தொடர்கள்
சினிமா விமரிசனம்
லக்கி பாஸ்கர் - ஒடிடியில் இந்த வாரம் - கி.ரமணி

20241107075237518.jpeg

"ஒரு நாள் ஒரு அரை மணி நேரம், எனக்கு பிடிச்ச மாதிரி ஒன்றும் நடக்கவில்லை.

சரி,அதுக்காக வாழ்நாள் முழுக்க நான் அழுதுகிட்டே இருக்கக் கூடாது இல்லையா?"

ஆபீஸில் நேர்ந்த ஒரு பெரிய அவமானத்துக்கு பின், எதுவுமே நடக்காதது போல் சகஜமாக இருக்கும் பாஸ்கர் தன் நண்பனிடம் கூறுவது இது.

இதுதான் பாஸ்கர்.

லக்கி பாஸ்கர்.மூலத்தில் இது ஒரு தெலுங்குப் படம்.

ஓடுமீன் ஓட,உறு மீன் வரும் வரை காத்திருக்கும் பொறுமை,தைரியம்,

பெரிய கனவுகள், அதி புத்திசாலித்தனம்,,

எந்த நெருக்கடியிலும் நிதானம்,போன்ற ஸ்பெஷல் குணங்கள்,

இவை தவிர, எல்லா மனிதருக்கும் உள்ள சாதாரண குறைகள், நிறைகள் உள்ளவன் தான் பாஸ்கர்.

1990களின் ஆரம்பத்தில் மும்பையில் ஒரு தனியார் வங்கியின் கேஷியர் பாஸ்கர்.ஒரு கட்டத்தில் கடன் மற்றும் அவமானச் சுமை தாங்காமல் எப்படியாவது நிறையப் பணம் பண்ண வேண்டும் என்று எண்ணுகிறான். நண்பனுடன் சேர்ந்து ஒன்றிரண்டு நாட்களுக்கு பேங்க் பணத்தை

கைமாற்றாக உபயோகித்து கடத்தல் பிசினஸ் செய்கிறான்.லட்சங்களை எளிதாகப் பார்க்கிறான்.

பங்குச் சந்தை புகழ் ஹர்ஷத் மேத்தா (படத்தில் ஹர்ஷத் மேஹ்ரா)காலம் அது.பாஸ்கரின் கனவுகள் வளர்ந்து பெரிதாக, வங்கிப் பணத்தை பங்குச் சந்தையில்,பங்குகள் வாங்க, ஹர்ஷத்துக்கு உதவுகிறான்.இப்போ, எளிதாகக் கோடிகளில் பணம் பார்க்கிறான்.ஒரு கட்டத்தில் மனம் மாறி, இந்தச் சக்கர வியூகத்தில் இருந்து வெளியே அடிபடாமல் நழுவி வரப் பார்க்கிறான். எதிரிகள் விடுவதாக இல்லை. மகாபாரத அபிமன்யு போல் எதிரிகள் சூழ்ச்சியால் விழாமல்,பதிலுக்கு சூழ்ச்சி செய்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்கிறான் லக்கி பாஸ்கர்.

அவன் அதிர்ஷ்டக்காரனா?

"ஆமாம் தைரியமான புத்திசாலிகளுக்கு அதிர்ஷ்டம் தானாகவே வந்து உதவும் என்பதில் என்ன ஆச்சரியம்?"என்பதுதான் படத்தின் முடிவாக அமைகிறது.

துல்கர் சல்மான் பாஸ்கராக நடிப்பில் பின்னி எடுக்கிறார்.(1980,90களில் அவர் தந்தை மம்மூட்டியின் நடிப்பு போலவே.)

பொறுமை,நிதானம், கோபம், கனிவு, ஆணவம்,பாசம், பணிவு,என்று கணநேரத்தில் உணர்ச்சிகளை மாற்றி அட்டகாசம் செய்கிறார் மனிதர்.

