தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 23 "ரிஸப்ஷன் பல்பு " - மோகன் ஜி

20240718230716114.jpg

இந்தக் கூத்து நடந்து இருபது இருபத்தஞ்சு வருஷம் இருக்கலாம். மறக்கக் கூடிய கூத்தா என்ன?

நான் ஒரு கல்யாண மண்டப வாசலில்…

"என்ன சார் தேடுறீங்க?" கல்யாண மண்டபத்து வாசலில் தரையைப் பெருக்கிக் கொண்டிருந்த அம்மணி கேட்டாள். மணி மாலை ஐந்தரை.

திரும்பவும் அண்ணாந்து பெயர்பலகையைப் பார்த்து சரியான கல்யாண மண்டபம் தானா என்று சரிபார்த்துக் கொண்டேன். இருந்த இடத்திலிருந்து பார்க்க உள்ளே ஹால் 'ஹோ'வெனக் கிடந்தது.

உள்ளே ஒருவரும் இல்லை. அட்சதைகளும், வாடி நசுங்கிய மலர்களும், காலி பேப்பர் கப்புகளும், தரையெங்கும்.... இப்படிக் கல்யாணம் முடிந்த மண்டபத்தின் வெறுமையை, முன்னமே அழகாக யாரோ ஜாம்பவான் அந்நாளில் எழுதியதைப் படித்த ஞாபகம் வந்தது.

இந்தக் கல்யாண ரிஸப்ஷனில் என்னுடன் சபரிமலை வரும் சில நண்பர்கள் கலந்து கொள்வதாகப் பேசி வைத்திருந்தோம்.

முதல்நாளே இதற்கென சென்னைக்கு கோவையிலிருந்தே காரை ஓட்டிக் கொண்டு வந்திருந்தேன். இரண்டு நாள் அம்மாவிடம் சீராடிவிட்டு, இந்தக் கல்யாண ரிஸப்ஷனை முடித்துக்கொண்டு திரும்ப வேண்டும்.

''உங்களைத் தான்?! என்னா வேணும் சார்?'' என்று என் கையிலிருந்த ரிப்பன் கட்டிய பரிசுப் பெட்டியைப் பார்த்தபடி மீண்டும் கேட்டாள் அந்தப் பெண்.

"இல்லம்மா! இப்ப இங்க கல்யாண ரிஸப்ஷன் நடக்க இருக்குதே... யாரையும் காணோமேன்னு பாக்குறேன். "

"கண்ணாளம் பகல்லயே முடிஞ்சு அல்லாரும் கிளம்பிப் பூட்டாங்களே சார்!"

"காலையில கல்யாணம் நடந்தது எனக்கும் தெரியும்மா. சாயங்காலம் ரிஸப்ஷன் இருக்கே! அதுக்காகத்தான் வந்தேன். இன்னும் யாரும் வரக் காணோமே... மண்டபம்கூட தயாரா இல்லையே?"

"பாலக்காட்டு அய்யமாருங்க கண்ணாளமா சார்?"

"ஆமாம்.. ஆமாம்" சரியான மண்டபம் தான்... ஓரத்தில் தெர்மகோலில் 'வெல்கம்'னு பொண்ணு, பையன் பேரை சரிகைமின்ன ஒட்டிவைத்து ஓரமாக சாய்த்து வைத்திருக்கிறதே!

"நேத்து சாயங்காலமே ரிஸப்சன் ஆயிருச்சே? பத்திரிகைய பாக்கலீங்களா?"

குழம்பினேன். கல்யாணத்துக்கு முதல்நாளே ரிஸப்ஷனா? கேள்விப் பட்டதே இல்லையே?

என்னைவிட நாராயணன் அண்ணா மடிசஞ்சி ஆச்சே? சாஸ்த்ர விரோதமா பண்ண மாட்டாரே? அது சரி... சாஸ்த்ரத்துல ரிஸப்ஷன் ஏது?

