தொடர்கள்
நெகிழ்ச்சி
மண்டல காலம் இத வந்தல்லோ : புனர் ஜென்ம யாத்திரை - பால்கி

20241105173217455.jpg

2014 மகர ஜோதியைக்காணும் சபரிமலை யாத்திரைக்கு நானும் எனது அலுவலக நண்பன் ஜெயராமனும் கிளம்பிவிட்டோம்.

எப்போதும் போலவே இந்த யாத்திரை கிளம்பும் முன்னும் எங்களது குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கும் சுற்றம் போலவே பழகிடும் பெரியவர்களுக்கும் முதற்கண், யாதொரும் விக்னமும் இல்லாது இந்த யாத்திரையை பூர்த்தியாக்கித்தரணும் என்று எழுதி ஆசீர்வாதம் வாங்கிவிட்டேன்.

இன்றும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. பல முறை மகர ஜோதி யாத்திரைக்குத் தடை எதிரில் தெரியும். தெரிந்தே போவது போல வெட்ட வெளிச்சமாகவேத் தெரியும். ஆனாலும். ஐய்யனைக் காணும் சுய நல நோக்கோடு இதைக் கேட்டு வைப்பேன். அவர்களும் மனமுவந்து எனது அபிலாஷையை மனமுவந்து ஏற்று ஆசீர்வாதம் செய்வார்கள். இடையிடையே விசாரிப்புகளும் செய்வர். பெரியவர்களது ஆசிகள் ஒரு பெரும் நம்பிக்கையைத் தரும். தடங்கல்கள் சூரியனைக்கண்ட பனி போலே விலகியதுண்டு.

2014 ஆம் யாத்திரையை பற்றித் தொடர்வோம்.

சென்னையில் வசித்து வந்த எனது மாமியார் திருமதி சாரதா லக்ஷ்மிநரசிம்மன், என்னிடம் ஒரு விண்ணப்பம் செய்தார். மாப்பிள்ளைகளிடம் நின்று கூட பேசா மரியாதை பாங்குடையவர். நானோ அவரது கடைசி மாப்பிள்ளை. ஏனோ என்னிடம் மட்டும் சற்று உரிமையுடன் பழகுவார்.

“எனக்காக ஒரு நெய் நிறைத்த முத்திரைத் தேங்காயை சபரிமலைக்கு எடுத்துச்செல்வீர்களா?” என்று கேட்டு விட்டார்.

ஆஹா, பெரியவரின் ஆசையைப் பூர்த்தி செய்ய ஒரு அவகாசம் கிடைக்கிறதே என்று பூரிப்பில் சரி என்று விட்டேன். அதோடு விடவில்லை, அதற்கு ஒரு காணிக்கையாக ரூ.101/- ஐயும் தந்தார்கள். உள்ளம் நெகிழ்ந்தது, மகிழ்ச்சியில் திளைத்தது.

எப்போதும் போலவே எங்களது குருசாமி கையில் இரு முடி கட்டிக் கொண்டோம். மாமியாரின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் வண்ணமாய் இன்னொரு முத்திரைத் தேங்காயில் நெய் நிறப்பி முன்முடியில் கட்டிக் கொண்டேன்.

மும்பையிலிருந்து நேத்ராவதி எக்ஸ்பிரஸில் பிரயாணம். திரிசூருக்கு முந்தின குட்டிபுரம் ஸ்டேஷனில் இறங்கிக் கொண்டோம். முன்னமே ஏற்பாடு செய்திருந்தபடியே எங்களிருவரையும் அழைத்துச் செல்ல இருபதே வயதான டிரைவர் கென்னடி வடகைக் காருடன் வந்து விட்டார்.

மினி பம்பாவில் குளித்துவிட்டு மம்மியூர் சிவனை தரிசித்து விட்டோம். குருவாயூரப்பன் தரிசனம், த்ருப்ரையார் ராமர், சோட்டாணிக்கரை பகவதி என்று தரிசனம் செய்து விட்டு குளத்துப்புழை பாலனைக் காண இரவெனப் பார்க்காமல் பிரயாணித்தோம். அதிகாலை 2 மணிக்கு குளத்துப்புழை அடைந்து அரை மணி நேர தூக்கம் கழித்து அருகேயிருந்த புழையில் குளித்தோம்.

4 மணிக்கு பாலகனின் நிர்மால்ய தரிசனம் பின்னர் தொடர்ந்த அபிஷேகம் கண்டு நெஞ்சம் நிறைந்தது.

