தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

நடைபாதை மரணப் பாதை அல்ல...

20210727171723845.jpeg

நடைபாதை நடப்பதற்கே இப்படி ஒரு அறிவிப்பு மாநகராட்சி, ஊராட்சி மன்றங்கள், சாலை ஓரங்களில் அறிவிப்பாக வைத்திருக்கும். இது பொதுமக்களுக்கு தான், அரசியல் கட்சிகளுக்கு இல்லை என்று அரசியல் கட்சிகள் நினைக்கிறார்களோ என்னவோ...

பேனர் கலாச்சாரம் வேண்டாம் என நீதிமன்றம் பலமுறை கண்டித்து இருக்கிறது. பேனர்களை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

2019 இல் சுபஸ்ரீ என்ற இளம் பொறியாளர், சாலையோரம் வைக்கப்பட்ட பேனர் விழுந்து உயிரிழந்தார். அப்போது எல்லா அரசியல் கட்சிகளும் இந்த பேனர் கலாச்சாரத்தை கண்டித்தது. இது சம்பந்தமான வழக்கில் உயர் நீதிமன்றம், முக்கிய கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய போது... திமுக, நாங்கள் எந்த நிகழ்ச்சிகளுக்கும் கட்டவுட் பேனர் பிரம்மாண்ட கொடிக்கம்பங்கள் போன்றவற்றை சாலையில் வைக்க மாட்டோம் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின்... பேனர், கொடிக்கம்பங்கள் வைக்கும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று கண்டிப்பாக கூட சொன்னார். ஆனால், இதெல்லாம் சில நாள் தான். அரசியல் தலைவர்களின் எல்லா வாக்குறுதிகளை போல், இந்த வாக்குறுதியும் காணாமல் போனது. மறுபடியும் திமுக உள்பட எல்லா அரசியல் கட்சிகளும் பேனர், கொடிக்கம்பம் என்று சாலைகளை ஆக்கிரமித்து, பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யும் வேலைகளை தொடர்ந்து செய்துதான் வருகிறார்கள்.

இப்போதும் அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ள இருந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு கொடிக் கம்பம் நடும்போது, மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்து இருக்கிறார். எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக தலைவர் ஸ்டாலின், மனித உயிரை மதிக்க வேண்டும் என்றார். ஆனால், அமைச்சர் இழப்பீடுதந்து விட்டோம் என்கிறார். ஒரு உயிரின் விலை ஒன்றரை லட்சம் தானா என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்லவில்லை. மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின், பேனர் கொடிக் கம்ப கலாச்சாரத்தை கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார். இந்த அறிக்கை வெறும் வெத்து அறிக்கையாக இல்லாமல், சம்பந்தப்பட்ட அமைச்சர் மீதும், கட்சி பிரமுகர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, அறிக்கையை உண்மையாக்க வேண்டும்.

நடைபாதை... நடப்பதற்கும், சாலை பயணத்துக்கு மட்டுமே. பேனர்கட்ட, கொடிக்கம்பம் என்று அதை மரணப் பாதை ஆக்க வேண்டாம்.