தொடர்கள்
அரசியல்
உத்திர பிரதேசம் ! துப்பாக்கி கலாச்சாரம் ஊடுருவிய மாநிலம் - மாலா ஶ்ரீ

20230322090840662.jpeg

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நீண்ட காலமாக இரு வகுப்பினரிடையே மோதல் நிலவி வருகிறது. இதில் இருதரப்பினரும் துப்பாக்கிகளை பயன்படுத்தியே மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும், இதுவரை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்கி வருகின்றனர். இதுதவிர, நடுத்தர ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போலீசாருக்கு ‘சைடு டிஷ்’ போல கொடுமை!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் ஆதிக் அகமது. இவர், பிரபல மாபியா கும்பலின் தலைவரும் முன்னாள் எம்பி. இவர்மீது கொலை உள்பட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன்சமாஜ் எம்எல்ஏ ராஜுபால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் ஆதிக் அகமது முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். இவ்வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ்பால் என்பவர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதில் ஆதிக் அகமது, தலைமறைவான அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இருவரையும் பிடித்து கொடுத்தால் ₹5 லட்சம் பரிசு என உ.பி. போலீஸ் அறிவித்தது.

20230322091002800.jpg

இதற்கிடையே கடந்த 13-ம் தேதி ஜான்சியில் மாநில அதிரடிப் படையினர் என்கவுன்டரில் ஆதிக்கின் மகன் ஆசாத், அவரது கூட்டாளி குலாம் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். பின்னர் வக்கீல் உமேஷ்பால் கொலை வழக்கில் ஆதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் ஒவ்வொரு முறை மருத்துவ பரிசோதனைக்கு செல்லும்போது, அங்கு போலீசாரின் முன்னிலையில் பத்திரிகை மற்றும் டிவி நிருபர்களுக்கு பேட்டியளிப்பது வழக்கம். இதேபோல் கடந்த 15ம் தேதி இரவு மருத்துவ பரிசோதனை முடிந்து வெளியே வந்த ஆதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகிய இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது நிருபர்களுக்கு இடையே ஊடுருவியிருந்த மர்ம கும்பல் இருவரையும் 20 முறை துப்பாக்கியால் சரமாரி சுட்டு கொன்றது. இதுதொடர்பாக லவ்லேஷ் திவாரி, மோஹித் (எ) சன்னி, அருண் மவுரியா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து கடந்த திங்களன்று (17-ம் தேதி) மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட ஆதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோரின் சடலங்கள், ஏற்கெனவே போலீஸ் என்கவுன்டரில் பலியான ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத்தின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆதிக் அகமதுவின் மனைவி ஷைஸ்தா பர்வீன் பங்கேற்காமல் தலைமறைவாகி விட்டார். அவரை பிடித்து கொடுத்தால் ₹50 ஆயிரம் பரிசு வழங்குவதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

20230322091059567.jpeg

போலீஸ் காவலில் இருந்த ஆதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகிய இருவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றதில் அன்றைய தினமே வழக்கறிஞர் விஷால் திவாரி சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் உ.பி-யில் போலீசாரின் என்கவுன்டரில் 183 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் நிபுணர் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மேலும், கடந்த 2020-ம் ஆண்டு விகாஸ் துபே என்கவுன்டர் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

கக்கூஸில் இருக்கும் கரப்பான் கிச்சனுக்கு வந்தா அடிக்கத்தானே செய்யவேண்டும் என்று நியாயம் சொல்லும் ஆட்கள் இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு இஷ்டத்துக்கு எண்கெளண்டர் செய்வது என்ன நியாயம் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

தர்மமும் நியாயமும் கர்ம வினையும் இந்த சட்டம், மனித நேயம் இதையெல்லாம் மீறியது. ஆயுதமெடுத்தவன் ஆயுதத்தால் தான் முடிந்து போவான். இது தான் விதி.