
ஊழிக்காலத்து பெரு வெள்ளத்தில் சிக்கி நேபாளம் மூழ்கி தத்தளித்துக் கொண்டுள்ளது.
இமயமலையில் திடீரென பனிப்பாறை உடைந்து அங்கு உற்பத்தியாகும் போடேகோஷி நதியில் தோன்றிய வெள்ளப்பெருக்கில் அந்நாட்டின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்கள் பெரிதும் சிதைவடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள், செல்போன் டவர்கள், வாகனங்கள் என்று எல்லாமே தண்ணீரில் அடித்துக் கொண்டு செல்வதைப் பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வு கண்முன்னே நாசமாகி கொண்டிருப்பதைக் காண சகிக்கவில்லை.
இந்த பேரழிவு மனித உயிரை விட்டு வைக்கவில்லை. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தினமும் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் தினம் கூடுகிறது.
உள்நாட்டு மக்கள், வெளிநாட்டவர், சுற்றுலா பயணிகள்,கைலாஷுக்கு ஆன்மிகப்பயணம் பயணம் சென்றவர்கள் என்று காணாமல் போனவர்களின் பட்டியல் நீள்கிறது. இவர்களை உயிருடன் மீட்க பல்வேறு குழுக்கள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அப்புகைப் படங்களைப் பார்க்கும் போது இன்னும் மண்ணில் மறையாத மனிதமும், அதில் பெருகும் நேசமும், விலை மதிப்பில்லாத மனித உயிரின் மாண்பும், பெருவெள்ளத்தின் ஊடே ஊற்றெடுக்கும் நம்பிக்கையும் நம்மை கண்கலங்க வைக்கிறது.

இப்போது வெள்ளம் வடிந்து வருவதால் , பேரிடர் மேலாண்மை உதவியால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இம்மீட்பு பணி காட்சிகள் உலக மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
ரகவா மாவட்டத்தில் திமுரே என்னும் கிராமத்தில் மீட்புப்பணி நடைபெற்று கொண்டிருந்த போது ஒரு மெல்லிய அழுகுரல் சப்தம் கேட்டது .மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதக் காவல் படையினர் விரைந்து செயல்பட்டு ,நீண்ட நேரத்துக்குப் பின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்த மனீஷா என்னும் ஆறு வயது சிறுமியை மீட்டனர். பெருவெள்ளத்தில் சிக்கி மூன்று நாட்களாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்த அப்பெண்குழந்தை பின்னர் சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டது .

மனீஷாவை மீட்டெடுத்த அந்தத் தருணம் மீட்புப் படையினருக்குப் புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தந்தது. சேறும், சகதியும் சூழ்ந்த, இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குக் கீழே இன்னும் மனிதர்கள் உயிருடன் இருக்கக் கூடும் என்னும் பெரு நம்பிக்கையை மானசா தந்துள்ளாள். இன்னும் உயிரைத் தக்க வைத்துக் காத்திருக்கும் மனிதர்களைத் தேடி, படையினர் முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர்.
இதுவரை உயிருடன் பலர் மீட்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் வடியத் தொடங்கிய இடங்களில் இந்த நம்பிக்கை இன்னும் வேர்ப்பிடிக்க தொடங்கியதை நாம் காணும் காணொலிகளும், புகைப்படங்களும் தெரிவிக்கின்றன. தாதிங் மாவட்டத்தில் உள்ள கல்ச்சி பகுதியில், வெள்ளத்தில் சிக்கி ஒதுங்கிய பெட்டியைக் கண்டெடுத்த மாணவி, தன் பாடப்புத்தகங்களை எடுத்து பார்க்கிறாள். அவள் கண்களில் இந்த வெள்ளத்தால் அவள் கல்வி தடைபடாது என்ற நம்பிக்கை தென்படுகிறது.
நுவாக்கோட் மாவட்டத்தில் பெல்கோட்கடி பகுதியில் நீரில் நனைந்த தன் கடையின் பொருட்களை வீதியோரத்தில் உலர்த்திக் கொண்டு இருக்கிறார். அவரது வியாபாரம் இனி நடக்கும் என்ற நம்பிக்கை அவர் கண்களில் தெரிகிறது.
மண்ணில் புதைந்த ஆயிரக்கணக்கான வீடுகளில் தேங்கி உள்ள சேற்று நீரில் , வீட்டுக்கு உபயோகப்படும் பொருளோ, தட்டு முட்டு சாமான்களோ கிடைக்குமோ என்று உயிர் தப்பி பிழைத்த மக்கள் தேடுகின்றனர். இனி வரும் வாழ்வுக்கான ஏதேனும் ஒன்றை அவர்கள் அங்கே கண்டுபிடிக்க கூடும்.
தண்ணீரில் மூழ்கி கொண்டிருக்கும் ஒருவன் கையில் கிடைத்த்தைப் பற்றிக் கொண்டு மேலே வர முயற்சிப்பான். இங்கே ஒரு சேலையைக் கயிறாக்கி அதைப்பற்றிக் கொண்டு தண்ணீரில் இருந்து மேட்டுப் பகுதிக்குச் செல்லும் மக்களைக் காண்கையில், பேரிடர் காலங்களில் மனிதன் எதையும் இழக்கலாம், இழக்கக் கூடாதது நம்பிக்கை நம்பிக்கை ஒன்றே என்று புரிகிறது.

உடலில் உயிர் உள்ளவரை மனதில் நம்பிக்கை இருக்க வேண்டும். நேபாள மக்களின் பழைய வாழ்வு மாறி, புதிய ஒரு அத்தியாயம் தொடங்கி உள்ளது. நேபாள அரசு மட்டுமன்றி, உலக நாடுகள் பலவும் இம்மீட்பு பணியில் கைகோர்த்து நிற்பதையும், நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதையும் காணும் போது விரைவில் நேபாளம் மீண்டு விடும் என்ற உறுதி தோன்றுகிறது.
Hope springs eternal in the human breast (Alexander Pope)
எல்லா இன்னல்களில் இருந்தும் , இயற்கைப் பேரிடர்களில் இருந்தும் மனிதம் தன்னைத்தானே காத்துக் கொண்டு, தன் சக உயிரைக் காக்கவும் உதவிக்கரம் நீட்டும் . அதற்கான நம்பிக்கை அவன் நெஞ்சில் என்றும் ஊற்றெடுக்கும்.

Leave a comment
Upload