6.30 அளவில் அங்கிருந்து கிளம்பி அருகே தமிழக எல்லையில் ஆரியங்காவில் அய்யனைக் கண்டோம். அங்கிருந்து தமிழக எல்லையில் தென்காசி செங்கோட்டை நெடுஞ்சாலையில் பயணம் ஆரம்பித்தது.

காலை வேளை குளு குளு காற்றை, பொதிகை மலைக் காற்றை அனுபவிப்போமே என்று கார் கதவுகளின் கண்ணாடி கதவு உயர்த்தப்படவில்லை. காலியான சாலை. இருமருங்கிலும் காற்றுக்கு அசைந்தாடும் பச்சைப் பசேலென நெல் பயிர் வெளி. நீல வானமும் கரு மேகங்கள் த(தா)ங்கிய மேற்கு மலைத் தொடர்ச்சியும் சந்திக்கும் கண் கொள்ளாக் குளு குளு காட்சி, லயித்தபடியே நாங்களிருவர். அது ஒரு அடுத்த லெவல் இயற்கையோடு ஒன்றிய அனுபவம்.

மும்பையிலிருந்து குருசாமியின் அழைப்பு…. பேசிக் கொண்டே ….

ஏதோ எங்களுக்காக மட்டுமே நெடுஞ்சாலையோ என்று எண்ணத் தோன்றியது. எங்களுக்கு முன்னும் பின்னும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எந்த வாகனமும் இல்லை. எதிரில் அதோ தூரத்தில் கன ரக பாறைக் கற்களேற்றிய ராட்சஸ லாரி வேகமாக வருவது தெரிந்தது.

தடால் …மட்….பெரும் சப்தம்

கார் குலுங்கியபடியே இடப்பக்கம் கிட்டத்தட்ட 70 டிகிரீயில் திருப்பிக்கொண்டு வேகித்தது. பின் சீட்டில் அமர்ந்திருந்த எங்களது முகத்தில் கண்ணாடித்துகள்களும் ப்ளாஸ்டிக் துகள்களும் மானாவாரியாக வாரி இறைந்தன. நாங்களும் சீட்டுகளுக்கு இடையில் சரிந்து விட்டிருந்தோம். சுதாரித்துக்கொண்ட எங்களது சாரதி கென்னடி வண்டியை சாலயோர புளியமரத்துக்கு அருகில் நிறுத்தினார்.

டிரைவரின் அருகில் இருந்த சைட் கண்ணாடியும் அதனைத்தாங்கிய பிளாஸ்டிக் தாங்கி தான் தூள் தூளாக எங்கள் மீது வாரி இறைக்கப்பட்டிருந்தன.

எதிரில் வந்த கன ரக ராட்சஸனும் அதனுடைய இடப்பக்கத்தில் பலமாக திரும்பி வயற்காட்டில் இறங்கிவிட்டிருந்தது.

கென்னடி கூலாக இருந்தார். இளம் வயது.

“நாங்க ரெண்டு பேரும் கரெக்டான தருணத்தில் உணர்ந்துகொண்டோம் இரு வாகனங்களும் ஒட்டிக்கொண்டு கடக்கப்போகிறது என்று. நான் லெஃப்ட்டில் உடைத்தது போல் லாரி டிரைவரும் தன் இடப்பக்கமாக உடைத்து விட்டார். தப்பித்தோம். நமது வண்டி அந்த வண்டியைப் பார்க்கையில் பொடியது, சிறியது. மோதி இருந்தால் இந்நேரம் ….. அய்யப்பன் தான் காப்பாத்தினார்” என்றார். வார்த்தைகளில் தவற்றை உணர்ந்த தடுமாற்றம் தெரிந்தது.

இந்த தடார் சப்தங்கள், உபயோகத்தில் இருந்த போன் அடுத்த முனையில் குருசாமியின், “என்ன ஆச்சு? என்ன சத்தம்? திடுக்கிட்ட குரல் பல முறை வந்தும் எங்களது செவிகளில் உடனே ஏறாது போனது. சில நிமிடங்களில் நாங்களும் சுதாரித்துக்கொண்டு மீண்டும் பேசத் தொடங்கி நடந்ததை சட்டென சொல்லி முடித்துக் கொண்டோம்.

