தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 38 "டிஃபினி பல்பு" - மோகன் ஜி

20241104134236791.jpg

கெம்ப்பு கலர் டிராயர்; வெள்ளைச் சட்டை; அதே கெம்ப்பு கலரில் கழுத்தில் கட்டிய டை, கருப்பு ஷூ; சட்டையில் குத்திய ஐடெண்ட்டிடி அட்டை… அந்த அட்டையில் உம்மென்ற மூஞ்சி… இப்படியாகத் தானே என் பிள்ளை கல்கத்தாவில் சுவர்ணா ஸ்கூலுக்கு புறப்பட்டாச்சு.

அழுகையெல்லாம் இன்றி எல்கேஜி கிளாஸுக்கு குஷியுடன் தான் போவான்.

விவேக்கை காலையில் ஸ்கூலில் விட வேண்டியது என் வேலை. இடது கையில் பளபளவென அலுமினிய புத்தகப் பெட்டியும், வலது கையில் இவனையும் பிடித்துக் கொண்டு கிளம்புவேன்.

எதிர்ப்பட்டவர்களுக்கெல்லாம் ஏதோ எலக்‌ஷனில் நிற்கிறவன் போல் முகமன் சொல்லிக் கொண்டே வருவான்.

ஒரு காலைவேளை அவனுக்கு சிற்றுண்டி தயாராகாததால், போகும் வழியில் ஏதேனும் பிஸ்கட், கேக் வாங்கித் தரச் சொன்னாள் மனைவியாக வந்த மாணிக்கம்.

தெரு முனையிலேயே இருக்கும் கடையில் நெய் பிஸ்கெட் வாங்க வேண்டி நின்றேன். ஒரு பெண் ‘டிஃபினி கேக் ஆசே?’ என்று கடையில் வினவிக் கொண்டிருந்தாள். எழுபத்தி ஐந்து பைசா வாங்கிக் கொண்டு பேக் செய்யப்பட்ட சதுரமான அந்த கேக்கைத் தந்தார் கடைக்கார சென்பாபு.

நம்மாளும் அதையே கேட்க, வாங்கிப் பிரித்து டிபன் பாக்ஸில் வைத்துக் கொடுத்தேன்.

அவனுக்கு அந்த கேக்கின் சுவை மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதற்கு ‘ஸ்கூல் கேக்’ என்று நாமகரணமும் செய்து விட்டான்.

அடுத்தநாள் முதல் அந்தக் கடையைத் தாண்டும்போது அப்படியே நின்று விடுவான்.

‘உனக்குப் பிள்ளையாப் பொறந்து என்ன சுகத்தைக் கண்டேன்? ஒரு ஸ்கூல் கேக்குக்காவது நாதியிருக்கா?!’ என்பது போல் ஒரு பார்வை வேறு.

“உன் டிபன் பாக்ஸ்ல இருக்கிற இட்லியை என்னடா செய்யிறது?” என்ற என் கேள்வி முடியுமுன், அந்தக் கடைவாசலில் இருக்கும் நாய்க்கு சட்டென பாக்ஸைத் திறந்து இட்லியைப் போட்டும் விட்டான்.

நெய் தடவி சர்க்கரை தூவிய அந்த இரண்டு இட்லியும் நாய்க்குப் பிடித்துப் போய் விட்டது. தொட்டுக்கொள்ள சட்னி கேட்காமல் சாப்பிட்டுவிட்டு வாலை ஆட்டியது.

கேக்கை வாங்கிக் கொண்டு பள்ளிக்கூடம் போகையில் அவனைக் கேட்டேன். “இது உன் அம்மாவுக்குத் தெரிந்தால் என்னடா செய்வே?”

“நான் சொல்ல மாட்டேன். நீ சொன்னா உனக்குத் தான் திட்டு விழும். ரோடைப் பார்த்து கிராஸ் பண்ணு டாடி!” என்று கையைப் பிடித்துக் கொண்டான்.

இந்த கேக் விஷயம் வாடிக்கையாகிப் போனது.

ஊரிலிருந்து அப்பாவும் அம்மாவும் கல்கத்தா வந்திருந்த சமயம். காலையில் எங்களுடன் ஸ்கூலுக்கு அப்பாவும் வர ஆரம்பித்தார்.

