நட்பதிகாரம் – சிறுகதை – பா.அய்யாசாமி
என்ன நடந்திச்சுன்னு இப்போ இப்படி உட்கார்ந்திருக்கீங்க ? என சத்தம் வரவும் சுதாரித்து ஈசிசேரிலிருந்து மனைவியைப் பார்த்தார் அகோரம் ஒன்னுமில்லே! என்றார்.
ஆமாம் ! துரையைப்பத்தி ஒன்றுமே எனக்குத்தெரியாதுபாரு.. என சொல்லி தேநீர் கப்பை 'ணங்'கென மேசையில் வைத்து எதிரில் அமர்ந்தாள் மனைவி சித்ரா.
சேகர் இறந்ததைத்தானே நினைச்சிகிட்டியிருக்கிங்க ? விடுங்க.. நண்பனாக இருந்தவன்தான், சாகும்போது உங்களுக்கு கடனாளியாகி எதிராளியாகி விட்டான் என்றாள்.
சீய்! அவன் கடனாளியாகிருந்தூலும் எனக்கு என்றும் நண்பன்தாண்டி என்றவரை ஆச்சரியமாகப் பார்த்தாள் சித்ரா.
இருபது வருடங்களிருக்கும்.....
டாடா 407 வாகனம் ஒன்றை வாங்கி வாடகைக்கு ஒட்டியபோது, மூட்டைத்தூக்கும் தொழிலாளியாக அறிமுகமானவர்தான் சேகர், சுறுசுறுப்பான, துடிப்பானவராதலால் எளிதில் நண்பரானவர்.
வறுமையான தனது நிலையைச்சொல்லி புலம்புவார், அவர் மீது இரக்கம் கொண்டு சாப்பாடு, தேநீர் வாங்கித்தருவதில் ஆரம்பித்த நட்பு, சதுரகிரி, திருப்பதி என ஆலயங்கள் இருவரும் சேர்ந்து செல்லும்போது அதிகம் நெருக்கமானது. சேகரின் ஒரே பெண் திருமணத்திற்கு தயாரகி நின்றபோது செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடினான்.
சேகர் கேட்டதும் புரட்டி உருட்டி ஒரு லட்ச ரூபாயை கொடுத்ததில் நல்லபடியாக நடந்தேறியது மகளது திருமணம், சேகரும் அவரது மனைவியும் வெகுகாலம் வரை அதைச் சொல்லி நன்றி பாராட்டிட தவறவில்லை. வாங்கிய தொகைக்கு சில மாதங்கள் வட்டியை மட்டும் கட்டிவந்த சேகர் ஒரு காலகட்டத்தில் அதையும் நிறுத்திவிட்டான்.
கடன் வழங்கியவர்கள் உறவுக்காரர்கள் என்பதால், நெருக்கியதில் தன் கையிலிருந்த தொகையைக் கொண்டு திரும்பக் கட்டவேண்டியதாகிப்போனதுஅகோரத்திற்கு. வருடங்கள் ஓடியது... தொகையை கேட்கும் பொழுதெல்லாம், இதோ,அதோ என்றவன் பெண்ணின் பிரசவம்,மருத்துவச் செலவுகள் வந்து நெருக்கிட, செய்வதறியாது விழிப்பிதுங்கிப் போனது. உதவப்போனது உபத்திரவத்தில் வந்து முடிந்ததை நினைத்து வருத்தமடைந்தார்.
"சேகரிடம் ஒழுங்காக பணத்தை திருப்பிக் கொடுத்திடு இல்லை யென்றால் உன் மீது வழக்கு தொடுப்பேன்" என சிரித்துக்கொண்டே தான் சொன்னதும்,
போடுய்யா..அப்பொழுதாவது ஆறுமாசம் என்னைய தொல்லை பண்ண மாட்டேயில்லே என சேகர் சொன்னது மனத்தை ரணமாக தைத்து விட்டது. எத்தனை நம்பினோம், ஆனால் இவனின் பேச்சு சரியில்லையே என வருந்தி, வழக்கைத் தொடர்ந்து விட்டேன் என சேகரிடம் சொன்னதும், அப்பாடா... இனி உன் தொல்லை கிடையாது எனக்கு, கோர்டை நான் சமளித்திடுவேன் என்ற சேகரின் ஆணவப் பேச்சு மேலும் காயப்படுத்தியது.
என்ன பேச்சு இது ? எப்ப பணத்தை கொடுப்பே என்றபோது,
“வழக்கைத்தான் நீ போட்டேயில்லை இனி என்ன ?