சரி வீட்டுக்குத் திரும்பலாம்... கையில் காதி எம்போரியம் ராமர் பொம்மை பரிசுப் பெட்டிக்குள் கனக்கத் தொடங்கினார். அவருடன் சீதையும் அனுமாரும் கூட.... நேரே வீட்டுக்குப் போனால் அம்மா சிரிப்பாள்.

'இன்விடேஷனை சரியாப் பார்க்க மாட்டியோ?' என்பாள்.

இன்று கல்யாணம் என்று தெரியும். இல்லாத வழக்கமாக முதல்நாளே ரிஸப்ஷன் வைப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்?

இன்னைக்கு ஒரு தரமான சம்பவம் பண்ணி வச்சிருக்கேன். அப்படியே வெளிய வராம அமுக்கிட வேண்டியது தான்.

பரிசுப் பெட்டியைத் திரும்ப எடுத்துப் போனால் விளக்கம் சொல்ல வேண்டிவரும். நம்ம பவிஷு தெரிந்துபோகும்.

இன்னொரு நண்பர் (இவரும் சபரிமலை ஜமா தான்) வீடு அருகில்தான் இருந்தது ஞாபகம் வந்தது . அவருக்கு சொந்தவீடு தான். நாங்கள் இருவரும் ஒன்றாக சபரிமலைப் போகத் தொடங்கியவர்கள். ஞானம் ரொம்ப வந்துவிட்டதால், நாலு மலையோடு நிறுத்திக் கொண்டவர்... பூஜைகளில் அவ்வப்போது பார்த்துக் கொள்வோம்.

அவர் வீட்டுக்குப் போனேன். அவருக்கானால் மனம் கொள்ளா ஆனந்தம். 'ஐயப்பனே வந்தாற்போல இருக்குய்யா!' என்று கொண்டாடினார்.

‘'ஆமாம்வே! நான் ஐயப்பன் தான். உங்க காம்பவுண்டு ஓரம் பாரிஜாத செடிக்குக் கீழே வன்புலியை 'பார்க்கிங்' பண்ணிட்டு வந்திருக்கிறேன்!'’

ஏதேதோ பழைய விஷயங்கள். காபி... பேச்சு.... பல்லுபல்லாய் தேங்காய் சேர்த்த மொறுமொறு அடை.. அவியல்.. கொத்தமல்லி சட்னி... வெல்லம்... மீண்டும் காபி.

அடுத்தநாள் மாலை அவர் மகளைப் பெண்பார்க்க வருகிறார்களாம். நல்ல இடமாம். நான் வந்தது நல்ல சகுனமாம்.

அப்போதே அலுவலகத்திலிருந்து திரும்பிய அந்தப் பெண் முகம் அலம்பிக் குங்குமம் இட்டுக்கொண்டு குத்துவிளக்குபோல் வந்து நமஸ்காரம் செய்தாள். மனதார வாழ்த்தினேன். அவளுக்கு கையிலிருந்த பரிசுப் பெட்டியைத் தந்தேன். 'கல்யாணத்தில் சந்திக்கிறேன்' என்று விடைபெற்றேன்.

இவள் திருமணத்துக்காவது பத்திரிகையை சரியாகப் பார்த்துக் கொண்டு போக வேண்டும்.

ஐயப்ப நண்பர் கண்கலங்க விடைகொடுத்தார்.

புலியேறி மடிப்பாக்கம் திரும்பினேன். இரவாகி விட்டது.

அம்மா 'இரண்டு அடை சாப்பிடேண்டா!' என்றாள்.

"இல்லேம்மா! அடை சாப்பிட்டுட்டுத் தான் வரேன் !"

"ரிஸப்ஷன்ல அடையெல்லாம் கூட வார்த்துப் போடுவாங்களா பாலக்காட்டு மனுஷா?"

"பாலக்காட்டுக் காரங்களை என்னான்னு நினைச்சேம்மா? வ்வோ.. தேவாம்ருதத்தையே தருவிச்சு, அதுல அல்வா கிண்டிக்கூட போடுவாங்க!"