கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 83 - பரணீதரன்
இந்த வாரம் நாக பந்தத்தின் மற்ற வகைகளைப் பார்ப்போம் என்ற பீடிகையுடன் மேலும் தொடர்கிறார்.
அடுத்ததாக சதுர் நாக பந்தத்தை பார்ப்போம். இதற்குரிய இலக்கணமாக - நமது பழைய இலக்கண நூல்களில் இதற்கான இலக்கணம் இல்லை. ஆனால் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புலவர்கள் பலவகையான இலக்கணங்களை பயன்படுத்தி சதுர் நாக பந்தத்தை உருவாக்கியுள்ளார்கள். சில குறிப்பிட்ட எழுத்துக்கள் வெண்பாவில் பொதுவாக இருக்க வேண்டும் என்பதே பொதுவான விதியாகும். இதற்கான எடுத்துக்காட்டுகள் சிலவற்றை கீழே பார்ப்போம்.
மாதரி சேயமா வாகன வந்தருளா
தவ தேனிந காகுக நாதசூர்
மாதடி சேவக மானினி யாவளா
வேதவி யாவகா வேலவ கந்தனே!
இந்தப் பாடலின் பொருள் - பெரிய மயிலை வாகனமாகக் கொண்டு, இங்கு வந்து எனக்கு அருள் புரியும் உமாதேவியின் மகனே! தவம் இயற்றுவதில் சிறந்தவனே, தேன் போன்ற இனிமையான குண நலன்களை உடையவனே, நாகத்தை தன்னிடம் கொண்டுள்ள குகனே, சூரனை வென்று அளித்த நாதனே, அவனை சேவலாக மாற்றி உனது அடியை பணியைச் செய்தவனே, வேதங்களை நித்தமும் மற்றவர்கள் உரைக்க அதை கேட்பவனே, வடிவேலனாகிய எனது கந்தனே!
பாடல் 1.
தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதா
லெங்ங னறித லுலகியலை - முன்னுவந்
துன்னை யறிக முதல்.
பாடல் 2.
நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையா
தீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன
வுடன்பெறு வாயுய் தலை.
பாடல் 3.
ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்
தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்
தீங்கினைத் தீப்படுந் தீ !
பாடல் 4.
உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்ற
பொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயே
லென்னை பயக்குமோ சொல் !
இந்தப் பாடலின் பொதுவான பொருள் - எல்லாம் வல்ல பரம்பொருளை நாம் வழங்கி சரணடையும் பொழுது நமக்கு நம்மை அறியக்கூடிய ஞானத்தையும், இந்த உலகத்தை அறிந்து கொள்ளக்கூடிய கல்வி அறிவையும், இந்த உலகியலை அறிந்து தெளிந்து பிரிந்து வரக்கூடிய சித்தத்தையும் கொடுப்பார்.
நீ நல்ல மனதுடன் நல்ல செயல்களை செய்து இறைவனை தலை வணங்கும் பொழுது உன்னுடைய நீக்க வேண்டியதாகிய தீய வினைகள் நீங்கும், நேர்மறையான நல்ல வினைகள் கிடைக்கும், நம்முடைய இன்னல்கள் அழியும், மற்ற நல்ல விஷயங்களையும் நாம் பெறுவோம்.
பெரிய பனைமரத்தை போல செல்வத்தில், கல்வியிலும், வீரத்திலும், விவேகத்திலும், புகழிலும் உயர்ந்திருந்தாலும் தன்னுடைய மனதிலே அடுத்தவருக்கு தீமையை நினைக்கும், அடுத்தவருக்கு தீமை செய்யும் ஒருவர், அவருடைய தீமையான எண்ணத்தையும் தீமையான செயலையும் மாற்றாமல் இருந்தால், அவர்களுடைய எண்ணமே தீயை போல அவர்களை சுட்டெரிக்கும். அதாவது அவருடைய புகழையும் செல்வங்களையும் மற்ற நல்ல விஷயங்களையும் அழித்துவிடும்.
உன்னை நீ யார் என்று அறிந்து கொள்வதற்கு உனது விதியில் உன்னை அழுத்தும் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை ஆகிய மூன்றையும் நீ ஒழிக்க வேண்டும். அதைச் செய்யவில்லை என்றால் உனக்கு என்ன நன்மை வரும் சொல் பார்க்கலாம் ?
மேலா பகவா குகனே வெகுகன
வேலா வவாவை வெலுகவே - கோலா
கலாப சுகனேகா வாயே கதிசேர்
கலாப மயில்வா கனா!
மேலானவனே, பகவானே, குகனே, அழகான புகழ் பொருந்திய வேலையுடையவனே, அடியே என்னுடைய ஆசையினை கேட்பாயாக! அழகானவனே, அழகான தோகையை உடைய மயிலை வாகனமாக கொண்டவனே, அடியேனை காப்பாற்றுவாயே!
தாதா ராமச் சந்திர நாமா
நீரா சுபமா நீதி போதா
சீர்சேர் தேசுள மாரா நாதா
சகல சேம மாநீ
வாமா பூமா வேதா வாழியே
அனைத்தையும் கொடுக்கக் கூடியது ராமச்சந்திரனுடைய நாமம் ஆகும். நீரால் சூழப்பட்டுள்ள பாற்கடலில் இருக்கக்கூடியவரும், மிகுந்த மங்கலத்தை கொடுக்கக் கூடியவன், நீதி போதனைகளை நமக்கு அருளக்கூடியவனும், மிகுந்த புகழை உடைய ஒளி பொருந்திய சீதா தேவியின் நாதன் ஆனவனும், அனைத்து விதமான நன்மைகளையும் கொடுக்கக் கூடியவனாகவும் இருக்கக்கூடிய ராமச்சந்திரன் ஆன நீ இங்கு வரவேண்டும். இந்த பூமியையும் வேதங்களையும் தாங்கி அருளி கொண்டிருப்பவனாகிய நீ வாழ்க.
மற்ற சித்திரக் கவிகளை வரும் வாரம் பார்ப்போம் என்று விடைப் பெற்றார்.
Leave a comment
Upload