தொடர்கள்
ஆன்மீகம்
சர்வ தோஷங்கள் போக்கும் பஞ்சநரசிம்மர் தரிசனம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Darshan of Panchanarasimha which cures all evils!!

பாலகன் பிரகலாதனைக் காக்கத் தூணிலிருந்து வெளிப்பட்டு, இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடன், மனித உடலோடு தோற்றமளிக்கிறது.
தமிழ்நாட்டின், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச்
சுற்றி ஐந்து நரசிம்மர் கோயில்கள் அமைந்துள்ளது.

திருக்குறையலூரில் உக்கிர நரசிம்ம பெருமாள்,
மங்கை மடத்தில் வீர நரசிம்ம பெருமாள்,
திருநகரியில் ஹிரண்ய நரசிம்ம பெருமாள்,
திருநகரியின் அதே கோயிலில் யோக நரசிம்ம பெருமாள்,
திருவாலியில் லட்சுமி நரசிம்ம பெருமாள்

இவை, ‘பஞ்ச நரசிம்ம ஸ்தலங்கள்’ என அழைக்கப்படுகின்றன.

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இந்த ஐந்து ஸ்தலங்களிலும் மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த கோயில்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி அனைத்து நன்மைகளையும் பெற்று நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருக்குறையலூர் உக்கிர நரசிம்ம பெருமாள்:

Darshan of Panchanarasimha which cures all evils!!

இக்கோயில் , சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. குறைகளை அகற்றும் ஊர் என்பதே திருக்குறையலூர் என்று மருவி அழைக்கப்படுகிறது. பஞ்ச நரசிம்ம தலங்களில் முதலாவது இத்தலம்.
மிகவும் பழமையான இத்தலத்தை 'ஆதி நரசிம்மர் தலம்' என்றும், தெற்கில் மிகவும் உயர்ந்த நரசிம்ம ஸ்தலம் என்பதால் 'தட்சிண நரசிம்மர் தலம்' என்றும் சிறப்பு பெயரிட்டு அழைக்கிறார்கள் பத்ம புராணம், நாரத புராணத்தில் இத்தலம் ஸ்ரீ பூரண புரி, பூரண நரசிம்ம ஷேத்திரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. கருவறையில் உக்கிர நரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். நரசிம்மரை இவ்வாறு இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது என்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். திருமங்கை ஆழ்வாரின் அவதாரத் தலமான இங்கு அவருக்கும் குலசேகராழ்வாருக்கும் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் அமாவாசை, சுவாதி நட்சத்திரம், பிரதோஷம் ஆகிய நாட்களில் உக்கிர நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. பித்ரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் அகலும். நவக்கிரக தோஷம் கொண்டவர்கள் தங்களின் வயதுக்கு ஏற்றபடி நெய் தீபமேற்றி ஏழு அல்லது ஒன்பது வாரங்கள் வழிபட்டு வந்தால் தோஷங்கள் விலகும். நரசிம்ம ஜெயந்தி அன்று இங்கு நடைபெறும் ஸ்ரீமகா சுதர்சன யாகத்தில் கலந்து கொண்டு நரசிம்மரைத் தரிசித்தால் நீங்காத செல்வம் கிட்டும் என்பது ஐதீகம்.

மங்கைமடம் வீர நரசிம்ம பெருமாள்:

Darshan of Panchanarasimha which cures all evils!!

