
நேமிநாதம் என்பது ஒரு இலக்கண நூல். இந்த நூலை இயற்றியவர் குணவீர பண்டிதர் எனும் சமண சமயம் சார்ந்த புலவர். 900ஆண்டுகளுக்கு முன், குலோத்துங்க சோழன் காலத்து வாழ்ந்தவர். காஞ்சி மாநகருக்கு அருகே களந்தை எனும் ஊரைச் சேர்ந்தவர். தொல்காப்பியத்துக்குப் பிறகு இந்த நூல் இயற்றப்பட்டது. காலத்தால் நன்னூலுக்கும் முந்தையது. நன்னூலும் வந்தபின்னர், இதன் அளவைக் கருதி சின்னூல் என்று அழைக்கப்பட்டதாய் தெரிகிறது.
இந்நூலில் சொல், மற்றும் எழுத்திலக்கணங்களை பற்றி மட்டும் வெண்பாக்களாய், இரண்டு அதிகாரங்களாய் இயற்றப்பட்டுள்ளது. நூற்பெயரைத் தான் சார்ந்த சமயம் சார்ந்து அமைத்திருக்கிறார் குணவீரப் பண்டிதர். நேமிநாதர் எனும் சமணமத தீர்த்தங்கரர் ஒருவரின் பெயரையே தன் நூலுக்கும் வைத்து அழகு பார்த்திருக்கிறார்.(சில தற்கால திரைப் படங்களின் பெயருக்கும் படத்தின் கதைக்கும் ஏதும் சம்பந்தமில்லாது இருப்பது போல் இலக்கண நூலும் அதற்கான பெயரும் பொருந்தாது நிற்பதாய்ப் படுகிறது.) இன்னூலாசிரியரின் இன்னுமொரு நூல் ‘வச்சணந்தி மாலை” என்பதாகும்.
நூற்முதலில் புலவர் வழங்கிய அவையடக்க வெண்பா நெஞ்சை அள்ளுகிறது. கேளுங்களேன்:-
உண்ண முடியாத ஓதநீர் வான்வாய்ப்பட்
டெண்ண அமுதான தில்லையோ- மண்ணின்மேல்
நல்லாரைச் சேர்தலால் நான்சொன்ன புன்சொல்லும்
எல்லாருங் கைக்கொள்வர் ஈங்கு.
பொருள்: இந்தமண்ணில் உள்ள யாருமே அருந்தமுடியாத நிலையில் உள்ள உப்புநீர் ஆவியாய் மேகமாகி மழையாக பொழியும் காலத்து, அதுவே அமுதமாய் பருகுவதற்கு உகந்ததாய் மாறுவதைப் போல்., நான் உரைக்கும் பிழைகள் மலிந்த சொற்களும் நல்லோர்களால் படிக்கப் படுதலால் அனைவரும் ஏற்கும் தகுதி பெறும்.
பெயர்கள் திரிதலை விளக்கும் வெண்பா ஒன்று பார்ப்போம்:-
பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடுஓடாம்
நீராகு நீயிர் எவனென்ப-தோருங்கால்
என்என்னை என்றாகும் யாமுதற்பேர் ஆமுதலாம்
அன்ன பொழுதுபோ தாம்
வழக்கில் இருந்த சில சொற்கள் எவ்வாறு திரிந்து வழங்கப்படுகின்றன என்று பட்டியலிடுகிறார். இந்தத் திரிபுகள் வழுவாய் ஆகாமல் ஏற்றுக் கொள்ளப்படும்.
பெயர் - பேர்
பெயர்த்து –பேர்த்து
ஒடு-ஓடு
நீயிர்- நீர்
எவன்-என்,என்னை
பொழுது-போது
‘யா’வை முதலாய் உடைய பெயர்‘ஆ’வை முதலாக்கியும் வரும் என்கிறார் (உதாரணம்—யார்?-ஆர்? யானை-ஆனை)
பெரும்பாலோர்க்கு பள்ளிப் பருவத்தில் இலக்கணம் மிகவும் கடினமானதாய் தோன்றும். அக்காலத்தில் பாடல்களாகவே இலக்கணத்தை அமைத்ததற்கு காரணம், அவை மனனம் செய்ய சுலபமாய் இருக்கும் என்றுதான்.
இலக்கணமானது இலக்கியம் போன்று வாசிப்பவரை வேறு உலகத்திற்கு உணர்ச்சிப் பல்லக்கில் கூட்டிச் செல்லும் திறன் வாய்ந்தது இல்லை. மொழியை செம்மையாகவும், தவறுகள் இன்றி கையாளவும் துணை புரிகிறது. அடிப்படை இலக்கண அறிவு இருந்தால் கூட மொழியைத் திறம்பட பயன்படுத்த இயலும். நம் தமிழ் அள்ளஅள்ளக் குறையாத செல்வம். அடுத்த தலைமுறைக்கு இவற்றை அறிமுகப்படுத்துதல் நம் கடமை.
எப்போதோ என் நண்பன் என்னைக் கேட்டது சட்டென்று நினைவுக்கு வருகிறது. “அந்தக் காலத்தில் மக்களில் சிலரே புலவர்களாய் இருந்தார்கள். நிறையபேர் போர் வீரர்களாய் இருந்தார்கள். ஏன் தெரியுமா?”
“நாட்டுப் பற்று. இதிலென்ன சந்தேகம்?” என்றேன்.
“நாட்டுப் பற்றா? ஒரு புடலங்காயும் இல்லை. புலவனாகிறதுக்குப் படிச்சா ஆசிரியன் கிட்ட எழுத்தாணியால சின்ன சின்னதாய்க் குத்து வாங்கி ,கொஞ்சம் கொஞ்சமா உயிர விட்டாகணும். போர்வீரன்னா எதிரி வீசுன கத்தில டக்குன்னு போயிடலாம் . அதான் எல்லோரும் போர் வீரர்களாய்ப் போயிட்டாங்க.
இதை ஒரு இலக்கணவகுப்பு முடிந்தவுடன் சொன்னான்..

Leave a comment
Upload