தொடர்கள்
கவர் ஸ்டோரி
புஷ்பா புஷ்பா புஷ்பா..... லைட் பாய்

20241106223312298.jpeg

தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகா,கேரளா தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும், சொல்லப்போனால் பக்கத்து நாடு வங்காளதேசத்திலும், இப்போது புஷ்பா 2 ஜூரம்.

பாஹுபலி 2க்கு இருந்தது போல ஏக எதிர்பார்ப்பு. இயக்குனர் சுகுமாரும், தமிழில் மதன் கார்க்கி வசனமும் ஏமாற்றவில்லை. அது போலவே இசையில் தேவி ஶ்ரீ பிரசாத்தும் (அதென்னமோ தெலுங்கு உலகத்தில் மட்டும் தான் டி.எஸ்.பி பருப்பு நன்றாக வேகிறது). போலாந்து காமிராமேன் மிரோச்லா கூபாவும் தன் பங்குக்கு புஷ்பா 2வை பிரம்மாண்டம் ஆக்கி இருக்கிறார்கள்.

புஷ்பா 2 சுற்றிய வியாபாரம் ஏராளம் ஏராளம். முதல் நாளிலேயே நூறு கோடி என்கிறார்கள். இப்போதெல்லாம் இந்த செய்திகள் வெகு சாதாரணமாகிவிட்டது. விஷயத்திற்கு வருவோம்.

புஷ்பா 2 எப்படி ??

லோகேஷ் கனகராஜ் உலகம் என்று பல கேரக்டர்கள் வருவதை சொல்லி சமீபத்தில் கேட்டிருக்கிறோம்.

இங்கே உலகமே அல்லு அர்ஜுனாதான். புஷ்பாதான். புஷ்பாவின் ராஜ்ஜியம். ஒவ்வொரு ஃப்ரேமிலும் பிரமிக்க வைக்கிறார் அல்லு அர்ஜுனா. வெட்கப்படுகிறார், அவமானப்படுகிறார், கோபப்படுகிறார், காதல்வயப்படுகிறார்,காமெடியில் கலக்குகிறார், தியேட்டரையே டான்ஸ் ஆட வைக்கிறார், ஆக்‌ஷனில் மிரட்டுகிறார்.... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அல்லு அர்ஜுனா ட்ரீட்.

ஆக்‌ஷன் படம் பார்க்கலாம். ஆனால் சுமார் மூன்றரை மணி நேரம் பார்க்க முடியுமா ?? பார்க்க வைக்கிறார்கள். புஷ்பா 1 பார்த்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக கூட இருக்கலாம். அது சுஜாதா சொல்வது போல ஶ்ரீ.ர.தேவதைகள் பார்ட் 1ல் கொண்டு வந்த ஆச்சரியத்தை 2ல் கொண்டு வரமுடியாது என்று சொல்லியிருப்பார். புஷ்பா 1 ம் அப்படித்தான். ஆனானப்பட்ட அவதாரே 2ல் கொஞ்சம் சறுக்கி விட்டது. புஷ்பா என்னாகுமோ என்றால் புஷ்பா எந்த (ஏமாற்றாத்திற்கும்) அடங்காதவன் என்று நிரூப்பிக்கிறது.

படம் வேற லெவல்.

கதைச் சுருக்கம் சொல்லப்போவதில்லை. ஆரம்ப சீன் முதல் சுறு சுறு, விறு விறு. அந்த இண்டர்வெல் ப்ளாக்.

அற்புத திருப்பம். அங்கு தான் படம் சூடு பிடிக்கிறது.

சரியான இடத்தில் சரியான நேரத்தில் கொடுத்த இண்டர்வெல் பிளாக் ரசிகர்களை திரும்பவும் நிமிர்த்தி உட்கார வைக்கிறது.

மொத்த படத்தையும் முதலிலிருந்து பார்ப்பது போல ஒரு உணர்வு. கொஞ்சமல்ல ஏகத்திற்கும் நீளம் தான் படம். ஆனாலும், அலுக்காத சலிக்காத படம்.

ராஷ்மிகாவை குறிப்பிட வில்லையென்றால் புஷ்பா கோவிச்சுக்கும். ஶ்ரீ வள்ளி அத்தனை அழகு அத்தனை நளினம், அத்தனை கவர்ச்சி.

ஃபகத் பாசில் தன்னுடைய பங்கிற்கு குறையில்லாமல் வந்து போகிறார். ஆனால் 1ல் கொடுத்த பில்டப் சஸ்பென்ஸ் அளவு இதில் புஷ்பாவிற்கு டஃப் கொடுக்காமல் போனது போல ஒரு ஃபீலிங்.

கதை சொல்லாவிட்டாலும் இதை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசை. கடைசி கிளைமாக்ஸ் முடிந்து இன்னொரு பத்து நிமிடம் தேவையில்லாமல் என்னடா இழுக்கிறதே என்று பார்த்தால் அது புஷ்பாவின் வளர்ச்சிக்கே இந்த ஒரு அடிநாதமான விஷயம் தான் காரணம் என்ற அளவிற்கு அதை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் படத்தில் லாஜிக் ஓட்டைகள் இத்யாதிகள் எல்லாம் பார்க்காமல், அந்த கிளைமாக்ஸ் சண்டை, அல்லு அர்ஜுனாவை தவிர மன்னிக்கவும், புஷ்பாவை தவிர வேறு யார் செய்திருந்தாலும், ஏற்றுக் கொள்ளவே முடியாத ஃபைட். ஆனால் புஷ்பா செய்தால் அதை நம்பலாம் போலவே காட்சிப்படுத்தியிருப்பது....

வாவ். ஹாட்ஸ் ஆஃப் இயக்குனர் பந்த்ரெட்டி சுகுமார்.

உங்களைப் பார்த்து இனிமேல் தமிழிலும் இப்படி ஃபைட் வைக்காமல் இருக்க வேண்டும்.

காந்தாரா வெற்றிக்குப் பின் அந்த சாயலையும் தொடலைன்னா எப்படி?? அல்லுவுக்கு அம்மன் கெட்டப் போட்டு ஒரு அதிரிபுதிரியான அம்மன் பாட்டை போட்டு, பின்னர் அதே கெட்டப்பில் கிளைமாக்ஸில் துவம்சம் பண்ண வைத்து, அக்மார்க், ஐ.எஸ்.ஓ தெலுங்கு பட முத்திரை.

ஆக மொத்தம் இந்த வாரம்....

புஷ்பா புஷ்பா புஷ்பா... ஜூரம்.

ஒரு தியேட்டரில் அல்லு அர்ஜுனா படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் ஒரு பெண் பலியாகும் அளவு புஷ்பா ஜூரம். அது மட்டும் தான் சோகம்.

மற்ற படி படம் முடிவில் ஒரு சஸ்பென்ஸ் வைத்து புஷ்பா 3 க்கு அச்சாரம் போட்டிருக்கிறார்கள்.

புஷ்பா The rule க்கு பின் அடுத்தது The Rampage.