இந்த கோயில் சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பஞ்ச நரசிம்ம தலங்களில் இரண்டாவது ஸ்தலம். மன்னனாகப் பிறந்து ஆழ்வார் எனப் போற்றும் வகையில் திருமங்கை ஆழ்வார் போற்றப்பட்டதற்குக் காரணமான திருத்தலம். ஹிரண்யாசுரனுக்கு வரம் அளித்த தோஷத்திற்கு ஆளான சிவபெருமான், மயன் மற்றும் யமன் ஆகியோருக்கு ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீநரசிம்மராகத் திருக்காட்சி தந்தருளிய ஸ்தலம்.
இந்தக் கோயிலின் மூலவர் ஸ்ரீ வீர நரசிம்மர். சாளக்கிராம கல்லினால் ஆன அழகுத் திருமேனி. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீரங்கநாதர். தாயார் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார். திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னனாக இருந்த போது ஸ்ரீவைர நரசிம்மர் எனப் போற்றப்பட்ட இந்த நரசிம்மர், பிறகு வீர நரசிம்மர் என அழைக்கப்பட்டார். விரும்பியபடி மண வாழ்க்கை அமையவும், பிரிந்த தம்பதி சேரவும், அரசியலில் வெற்றி பெறவும், மரண பயத்தை வெல்லவும் இங்கேயுள்ள செங்கமல புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீ நரசிம்மருக்குத் துளசி மாலை சாத்தி வில்வத்தால் அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி, தயிர்ச் சாதம் படையலிட்டு வழிபட்டால் விரைவில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.

திருநகரி ஹிரண்ய நரசிம்ம பெருமாள், யோக நரசிம்ம பெருமாள்:

Darshan of Panchanarasimha which cures all evils!!

திருக்குறையலூர் உக்கிர நரசிம்மரையும் மங்கைமடம் வீர நரசிம்மரையும் வழிபட்டு, அடுத்ததாக, மங்கைமடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருநகரி யோக நரசிம்மரையும் ஹிரண்ய நரசிம்மரையும் வழிபடலாம். பஞ்ச நரசிம்ம தலத்தில், மூன்றாவது மற்றும் நான்காவது திருத்தலம் எனப் போற்றப்படுகிறது. இங்கு இரண்டு நரசிம்ம மூர்த்தங்களும் ஒரே தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பது சிறப்பு. இந்தத் தலத்தின் மூலவர் ஸ்ரீகல்யாண ரங்கநாதர். தாயார் - ஸ்ரீ அமிர்தவல்லித் தாயார். திருமங்கையாழ்வார் மற்றும் குலசேகர ஆழ்வார் இருவரும் வணங்கி வழிபட்ட தலம்.

Darshan of Panchanarasimha which cures all evils!!

இரண்யனை வதம் செய்த கோலத்தில் காட்சி தரும் ஹிரண்ய சம்ஹார நரசிம்மரைத் தரிசித்தால் எதிரிகள் தொல்லை அகலும். யோக நிலையில் உள்ள நரசிம்மரை வணங்குவதால் மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தும், ஞானத்துடன் திகழ்வார்கள்.
யோக நரசிம்மருக்கு செவ்வரளிப் பூ மாலை சாத்தி, நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரைவில் புது வீடு கட்டும் வாய்ப்பு அமையும். ஹிரண்ய நரசிம்மருக்கு நீலநிறப் பூக்கள் சாத்தி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். நிம்மதியும் சந்தோஷமும் கூடும்.

திருவாலியில் லட்சுமி நரசிம்ம பெருமாள்:

இந்த கோயில் சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் பூம்புகார் செல்லும் சாலையில் ஐந்தாவது திருத்தலமான திருவாலி உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இத்தலத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மியை தனது வலது தொடையில் வைத்தபடி காட்சியளிக்கிறார் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர். இத்தலத்தில் அமிர்தவல்லித் தாயார் கைகூப்பி வணங்கிய திருக்கோலத்தில் காட்சி தருவது விசேஷம். வியாபாரத்தில் முதலீடு செய்பவர்கள், விவசாயம் செழிக்க வேண்டும் என நினைப் பவர்கள், முதலீடு செய்கிற பணத்தையும் விதையையும் ஸ்வாமியின் திருப்பாதத்தில் வைத்து வணங்கினால், தொழில் சிறக்கும்; விவசாயம் தழைக்கும். பிரதோஷ நாளில் இங்கு வந்து லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி, அவருக்கு அபிஷேகம் செய்த எண்ணெய்ப் பிரசாதத்தைத் தலையில் தேய்த்து நீராடினால், மனோவியாதிகள் அகலும்.

சீர்காழிக்கு வந்து, சர்வ தோஷங்களைப் போக்கும் பஞ்சநரசிம்மரை ஒரே நாளில் தரிசனம் செய்து அனைத்து வளங்களையும் பெறுவோம்!!