தொடர்கள்
தொலைக்காட்சி
பாராசூட் - ஒரு பார்வை - மரியா சிவானந்தம்

20241106202235977.jpeg

சென்ற வாரம் வெளிவந்த பாராசூட் வெப் சீரிஸ் , சமீபத்தில் பார்த்த குறுந்தொடர்களில் சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது .

இரு குழந்தைகள் , அவர்களின் பெற்றோர் அடங்கிய சிறு குடும்பத்தின் கதை இது .

எளிமையான ஒரு கதையை வலிமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித் .

வருண் , ருத்ரா பள்ளி படிக்கும் குழந்தைகள் .இவர்களது தந்தை சண்முகம் வீடு வீடாக சிலிண்டர் போடுபவர். தாய் லட்சுமி .

சண்முகம் தன் சக்திக்கு மேலாக ஒரு பெரிய பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து விட்டு ,அவர்கள் நன் முறையில் வளர்க்க பாடுபடுபவர் . இந்த ஆசையால் பிள்ளைகளை மிகவும் கண்டிப்புடன் நடத்துகிறார் .

எத்தகைய கண்டிப்பு என்றால் , மகன் தவறு செய்தால் கம்பை எடுத்து விளாசும் அளவுக்கு கண்டிப்பானவர் . அவர் அடிக்கும் அடியில் வருண் தானாகவே 'ஒன்னுக்கு 'போவான் என்றால் பாருங்கள்.

தந்தை வீட்டில் இருந்தாலே இருவரும் பயந்து நடுங்குகிறார்கள் .

மகள் ருத்ரா வகுப்பில் முதல் மார்க் என்றால் , மகன் வருண் இரண்டு பாடங்களில் பெயில் . அப்பாவிடம் ரேங்க் கார்டை காட்டி கையெழுத்து வாங்க கூட வருண் பயப்படுவான்.

அப்பாவின் டிவிஎஸ் 50 க்கு பாராசூட் என்று பெயர் .அதை எடுத்துக் கொண்டு , தங்கையை பின்னால் உட்கார வைத்து ரைட் போகும் வருண் அதை தொலைக்க நேர்கிறது . தந்தைக்குப் பயந்து ,வீட்டுக்குச் செல்ல இருவருமே பயப்படுகிறர்கள் .தாங்களே அந்த வண்டியைத் தேடி செல்கிறார்கள்.

பிள்ளைகளைக் காணாத லட்சுமியும் ,சண்முகமும் ட்ராபிக் இன்ஸ்பெக்டர் உதவியுடன் தேடி கண்டு பிடிப்பது கதை .

இந்த தேடுதலில் குழந்தைகள் அனுபவிக்கும் இடையூறுகள் ,அவர்களைத் தேடி செல்லும் பெற்றோரின் பயணம் இரண்டையும் சுவாரஸ்யமாக்கி இருக்கிறார் இயக்குனர்.

அதீத செல்லம் கொடுத்து , பிள்ளைகளைக் கொண்டாடும் இக்கால பெற்றோரில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக சண்முகத்தின் பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது .

முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த பெற்றவர்களின் மனநிலை இப்படித்தான் இருந்தது. பிள்ளைகளின் சிறு தவறுக்காகவும் அவர்களை அடித்து , துவைக்கும் அந்தக் கால மனநிலை இப்போதும் சிலரிடம் இருப்பதை வேதனையுடன் காட்டியுள்ளார் இயக்குனர் .

"அடியாத மாடு படியாது " என்று சொல்லி கொடுமையாக நடத்தும் மனநிலை இக்காலத்துக்கு ஒத்து வராது . பிள்ளைகளை அன்புடன் நடத்துவதும் , தவறு செய்தாலும் பெற்றவர்களிடம் அணுகி ,வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த குறுங்கதை சொல்கிறது .

பரபரப்பாக நகரும் காட்சிகள் , குழந்தைகளின் வெகுளித்தனம் , தாய் லட்சுமியின் கண்ணீர் போராட்டம் . சண்முகத்தின் முரட்டுப் பிடிவாதம், காவல்துறையின் இணக்கமான அணுகுமுறை என்று எல்லாமே தொய்வின்றி நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது .

சண்முகமாக நடிக்கும் கிஷோர் , லட்சுமியாக நடிக்கும் கனி, இன்ஸ்பெக்டராக நடிக்கும் கிருஷ்ணா என்று எல்லோரும் உணர்ச்சி பூர்வமான நடிப்பை தந்திருக்கிறர்கள் . வருண் , ருத்ரா வாக நடிக்கும் ரித்விக் ,இயல் இருவரும் அத்தனை பொருத்தமாக ,ஏற்ற பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

குழந்தை வளர்ப்பில் சரியான அணுகுமுறையை தெளிவான மொழியில் சொல்லி இருக்கும் பாராசூட் அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய குறுந்தொடர் .

Hats Off ‘Parachute ‘Team !