
சமீப காலமாக உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் சில வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுக் கொண்டு வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிர் இழப்பு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு, நாமக்கல் மாவட்ட சிறுநீரக திருட்டு வழக்கு என்று பட்டியல் தொடர்கிறது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது திமுக தலைவர் ஸ்டாலின் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பலமுறை பல பிரச்சனைகளில் கோரிக்கை வைத்திருக்கிறார். இப்போது ஆளுங்கட்சியானதும் நீதிமன்றங்களின் சிபிஐ விசாரிக்கும் உத்தரவை எதிர்த்து தொடர்ந்து மேல் முறையீடு செய்து வருகிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கவில்லை. இப்போது மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்திருக்கிறது தமிழக அரசு. இதை ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி கடுமையாக எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தமிழக அரசு தனது கணவர் கொலை வழக்கை நேர்மையாக விசாரிக்கவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு . இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள். கொலையாளிகள் யாரையோ பாதுகாப்பதற்காக இந்த என்கவுண்டர் என்பது ஆம்ஸ்ட்ராங் மனைவியின் சந்தேகம். அவருக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்களும் சிபிஐ விசாரணை சரிதான் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க முன்வந்த போது தமிழக காவல்துறை ஆவணங்களை இன்னும் ஒப்படைக்காமல் இழுத்தடிக்கிறது. ஆவணங்கள் டெல்லியில் இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறோம் என்கிறது தமிழக காவல்துறை. சிபிஐ என்பதும் தமிழக காவல்துறை போல் ஒரு விசாரணை அமைப்பு தான். கொலை செய்யப்பட்டவரின் மனைவியே சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்று சொல்லும்போது தமிழக அரசின் மேல்முறையீடு என்பது அரசியலாகத்தான் பார்க்கப்படும். இது தமிழக முதல்வருக்கு தெரியாதா ?

Leave a comment
Upload