இயற்கை என்னமோ அதன் அழகை அபரிமிதமாகக் கொட்டிக்கொண்டு தான் இருந்தாள். உலுக்கப்பட்ட எங்களின் மன நிலையும் உலுங்கி விட்டது. பயம் சிறிது சிறிதாக நிலை கொள்ளத் தொடங்கியது.

கார் பயணம் அச்சன் கோயிலை நோக்கி தொடர்ந்தது. ஷார்ப் திருப்பங்கள் ஆரம்பமாயின.

கோட்டை வாசல் கருப்பண்ண சாமி கோயில் அருகே நின்றது கார். கோயில் பூஜாரி தர்மராஜ் மந்திரித்த கயிற்றை எங்களிருவருக்கும் கட்டி விட்டார். நெற்றியில் விபூதி அணிவித்தார்.

கருப்பண்ண சாமியை தரிசனம் செய்தபின் எங்களது கார் பயணம் அந்த காட்டுக்குள் அச்சன் கோயிலை நோக்கி நகர்ந்தது. அந்த அடர்ந்த காட்டுப் பாதையில் வில்லிப்புத்தூரிலிருந்து நடையாய் செல்லும் அய்யப்ப பக்தர்கள் ஓரிருவராக அமைதியாக நடந்து கொண்டிருந்தனர். கோயில் வரை தமிழக பூமி. ஆனால் கோயில் இருப்பதோ கேரளாவில்.

அச்சன் கோயில் அரசனையும் கண்டோம். அப்படியே கோயிலின் பின்னால் வழியாக அந்த அடர்ந்த காட்டினூடே எரிமேலியை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

மண் சாலை தான். மழையினால் சாலை வெட்டப்பட்டிருந்தது. நான்கு சக்கரங்கள் அந்த வெட்டப்பட்ட சாலைப் பகுதியை தவிர்த்தவாறே மெதுவாக செல்ல வேண்டியிருந்தது. பகலவன் ஓங்கி வளர்ந்த மரங்களின் கிளைகளினூடே சுள்ளென சுட்டான். முச்சந்திகளும் நாற்சந்திகளும் இடைப்பட்டன. சில மனிதர்கள் அடர்த்தியான தெம்புடன் நடந்துகொண்டிருந்தனர். எங்களின் கண்ணுக்கெட்டியவரை குடில் தெரியவில்லை. எங்கிருந்து தான் அந்த அடர்த்தியான தெம்போ?

அடர்ந்த காட்டுப்பகுதியில் மயில்கள் இரண்டு தரையிலிருந்து மேலே பறக்கக் கண்டோம். வேறு சில பெரிய பறவைகளும் மேலே பறந்தன. காரின் குறுக்கே ஆறடி மலைப் பாம்பு ஊர்ந்து செல்லக் கண்டோம். கிராசிங்க் முடிந்தவுடன் நின்ற கார் உருண்டது.

மனதில் பல கேள்விகள்.

விபத்து நடந்தது. எப்படி மயிரிழையில் தப்பிதோம். ஏன்? எப்படி?

ஒரு வேளை எனது மாமியாருக்கு எனது பயணத்தில் இப்படியொரு கண்டம் உண்டென்று தெரிந்திருக்குமோ? அதனால் தான் என்னைக் காப்பாற்ற அவர் தனது தரப்பாக நெய் நிறைத்த முத்திரைத் தேங்காயை எடுத்துக்கொண்டு செல்லச் சொன்னார்களோ?

சாதாரணமாகவே, அய்யனைக்காண மாலையணிந்து விரதம் ஆரம்பித்து விட்டால் தன்னிடம் வரும் வரை தனது பக்தனைக் கை விடுவதில்லை. இது சத்தியம். அவனுக்காக ஒன்றல்ல இரண்டு முத்திரத் தேங்காய்களலல்லவா யாத்திரையில் பயணிக்கின்றன.

எனது இந்த யாத்திரை தடைப்படக்கூடாது. ஆம் தன்னால் தடைப்படக்கூடாது. ஆமாம். நான் யாத்திரை முடித்து வந்த பத்து நாளில் சிவ லோக ப்ராப்தி அடைந்தார். ஆக, அவரது மறைவை எனது யாத்திரை முடிக்குக்கும் வரை ஒத்தி வைத்திருந்தார்களோ?

எல்லாம் அந்த நெய் தேங்காயில் அடங்கியிருந்தது எனது மறு பிறவியும் அவர்களது பிரிவும்.

சுவாமியே சரணம் ஐய்யப்பா