அந்தக் கடையும் வந்தது. “டாடி! தாத்தாவுக்கு ஸ்கூல் கேக் வாங்கித் தாங்க. இதுல்லாம் கடலூர்ல கிடைக்காது”

ஆஹா! பக்கத்து இலைக்கு பாயாசமா?!

அப்பாவுக்கும் அந்தக் கேக் ரொம்பவே பிடித்து விட்டது. அங்கு இருந்தவரை அவருக்கும் அந்த கேக்கை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு மாலை அந்தக் கடையைக் கடந்து குடும்பமாகப் போய்க் கொண்டிருந்தோம். அந்த நாய் வேகமாக வாலை ஆட்டியபடி விவேக்கை சுற்றிவர, என் மனைவி பயந்துபோய் விட்டாள். இவனோ அதன் மண்டையில் தட்டியபடி அவளைப் பார்த்து சிரித்தான்.

அந்தக் கடைக்கார (கடங்கார!) சென்பாபு “பயப்படாதீங்கம்மா! விவேக்கும் எங்க பிராலும் சிநேகிதம் தான்?”

“அதெப்பிடி சிநேகிதம்?!”

“தினம் இங்கே தானே இவரு கேக் வாங்குவாரு?!”

அன்று வீடு திரும்பியவுடன் என்னைப் பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள்.

“கொஞ்சமேனும் பொறுப்பிருக்கா உங்களுக்கு? தினம் தினமுமா கேக் வாங்கணும்? ஏன் தான் இப்படி இருக்கீங்களோ?”

மழை ஓய்ந்தபின்னும் கொஞ்ச நேரம் சாரல் அடித்தது.

விவேக் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் யானையை வரைந்து கொண்டிருந்தான்.

“டேய் விவேக்! அப்போ தினம் டிபன் பாக்ஸ்ல நான் வச்சு அனுப்பறதை என்னடா பண்ணினே?”

“டாடியே சாப்பிட்டுடுவார்மா!” என்றான் தலையைக் குனிந்து கொண்டு.

“நடு ரோட்டுலயா?!”

“சரி விடு!” என்று சாண்டில்யனின் புத்தகத்தில் தலையை மறைத்தேன்.

மீண்டும் இடியுடன் கூடிய மழை.

“அங்கே பக்கத்தாப்புல தான் என் பிரெண்டு உஷா இருக்கா. நீங்க நடுரோட்ல இட்லி சாண்ட்விச்சுன்னு சாப்பிடுறதைப் பார்த்தா என்ன நினைப்பா? நாளையிலேருந்து நானே அவனை ஸ்கூல்ல கொண்டுபோய் விடறேன். ஈஸ்வரா!”

ராத்திரி விவேக் படுக்கையில் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு ‘சாரி டாடி! இட் ஈஸ் ஆல்ரைட்’ என்று தூங்கிப் போனான். அவனைப் போட்டுக் கொடுக்க மாட்டேன் என்று அவ்வளவு நம்பிக்கை!

அடுத்த நாள் ஆபிஸ் கிளம்புகையில் எனக்கான டிபன் பாக்ஸைக் கொடுத்தாள். “ஏங்க! மத்தியானம் ஆபீஸ்லயே லன்ச் சாப்புடுங்க. டிபன் பாக்ஸை பஸ் ஸ்டேண்டுல திறந்து திங்க வேணாம்!”

எல்லாம் நேரம்! கேக் ரூபத்துல பல்பு வந்துடுச்சே!

அலுவலகம் செல்ல டிஃபினி கேக் கடையைத் தாண்டி நடந்தேன்.

என்னைக் கண்டதும் பிரால் வாலை ஆட்டியது.

‘திங்கறது நீ! திட்டு எனக்காடா?!’என்று அதை முறைத்து விட்டு நகர்நதேன்.

பின் குறிப்பு :

போன வாரம் கல்கத்தாவுக்கு சென்றிருந்தேன். அந்த நாள் நினைவுகளில் நான் வசித்த பேட்டையைச் சுற்றி வந்தேன்.

அந்த டிஃபினி கேக் விற்ற கடை அப்படியே இருக்கிறது.

அந்தக் கேக் கம்பேனியை மூடி விட்டார்களாம். பிராலும் செத்துப் போச்சாம்.

கடைக்காரரின் பெண் தான் கடையைப் பார்த்துக் கொள்கிறாளாம்.

கடையில் இப்போது எல் ஈ டி பல்புகளும் விற்கிறது!