தொடர்கள்
கதை
.நம்பிக்கை - கி. ரமணி

20260805084357841.jpg

அசோக் நகரின் மையத்தில், பதினோராவது அவென்யூவில், பதினேழு மாடிகளுடன் கட்டப்பட்ட மிக உயரமான புதிய குடியிருப்பு “ஸ்வர்கா”. 350 வீடுகள்.

லோகேஸ்வரன், ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வைஸ் பிரெசிடெண்ட் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, ரெண்டே கால் கோடி ரூபாய் கொடுத்து அந்தக் குடியிருப்பில் வந்து செட்டில் ஆகிவிட்டார். அவரும் மனைவி ராஜியும் மட்டும்.

எப்போது பார்த்தாலும் யாரிடமாவது கட்டளை இடுவது போல் பேசிக்கொண்டே இருந்தவருக்கு, இப்போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது.

அவரே குடியிருப்பு அசோசியேஷன்காரர்களிடம் பழகிப் பேசி, படுத்தி, பிளாட் அசோசியேஷனில் செகரட்டரி ஆகிவிட்டார்.

அந்தக் குடியிருப்பில் சுத்தம் செய்பவர்கள், காவலாளிகள், தோட்டப் பணியாளர்கள், தியேட்டர், ஜிம், கோவில், நீச்சல் குளம் என்று எங்கெல்லாம் ஆட்கள் வேலை பார்த்தார்களோ, அவர்கள் யாராக இருந்தாலும் லோகேஸ்வரன் சாரைப் பார்த்தால் ஒரு சல்யூட் போடாமல் போய்விட முடியாது.

அவர்களின் பயமும் மரியாதையும் அவருக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.

“செகரட்டரி ரொம்ப ஸ்ட்ரிக்ட்” என்று அவர் காதில் பட்டும் படாமலும் யாராவது சொன்னால் ஏக குஷியாகிவிடுவார்.

கிட்டத்தட்ட ஒரு மகாராஜாவின் பந்தாவுடன் அந்தப் புதிய குடியிருப்பில் வாழத் தொடங்கினார்.

யாரையும் நம்ப மாட்டார்.

சிறு தவறுகளைக்கூட மன்னிக்கக் கூடாது என்பது அவருடைய கொள்கை.

அடிக்கடி மனைவி ராஜியுடன் சண்டை நடக்கும்.

ராஜி அடிக்கடி சொல்வாள்.


“நம்பிக்கை இல்லாத வாழ்க்கை நரகம்.”

லோகேஸ்வரன் சிரிப்பார்.

“என்னுடைய ரோல் ஒரு நீதிபதியோடது போல. இதில் உண்மைகள் மட்டும்தான் முக்கியம். நம்பிக்கைகள் அல்ல.”

போன மாதம் ஒரு நாள், காலனி விஷயமாக அலைந்துவிட்டு இரவு ஏழு மணிக்கு தன் பிளாட்டுக்குள் வந்தார்.

முகத்தில் கொஞ்சம் மந்தகாசமான புன்னகை.

“எந்த நாட்டை ஜெயிச்சுட்டு வந்தீங்க?” என்று கேட்டாள் ராஜி சிரிப்புடன்.

“வழக்கம்போல நீதிபதி வேலைதான்.

நம்ம காலனிக்கு ஈஸ்ட் சைடு கேட் இருக்கு இல்லையா? அதுக்குப் புதுசா ஒரு வாட்ச்மேன் இருக்கான். ஒரு மாசமா வேலை பார்க்கிறான். கிருஷ்ணனோ என்னவோ பேரு.

டி-18-ல் இருக்கிற சாப்ட்வேர் இன்ஜினியர் முத்துசாமியோட குழந்தை தனியா ஓடி வாட்ச்மேன் ரூமுக்குள்ள போயிருக்கு. திரும்பி வெளியில வந்திருக்கு. அஞ்சு நிமிஷம் குழந்தையைக் காணாமல் தேடி வந்து முத்துசாமி கூட்டிட்டுப் போயிட்டான்.

சாயங்காலம் குழந்தை கழுத்துல இருந்த தங்கச் செயினைக் காணோம்னு கம்ப்ளைன்ட் பண்றான்.

எங்கெல்லாம் குழந்தை போச்சுன்னு கேட்டேன். ஒவ்வொரு இடத்துக்கும் அவனைக் கூட்டிக்கொண்டு போய் விசாரிச்சேன்.

கடைசில குழந்தை வாட்ச்மேன் கேபினுக்குள்ள போயிட்டு வெளியில் வந்த மாதிரி மத்தவங்க சொன்னாங்க.

உள்ளே போய் பார்த்தா, வாட்ச்மேன் ரூம்ல டேபிள் டிராயருக்குள்ள அந்த நகை இருக்கு.

வாட்ச்மேன் கிட்ட கேட்டா, நகை கீழே வெளில கிடந்தது. யாருன்னு கண்டுபிடித்து கொடுக்கறதுக்காக எடுத்து வச்சேன்னு சொல்றான்.”