கதை சொல்லும் விதம்,காட்சியமைப்பு, விறுவிறுப்பு குறையாமல் பிளாஷ்பேக் காட்சிகளை கையாண்டது, மெலோடி ராமா தவிர்ப்பு, எல்லாத்துக்கும் சேர்த்து டைரக்டர் வெங்கி அட்லூரி, மற்றும் எடிட்டர் நவீன் நூலிக்கு பாராட்டுகள்.

கதை சொல்லும் பாணியில் "breaking the fourth wall "என்று சொல்லப்படும் உத்தியுடன் திரையில் உள்ள பாத்திரமான பாஸ்கர், திரை என்ற (கற்பனைச் ) சுவர் தாண்டி, பார்வையாளர்களுடன் தன் கருத்துக்களை அப்பப்போ பகிர்ந்து கொள்வது என்பது அழகாக நகைச்சுவை உணர்வுடன் காட்டப்பட்டுள்ளது.

பாஸ்கர் மனைவியாக மீனாட்சி சவுத்ரி, வணிக பங்குதாரரான ராம்கி, மற்றும் பாஸ்கரின் அப்பா,நண்பர் போன்ற எல்லாப் பாத்திரங்களுமே மிக நன்றாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளனர்.

அழகானவசனங்கள்.

"நான் விலை போய்த் தான் ஆக வேண்டும் என்ற நிலைமை வந்தால் என் விலையை நான் தான் நிர்ணயம் செய்வேன்."

"சூதாட்டத்தில் நாம் எவ்வளவு ஜெயித்தோம் என்பதை விட, எப்பொழுது நிறுத்தினோம் என்பதுதான் முக்கியம்."

போன்ற சிக்ஸர்கள்.

வசனத்தின் சிறப்பு,பாடல்களில் இல்லை.

டப்பிங் பாட்டின் தமிழ் வரிகள், விட்டலாச்சார்யாவின் மாயமோகினி காலத்து தமிழ் டப்பிங் வசனம் மாதிரி கேட்க ரொம்ப அந்நியமா இருக்கு.

பின்னணி இசை அருமை.

1990களின் மும்பையை, அலுவலகத்தை,வீட்டை, கண் முன்னே கொண்டு நிறுத்த ஆர்ட் டைரக்டர் பாடுபட்டுள்ளார்.

பிச்சைக்காரனை அரசியல் தலைவராக பாஸ்கர் காட்ட முயல்வது,அதைப் போலீஸ் அப்பட்டமாக நம்புவது, அமெரிக்க கிரீன் கார்டை சில நாட்களுக்குள் வாங்கி பண மாற்றம் செய்து உடனே அமெரிக்காவுக்கு குடி போவது,போன்றவை காதில் பூ தான்.

இருந்தாலும் "இது என்ன நியூஸ் சேனலா?சினிமா தானே! போனால் போகிறது." என்று வாசகர்கள் சொன்னால் அதுவும் சரிதான்.

"முடிவில் நீதி,தர்மம் தான் ஓங்கும்.தவறு செய்பவன் நிச்சயமாக தண்டிக்கப்படுவான்." போன்ற நீதிநூல் கருத்துகளை கதாசிரியரோ, டைரக்டரோ, ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நாம் சொன்னால்....

"ஆமாம்.நிஜ வாழ்க்கையில் மட்டும் இது நடக்கிறதா என்ன?" என்று நீங்கள் பதில் சொல்வதும் கேட்கிறது.

"இந்தப் படத்தைப் பார்க்கும் முன் ஹர்ஷாத் மேத்தா பங்கு மார்க்கேட் ஸ்கேம் பற்றிப் படித்து, குறிப்பிட்ட சில படங்கள் எல்லாம் பார்த்துவிட்டு , உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். இல்லாட்டி புரியாது." என்று யாராவது உங்களிடம் சொன்னால் கேட்க வேண்டாம்.

இந்தப் படத்திலேயே அத்தனையும் . அழகா சொல்லிக் கொடுக்கிறார்கள்.அதுவே நமக்கு தாராளம்!

மொத்தத்தில்........... 3.5/5😊

படம்... நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி. டி இல்