தொடர்கள்
கவிதை
மழலைச் சிரிப்பினிலே...!! கோவை பாலா

20260311072017611.jpeg

ஓடும் பேருந்தில் ஒருநாள், சன்னல்
ஓரத்தில் நான் இருந்தேன்...!
வீசும் இளம் காற்றால்,எந்தன்,
சிரசும் வீழக் கண்டேன் தன்னால்...!

உறக்கத்தில் ஆழ்ந்த என்னை
உலுக்கி எழச் செய்தது என்ன?
தலையைக் கட்டிப் போட்டதாரோ ?
நிலையை உணர நேரம் ஆனதோ?

நெற்றி முடியை கற்றையாய்,
பற்றி யாரோ எனை இழுக்க,
தொட்டு உணர்ந்து விட்டேன்...
பட்டுக் கைகள் இரண்டென்று...!

உச்சந் தலை ஏறிய வலியில்,
சித்தம் செயல் இழந்திருந்தேன்...!
சத்தம் எழுப்பிட சினம் நினைக்க,
பக்கம் திரும்பிப் பார்த்தேன்...!

முன்னம் பற்கள் இரண்டும்,
கன்னம் குழி அழகும் காட்டி,
கள்ளம் இல்லா சிரிப்பில், என்
உள்ளம் கவர்ந்தது ஒரு பிள்ளை...!

நெற்றியில் கரு மையில் பொட்டு...
திருஷ்டிக்கு கன்னத்தில் பொட்டு...
பற்றிக் கொள்ளென்று உயர்த்தி கைகள் நீண்டது என் பொருட்டு...!

கொஞ்சிக் குலாவி கை கொடுக்க,
பிஞ்சுக் கைகள் என் விரல் பிடிக்க,
அணைந்ததோ சினமெனும் தீயும்...!
மறைந்ததோ தலைவலி மாயம்...!

கவிக்கோ வின் மழலை வரிகள்
கண் முன்னே கண்டுவிட்டேன்...!
"மழலைச் சிரிப்பினிலே கரையும்
கல் மனமும் " என்று...

தாவி வந்த பிள்ளை என் கையில்,
தங்க வைத்து பார்த்தேன் மடியில்...
தலை சாய்த்து அயர்ந்தது மார்பில்...
விலை இல்லை அன்பிற்கு உலகில்...!

கடவுள் ,"தன்னைக் காண் என்று "
கண் முன்னே குழந்தை ஆகி,
கனமான மனச் சூழ்நிலையும்,
கணப் பொழுதில் மாற்றிடுவான்...!
புத்திக்குப் புரிந்தது புதிதாய் இன்று..!