கூதிர்காலம் என்று அழைக்கப்படும் குளிர் காலம் தொடங்கி விட்டது .
பிரிவின் துன்பம் என்றுமே வேதனை தருவது என்றாலும், வாடைக்காலத்தில் பிரிந்திருப்பது காதலர்களுக்கு கூடுதல் துயரம் தரும்.
காதலியைப் பிரிந்துச் செல்ல முற்படுகிறான் தலைவன் . .
அந்தச் சேதி அறிந்த காதலியின் தோழி அதிர்ச்சி அடைகிறாள் .
அன்றில் பறவை போல தலைவன் பேரில் உயிரை வைத்திருக்கும் தலைவி அப்பிரிவை தாங்கிக் கொள்ள மாட்டாள். அவளைத் தேற்றுவது மிகவும் கடினமான செயல்.
எப்படியேனும் அந்த பிரிவைத் தடுக்க வேண்டும் என்று முனைப்புடன் தலைவனிடம் சென்று முறையிடுகிறாள் .
"இதோ குளிர்காலம் தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில்நீ பிரிந்துச் சென்றால் ,அந்த துன்பத்தை எப்படி என் தலைவி தாங்குவாள் ?நீ அவளை விட்டுப் பிரியாதே " என்று கோரிக்கை வைக்கிறாள்.
அவள் கூறுகிறாள் :
"தலைவனே , நீ வாழி ! தன் சோடிப் பறவையைப பிரிந்த அன்றில் பறவை உயிர் வாழ்வதில்லை.
நீ பிரிந்துச் சென்றால் என் தோழியும் அப்பறவை போலவே இறந்துப் போகும் அளவுக்கு உன் மேல் காதல் கொண்டுள்ளாள் . அவளது துன்பத்தை ஆற்ற முடியாது நானும் தவித்துப் போவேன்.
கூதிர்காலம் தொடங்கும் அடையாளங்கள் இங்கு தென்படுகின்றன .
'ஈங்கை'மலரின் (புதர்களில் வளரும் பூ )அரும்பும், புனமல்லிகை மலரும் மணற்திடலில் உதிர்கின்றன. மான்களின் குளம்புகள் அழுத்துகையில் , அந்த இடங்களில் கிண்ணம் போன்ற சிறுபள்ளங்கள் ஏற்படுகின்றன. அப்பள்ளங்களில் நீர்க்குமிழ்களுடன் தண்ணீர் நிரம்புகிறது. அது வெள்ளியை உருக்கி சாய்க்கும் கொள்கலத்தை ஒத்திருக்கிறது .
இந்தக் காட்சி கூதிர்காலம் வந்து விட்டதை நினைவுபடுத்துகிறது.
இக்காலத்தில் நீ பிரிந்துச் சென்றால் என் தலைவிக்கு ஏற்படும் துயரத்தை என்னால் ஆற்ற முடியாது.
எனவே அப்படி ஒரு எண்ணம் இருந்தால் நீ அதை மாற்றிக் கொள்" என்று அறிவுறுத்திகிறாள்.
ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன் அதுதானும் வந்தன்று
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்
நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே
(நற்றிணை 124)
நெய்தல் திணைக்குரிய இப்பாடலை எழுதியவர் மோசி கண்ணத்தனார் என்னும் புலவர்.
மான்கள் ஏற்படுத்தும் பள்ளத்தில் நீர்க்குமிழிகள் இருக்கும் காட்சிக்கு , வெள்ளியை உருக்கி வைக்கும் கொள்கலத்தை உவமையாக சொன்னது அருமை.
தோழியின் அறிவுரை கேட்டு ,தலைவன் தன் எண்ணத்தை மாற்றி இருக்கவேண்டும் என்றே நம்புகிறேன்.
மேலும் ஒரு நல்ல பாடலுடன் அடுத்த வாரம் சந்திப்போம்
தொடரும்
Leave a comment
Upload