வீட்டிற்கெல்லாம் வரக்கூடாது,எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கலாம் என விரட்டினார் சேகர்.
கடன் பெற்ற நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பார்கள் ஆனால் கடன் கொடுத்த நானும் கலங்கி நின்றுவிட்டதை நினைத்து நொந்துப்போனதுதான் மிச்சம்.
இப்படியாக நாட்கள் நகர, வழக்கு தினத்தில் ஆஜரான சேகர், வழக்குறைஞர் அறிவுறுத்தலின் பெயரில் சாட்சி ஒருவரை அழைத்து வந்து, தான் வாங்கிய கடன் முழுவதும் தீர்த்துவிட்டதாகவும்,
பழி வாங்கவே அகோரம் என் மீது பொய் வழக்கு தொடர்ந்ததாக சாட்சி அளித்தான்.
விசாரனைகள் முடிந்து தீர்ப்பு நாளும் வந்தது,
அசலோடு வட்டியும் சேர்ந்து தொகை மூன்று லட்சமும், வழக்கு செலவுத் தொகையும் அகோரத்திற்கு சேகர் தரவேண்டும் தவறினால்
அவரது அசையா சொத்தான வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
தீர்ப்பிற்கு பிறகு சற்றே இறங்கிவந்த சேகர், பணம் இல்லை,ஜப்தி செய்தால் நாங்கள் நடுத்தெருவிற்கு வந்துடுவோம் என்று குடும்பத்தோடு இல்லம் தேடிவந்து கெஞ்சினான்.
நீண்ட யோசனைக்குப் பிறகு சரி,நாம் நண்பர்கள் பார்த்துக்கொள்ளலாம்,
ஆனால் அந்த பொய்சாட்சி சொன்ன நபர் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் நான் சொன்னது பொய் என சொல்லி விழ வேண்டும் என புது நிபந்தனையை நான் விதித்ததும்,
அது சாத்தியமில்லை,நான் வேண்டுமானால் உன் காலில் விழுகிறேன் என சேகர் சொன்னதற்கு,
"அப்போதே என்னிடம் பணம் இல்லை என சொல்லியிருந்தால் கூட,
உன் மீது வழக்கைப் போடாமல் விட்டியிருப்பேன், ஆனால் பொய்சாட்சி சொல்வதற்கு யாரோ ஒருவனின் காலில் விழுந்து கூப்பிட்டு வந்தாய்!" இல்லே, இப்போ போய் அவனைக் கூப்பிடு என்று கறாராக சொன்னதும், வேறு வழியில்லாமல் ஜப்தி நடவடிக்கையிலிருந்து தப்பிக்க உயர்நீதிமன்றம் வரைச் சென்று தடைப்பெற்று மீண்டும் மேல் விசாரனை தொடங்கியது. பல வருடங்களாக விசாரனையும்,ஒத்தி வைப்புமாக இதுநாள் வரை நடந்துக்கொண்டியிருக்கிறது.
சேகரின் உடல் நிலை மோசமாகி படுத்தபடுக்கையாக கிடந்து இன்று இறந்தே போனான் என்ற செய்தி வந்தது வரை நினைத்துப் பார்த்த அகோரம்,
“ வா போய் அவனைப் பார்த்துட்டு வந்திடலாம் என மனைவியோடு கிளம்பினார்.
கிடத்தப்பட்டு சூழ்ந்திருந்த குடும்பத்தினர், அகோரத்தை அங்கே கண்டதும் அழுகையின்றி அமைதியாகினர் செய்வதறியாத மனைவியும் விசும்பியபடி அகோரத்திடம்
" பாருங்கண்ணே! என்னைய இப்படிவிட்டுவிட்டுப் போயிட்டாரு, நான் என்ன செய்யப்போகிறேன்னு ஒன்றும் புரியலைணே!"என அழுகையை உயர்த்தினாள்.
இந்தாம்மா! இது உன் புருசன் எனக்கு கட்டிய வட்டி பணம், இதை வைத்து இறுதிக் காரியங்களை முடித்துக்கொள்.என்று அகோரம் கொடுத்ததும், "எங்களை மன்னித்துவிடுங்கள்"என காலில் விழப் போனவளை தடுத்து தூக்கி சமாதானப்படுத்தினார் அகோரம் மனைவி சீதா.
திரும்பவும் யாரோ தன் காலைப் பற்றியது போலிருக்க, குனிந்துப்பார்த்தபோது பொய்சாட்சி சொன்ன அந்த நபர் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டார்.
இரண்டு பிணங்கள் தெரிந்தது அகோரத்தின் கண்களுக்கு
Leave a comment
Upload