கடிதத்தில் ’அலுவலக விஷயங்களை வெளியே கசிய விட்டதற்காக நீங்கள் தற்காலிகமாக டெர்மினேட் செய்யப்படுகிறீர்கள்’ என்பதை படித்தவுடன் அதிர்ந்து போனாள் லதா. மறுநாள் எம்.டி.ஐ போய் பார்த்து தன்னுடைய விளக்கத்தை கொடுத்து விட்டு வந்தாள்.
அவள் அந்த கம்பெனியில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. நல்ல சம்பளம்,நல்ல எம்.டி. இப்படியெல்லாம் யாருக்கும் அமையாதே? எனக்கு அமைந்தும் நான் அங்கு வேலை செய்ய கொடுத்து வைக்கவில்லையே என்று புலம்பியவளை அவளுடைய அம்மாதான் தேற்றிவிட்டாள்.
இதுவரை ஆஃபீஸில் நடந்தவை எல்லாம் அவள் மனக்கண்ணின் முன்னால் ஒடின.
அடுத்த பஸ் ஸ்டாப்புக்கு நடந்தே சென்ற ராஜேஷ் அப்போது வந்த அரசுப் பேருந்தில் ஏறினார். ஏற்கனவே அதில் மிகவும் கூட்டமாக இருந்தது. இருப்பினும் 10 மணிக்கு நடைபெறும் இன்டர்வியூக்கு சென்றாக வேண்டும்.
கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்கும் பொழுதுதான் தெரிந்தது, பர்ஸை வழியில் பஃக்ன்சர் ஆன காரிலேயே வைத்து விட்டு வந்தது. பக்கத்தில் இருந்த பெண் ஒரு பத்து ரூபாய் நோட்டை இவருக்காக கண்டக்டரிடம் நீட்டினாள்.வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார்.’சென்னை ஆன்லைன், என்று சொல்லி டிக்கெட்டை அவள் வாங்கினாள். ராஜேஷ் தானும் அங்குதான் இறங்க வேண்டும்’ என்றார்.
பத்து நிமிட பயணத்திற்கு பிறகு பஸ் ஒரு குலுக்கு,குலுக்கி நின்றது.அதிலிருந்து ராஜேஷ் தன்னுடைய தொப்பை வயிற்றை கூட்டத்தை கிழித்து வெளியே தள்ளிக்கொண்டு ஒரு வழியாக கீழே இறங்கினார். அங்கிருந்து ஆபீஸுக்கு நடந்தே சென்றார். கூடவே வந்த அந்த பெண், ,என்ன சார், நீங்களும் இன்டர்வியூக்கா?’ என்று அவரைக் கேட்டாள். அவரும், ’ஆமாம்’ என்று தலையை அசைத்தார்.
அவளுடைய பெயர் லதா. அப்பா இல்லாத பெண். அம்மா ஒரு சத்துணவு கூடத்தில் பணிபுரிகிறார். அவளுடன் பேசியதில் இவற்றை புரிந்து கொண்டார் ராஜேஷ். ஆபீஸில் போன உடனே மாயமாய் மறைந்து விட்ட ராஜேஷ் பற்றிய மர்மம் அறிய லதாவின் மூளை முயற்சி செய்து முடியாமல் தோற்றுப் போனது.
விரைவில் இன்டர்வியூ தொடங்கியது. லதாவும் இண்டர்வியூவை அட்டெண்ட் பண்ணாள்.’கம்பெனியில் வேலை கொடுத்தால் உண்மையாக பணிபுரிவேன்’ என்ற உறுதியையும் கொடுத்தாள்.
வேலை கிடப்பவருக்கு இரண்டு நாளில் வீட்டுக்கு தகவல் வரும் என்ற பொதுவான அறிவிப்பை கொடுத்துவிட்டு வாட்ச்மேன் வடிவேலு உள்ளே சென்று தன்னுடைய லஞ்ச் பெட்டியை திறந்தான்.