“நீங்க என்ன பண்ணீங்க?”

“திருட்டு ராஸ்கல்! உன்னை போலீஸ்ல புடிச்சுக் குடுத்துடுவேன். மரியாதையா ஒத்துக்கோ. விட்டுடுறேன்.”

“அவன் என்ன சொன்னான்?”

“பிடிவாதமா நிக்கிறான். அவன் திருடலன்னு சொல்றான்.”

“குழந்தைகிட்ட கேட்டீங்களா?”

“சின்ன குழந்தை. பேச வரலை .”

“அந்த வாட்ச்மேன் கிருஷ்ணன் நல்ல பையனா தான் இருக்கான். என்கிட்ட ரெண்டு மூணு தரம் பேசியிருக்கான். ஒரு தரம் என் கையில இருந்த காய்கறிப் பையை வாங்கி நம்ம வீட்டு வரைக்கும் கொண்டு வந்து வச்சான். ஆனா அவன் பேச்சுதான் ரொம்ப சரளமா இல்லை.”

“உன் பைய எடுத்துக்கொண்டு வந்தவன். அதனால அவன் திருடலைன்னு சொல்ல வரியா?”

“அப்படி நான் சொல்லல. துளியாவது நம்பிக்கை வேணும் எல்லா மனுஷங்க மேலயும்.”

“அவன் மூஞ்சியையும் கண்ணையும் பார்த்தாலே தெரியுது. தப்பு பண்ணியிருக்கான்னு.”

சற்று இடைவெளிக்குப் பிறகு லோகேஸ்வரன் சிரித்தார்.

“பேரைக் கேட்டா கிருஷ்ணன்னு வேற சொல்றான். அப்ப அந்தக் கள்ள கிருஷ்ணன் போல நீயும் இருக்க சான்ஸ் இருக்கேடா! ஒத்துக்கோ. உன்னை விட்டுடுறேன்னு அவன் கிட்டயே சொல்லிட்டேன்.”

“அப்புறம்?”

“வேற வழியில்லாம கடைசில மனமில்லாமல் ஒப்புக்கொண்டு அப்படியே கிளம்பிப் போயிட்டான்.”

“ஐயோ பாவம்! அப்படியே அவனை அனுப்பிட்டீங்களாக்கும்!”

“வேற என்ன பண்ணச் சொல்ற? பொன்னாடை போத்தி அனுப்பி இருக்கணுமா ?”

ராஜிக்கு முகம் சோர்ந்து போச்சு.

“அவன் வடக்கே அவன் ஊரைப் பார்த்துப் போறேன்னு போயிட்டான். வேணும்னா அங்கே போய் திருடிக்கட்டும்.”

கடகட என்று சிரித்தார்.

ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே உள்ளே சென்றுவிட்டாள் ராஜி.

---

ஆறு மாதங்கள் ஆச்சு.

ஆகஸ்ட் மாதம், ஒரு சிறு நண்பர்கள் குழுவோடு கைலாஷ் போகத் திட்டமிட்டார் லோகேஸ்வரன்.

மொத்தம் பத்து பேர்.

ஐந்து கணவன்–மனைவிகள்.

கிளம்பி முதலில் காத்மாண்டுவுக்கு விமானத்தில் சென்றார்கள்.

பின் காத்மாண்டு விலிருந்து ஒரு சிறிய பேருந்தில் ஏறி திமுரே வந்து சேர்ந்தார்கள்.

அங்கிருந்து ராசுவாகாதி பார்டர் இன்னும் சுமார் மூன்று கிலோமீட்டர் மட்டுமே.

அதைக் கடந்தால் நேபாளம் முடிந்து, சீனா — திபெத் தொடங்கிவிடும்.

அங்கிருந்து தான் அவர்கள் கனவு கண்டிருந்த கைலாஷ் செல்லும் உண்மையான பயணம்.

அந்தக் குறுகிய மலைச்சாலையில் பேருந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்தது.

காலை மணி ஒன்பதரை இருக்கலாம். திமுரேயைத் தாண்டியதும் மலைப்பாதை இன்னும் குறுகியது.

வலதுபுறம் செங்குத்தான மலை. இடதுபுறம் கீழே கருமையாக ஓடிக்கொண்டிருந்த ஆறு.

அற்புதமான காட்சி.

பஸ்ஸின் பின்புறம் இருந்த ராஜி ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

திடீரென்று பயந்தாள்.

“அங்கே பாருங்க... மலைல ஏதோ புகை மாதிரி வருது!”

அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

அது புகை இல்லை.

முதலில் மெல்லிய பழுப்பு நிற மேகம் போலத் தெரிந்தது.

அடுத்த சில விநாடிகளில் அந்த மேகம் பெரிதாகிக்கொண்டே வந்தது.

“மண் சரிவா?” என்று லோகேஸ்வரன் கேட்டார்.

