" நான் நிரந்தரமானவன் அழிவதில்லை -எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை " என்ற கண்ணதாசனின் வரிகள்தான் எத்தனை அர்த்தமுள்ளவை .
இன்னும் சில நூற்றாண்டுகள் கடந்த பின்பும் மக்களின் குரலில் அவரது பாடல்கள் ஒலிக்கும். காற்று சுழலும் திசையில் எல்லாம் அவரது கானங்கள் எதிரொலிக்கும் .
எந்த நேரத்தில் கண்ணதாசன் நம்முடன் இருக்கிறார் ? எல்லா நேரங்களிலும் தான் ..!
நம் மனம் சந்தோசத்தில் குதியாட்டம் போடும் போது அவர் பாடல்கள் நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விடுகிறது .
துக்கத்தில் , கண்ணீரில் ,கவலையில் நாம் மூழ்கி தத்தளிக்கையில் அவர் பாடல்கள் நம்மைக் கைபிடித்து தூக்கி விடும் .
இறுக்கமும் ,குழப்பமும் சூழும்போது "மயக்கமா ,கலக்கமா ?' என்று நம் தோள் தொட்டு விசாரிக்கும் . வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் " என்று ஆறுதல் படுத்தி "வாழ நினைத்தால் வாழலாம் ,வழியா இல்லை பூமியில்" என்று புதிய நம்பிக்கை ஒளியை பாய்ச்சும் .
கோபம், சோகம், பாசம், காதல், பிரிவு , கருணை ,தாய்மை என்று எல்லா உணர்வுகளிலும் நம்முடன் இருப்பது அவர்தான் .பயணத்தில் மட்டுமன்றி , வாழ்க்கைப் பாதையிலும் அவர் உற்ற துணை .
அவர் பாடாத பொருள் இல்லை . இனி நான்கு பாடல்களைப் பார்ப்போம்
பாடல் ஐந்து :
கண்ணதாசனே வெண் திரையில் தோன்றி நடிக்கும்"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்" என்னும் இந்தப்பாடலை நாம் கேட்டிருக்கிறோம் . அவரது அரிய கருத்துக்கள் எக்காலத்துக்கும் ஏற்றவை . அவ்வகையில் ஒரு சமூக மாற்றத்தை தொலை நோக்கிய இப்பாடலை எப்போது கேட்க நேர்ந்தாலும் தனியுடமை மாறி பொதுவுடமை ஏற்கும் சுரண்டலற்ற புதிய சமுதாயத்தை மனம் கனவு காணும் .
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்..
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை நீங்கி
வரவேண்டும் திரு நாட்டில் பொதுவுடமை
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
பாடல் ஆறு :
கர்ணன் படப்பாடல்கள் மட்டுமே ஒரு தொடருக்கான கருக்களம் கொண்டவை.
ஒவ்வொன்றும் முத்து முத்தாக இருக்கும் .அழகிய தமிழில் இனிய இசையில் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாடல் "கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே" பாடல் .
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கொண்டு துடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கொண்டு துடிக்கும்
துணை கொள்ள அவனின்றித்
தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு
ஏனிந்த மயக்கம் ?
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே.
இங்கு கொஞ்சி விளையாடும் தமிழை எடுத்து அணைத்துக் கொள்ள தோன்றுகிறது அல்லவா ?
பாடல் ஏழு;
பாடல்களில் ' சொற் சிலம்பம் விளையாடுவது ' கண்ணதாசனுக்கு கை வந்த கலை .
" பார்த்தேன் சிரித்தேன்,பக்கம் வர துடித்தேன் " என்று "ஒரு படித்தேன்' முகந்து தருவார் .
"எந்த ஊர் என்றவனுக்கு ' ஊர் ,ஊராய் அழைத்துச் சென்று காட்டுகையில் ஒரு தத்துவ விசாரணை நடக்கும்.
"பொன்னென்பேன் சிறு பூவென்பேன்" என்ற பாடலும்
'பால்வண்ணம் பருவம் கண்டு ,
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் ' என்ற பாடலும் இதே வரிசையில் வரும் அழகான பாடல்கள்
அத்திக்காயை வைத்து இருபொருள்பட எழுதிய பலே பாண்டியா பாடல் என்றும் இனிக்கும் பாடல்
அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப் போல் பெண்ணல்லவோ
நீ என்னைப் போல் பெண்ணல்லவோ
உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக் காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரித்தாயோ,
கண்ணதாசன் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளில்இப்பாடல் வரிகளைப் பிரித்துப் பொருள் தருவது வழக்கம் . அப்படி ஒரு நிகழ்ச்சியை நான் கேட்ட வாய்த்தது நான் பெற்ற பேறு .
காயை வைத்து பாடல் எழுதியவர் பூவை வைத்தும் எழுதி இருக்கிறார் .
அது 'பூப்பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ' என்ற பாடல் .இதைக் கேட்டறியாதவர்கள் யூ டியூபில் கேட்டுப் பாருங்கள். இப்படி எல்லாம் குழந்தைகளுக்கு எழுத இங்கு யாரும் இல்லை என்பது வேதனையைத் தரும்
பாடல் எட்டு
இந்தப் பாடலும் என் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்தான்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை,
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்,
இதுதான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது...
பாதை எல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்,
மாறுவதை புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்......
எந்த தெளிவுரையும் தேவை இல்லாத பாடல்.
முழு வாழ்க்கையின் சாரத்தையும் ஒரே பாட்டில் உள்ளடக்கித் தருவார்
கண்ணதாசன் சினிமா கவிஞர் மட்டுமல்ல .அவரது கவிதைகளும், புதினங்களும் , படைத்த காப்பியங்களும் உலகெங்கும் உள்ள தமிழருக்கு தமிழ்விருந்தைபரிமாறிக் கொண்டு இருக்கின்றன. ஆராய்ச்சி மாணவர்கள் அவற்றில் பொதிந்துள்ள பேருண்மைகளை அகழ்ந்தெடுத்து தருகிறார்கள் .
இன்றும் ஸ்மியூல் போன்ற 'ஆப்'களிலும் , மேடை நிகழ்ச்சிகள், சின்னத்திரை பாடல் போட்டிகளில் கண்ணதாசனின் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடும் மழலைகள் நமக்கு ஆச்சரியம் தருகிறார்கள்.
அவர்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கண்ணதாசனை கைவிலங்கு ஏதும் இன்றி கடத்திக் கொண்டு செல்கிறார்கள் .
என்றென்றும் வாழும் கண்ணதாசன் புகழ்
Leave a comment
Upload