எதிரே வந்த ஒரு காருக்கு வழிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டாள் லதா.கார் டிரைவர் அவள் பின்னாலேயே ஓடி வந்து அவள் ‘லதா’தான் என்பதை உறுதி செய்துகொண்டு ஒரு பத்து ரூபாய் நோட்டை அவள் கையில் திணித்து விட்டுப் போனார்.அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
இரண்டு நாளைக்கு பிறகு லதாவுக்கு அந்த கம்பெனியில் இருந்து அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்தது.எம்.டி.ஐ பார்க்கச் சொன்னார்கள்.கதவை தட்டிவிட்டு எம்,டி.ரூமிற்குள் நுழைந்தாள். லதா.எம்.டி இருக்கையில் உட்கார்திருந்த ராஜேஷை பார்த்து இவளுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு கம்பெனியின் எம்.டி இவ்வளவு எளிமையாகக் கூட நடந்து கொள்ள முடியுமா? இங்கு பணிபுரிய நான் ரொம்பவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டே அவருக்கு, ’வணக்கம்’ சொன்னாள்.
’லேட்டாக வரக்கூடாது.’ என்று மட்டும் சொல்லி அவளை அவளது சீட்டுக்கு போகச் சொன்னார் எம்.டி. .ஆபீஸின் முக்கியமான பொறுப்புகள் அவளுக்கு கொடுக்கப்பட்டன. எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தன.
ஆனால்,கடந்த ஒரு வாரமாகவே ஆபீசில் ஒரே கலவரமாக இருக்கிறது. இவள் டைப் அடிக்கும் கவர்ன்மெண்ட் டெண்டர்களின் ஏல அமௌன்ட் எப்படியோ வெளியே கசிந்து சென்று விடுகிறது. வேறு போட்டி கம்பெனிகள் இவர்களை விட குறைந்த அளவிலான ஏல அமவுண்டில் ஆர்டரை எடுத்து விடுகிறார்கள்.இப்போது நடப்பது மூன்றாவது முறை.லதா தான் டெண்டர் டைப் செய்கிறாள். எம்.டி இடம் கொடுத்து சீலிட்ட கவரில் அரசுக்கு இவள்தான் அனுப்புகிறாள். இது எப்படி வெளி ஆளுக்கு தெரிகிறது. ரொம்பவும்தான் குழம்பிப்போனாள்.
இவளுக்கும் எம்டிக்கு மட்டும் தெரிந்த இந்த தகவல் வெளியில் எப்படி கசிந்தது? இதனால் கம்பெனிக்கு தொடர்ந்து லாஸ் ஏற்பட்டுள்ளது.இதில் வேறு யாரோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற சந்தேகம் எம்டிக்கும் லதாவுக்கும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
அன்று பிற்பகல். எம்டி அலுவலகத்திற்கு வரவில்லை. உணவு இடைவேளை. அசிஸ்டண்ட் கோபாலைத் தவிர வேறு யாரும் அலுவலகத்தில் இல்லை.அப்பொழுது கோபால் லதாவின் கம்ப்யூட்டரில் இருந்து சில பக்கங்களை தன்னுடைய செல்ஃபோனில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான். இதை வீட்டிலிருந்தே எம்டி தன்னுடைய மொபைலில் சிசிடிவி காட்சியில் பார்த்து விட்டார்.கருப்பு ஆடு மாட்டிக் கொண்டது.
உடனே அலுவலகத்துக்கு வந்த அவர், கோபாலின் போஃனை பறித்தார். அப்போதுதான் புரிந்து கொண்டார் அவனுடைய ’வாட்ஸ் அப்ல’ இருந்து தான் லதா டைப் அடிக்கும் அந்த ஏல தொகை விவரம் எல்லாம் போட்டி கம்பெனிகளுக்கு போகின்றன என்பதை.
இதில் லதா மீது எந்த தவறும் இல்லை என்பதை புரிந்து கொண்ட எம்டி ராஜேஷ், லதாவை திரும்பவும் வேலையில் சேரச் சொன்னார். மிகுந்த மகிழ்ச்சியுடன் பணியில் மீண்டும் சேர்ந்த லதா. அவளின் நேர்மை அவளை காப்பாற்றி விட்டதாக உணர்ந்தாள்.புது வருடத்திலிருந்து மேலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டாள்.கோபாலின் சீட்டைப் பார்த்தாள்.அது காலியாக இருந்தது.
Leave a comment
Upload