால் தங்களின் குழந்தைகள் பசியோடு இருக்குமோ என கவலைப்பட வேண்டாம். அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு 5 நாட்களில் முட்டையும், 2 நாட்களுக்கு இயற்கை தானிய உணவு பொருட்களும் சாப்பிடுவதற்கு வழங்கப்படுகிறது. எனவே, உங்கள் வீட்டு பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு, யார் காலில் விழுந்தாவது உதவி செய்கிறேன்.

மத்திய அரசின் சர்வசிக்சான் அபியான் திட்டத்தில், 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி வழங்கப்படுகிறது. எனவே, உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால், பெற்றோரே குற்றவாளி ஆவர். தப்பு செய்பவர்களைகூட விட்டுவிடலாம். ஆனால், குழந்தைகளுக்கு கல்வி தர மறுப்பவர்களை விட்டுவிட முடியாது. தப்பான மூடநம்பிக்கையால், உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்காதீங்க…’’ என கெஞ்சி கதறி, அப்பகுதி மக்களிடம் எஸ்ஐ பரமசிவம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் பல்வேறு சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி பென்னலூர்பேட்டை ஊராட்சியில் எஸ்ஐ பரமசிவத்தின் தன்னலமற்ற பொது சேவையை பாராட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இவரை போலவே பல்வேறு காவல்துறை அதிகாரிகளும் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.