டிரைவர் பதில் ஒன்றும் சொல்லாமல் பேருந்தை நிறுத்திவிட்டான்.

அடுத்த நொடியில் ஒரு பயங்கரமான சத்தம்.

“ஓஓஓஓ...”

மலை முழுவதும் அதிர்வது போல இருந்தது.

அவர்கள் பார்த்தது பொங்கி வரும் தண்ணீர் மட்டும் அல்ல.

கருமையான வெள்ளம்.

அதற்குள் உருண்டு வரும் பாறைகள்.

மரத்துண்டுகள்.

சேறு.

“எல்லாரும் வண்டியிலிருந்து கீழே இறங்குங்க!” என்று டிரைவர் கத்தினான்.

பத்து பேரும் பதற்றத்துடன் பேருந்திலிருந்து இறங்கினர்.

“மலை மேலே எல்லாரும் ஏறுங்க!”

டிரைவர் மீண்டும் கத்தினான்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு மலைச்சரிவில் ஏறத் தொடங்கினர்.

மண் வழுக்கியது.

செருப்புகள் கழன்று விழுந்தன.

எழுபது வயதான சுப்பிரமணியன் ஒருமுறை தடுமாறி கீழே விழப்போனார்.

“அவரைப் பிடிங்க!” என்று சத்தம் போட்டார் லோகேஸ்வரன்.

மூன்று பேர் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்தனர்.

கீழே பார்த்தபோது அவர்களுடைய பேருந்து இன்னும் சாலையில் இருந்தது.

அடுத்த சில விநாடிகளில் வெள்ளம் அதை அடைந்தது.

ஒரு பெரிய பாறை உருண்டு வந்து பேருந்தின் முன்பகுதியில் மோதியது.

“அய்யய்யோ!”

யாரோ கத்தினார்.

அந்தப் பத்து பேரும் இன்னும் வேகமாக மேலே ஏற வேண்டிய கட்டாயம்.

சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகு, அவர்கள் ஒரு பாறை மேட்டில் ஏறி ஒன்றாகச் சுருண்டு உட்கார்ந்தனர்.

“இப்போ நாம் தப்பிச்சுட்டோமா?”

யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

ராஜியே மெதுவாகச் சொன்னாள்:

“கடவுளே... எங்க எல்லாரையும் காப்பாத்திடுப்பா!”

ஆறு இருந்த இடமே தெரியவில்லை.

எங்கும் சேறும், தண்ணீரும், பாறைகளும்.

ஆனால் அடுத்த நிமிடத்தில் ராஜியின் முகம் வெளிறியது.

“தண்ணி... நம்ம பக்கமும் வருது!”

அவர்கள் இருந்த பாறையின் கீழ்ப்பகுதியைச் சுற்றி சேறு கலந்த நீர் மேலேறிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் தூரத்தில் மேலே மலையிலிருந்து மூன்று மனிதர்கள் ஓடிவருவது தெரிந்தது.

அவர்கள் உள்ளூர் நேபாளிகள். ஒருவன் கையில் நீண்ட கயிறு.

மற்றொருவன் ஒரு தடிமனான துணி. மற்றவன் கையில் ஒரு மூங்கில் கம்பு.

“இங்கே இருக்காதீங்க! இன்னும் மேலே வாங்க!” தமிழர்களுக்கு நேபாளி மொழி புரியவில்லை.

ஆனால் அந்தக் குரலில் இருந்த அவசரம் மட்டும் புரிந்தது. அவர்கள் கைகளை அசைத்து மேலே வரச் சொன்னார்கள்.

ஒரு மூதாட்டி வழுக்கி விழுந்தாள். உடனே ஒரு நேபாள இளைஞன் கீழே இறங்கி அவளுடைய கையைப் பிடித்தான்.

மற்றொருவன் கயிற்றை ஒரு பாறையைச் சுற்றிக் கட்டினான். பின் கீழே தொங்க விட்டான்.

“ஒவ்வொருத்தரா வாங்க!”

அந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு பத்து தமிழர்களும் இன்னும் உயரமான இடத்திற்குச் சென்றனர்.

கடைசியாக லோகேஸ்வரன் மேலே வந்தபோது, அவரை இழுத்துக்கொண்டிருந்த நேபாள இளைஞனின் கையும் நடுங்கிக்கொண்டிருந்தது. அவனுடைய கையை இரு கைகளாலும் பிடித்தார் லோகேஸ்வரன்.

“தம்பி... நீ இல்லன்னா...”

அவன் சிரித்தான். அவனுடைய மப்ளருக்குள் இருந்த முகத்தை ராஜி உற்றுப் பார்த்தாள்.

திடீரென்று அவள் முகத்தில் ஆச்சரியம்.

“அப்பா... கிருஷ்ணா!” அவன் திரும்பிப் பார்த்தான்.

“எங்க பிளாட்டுக்கு செக்யூரிட்டி கார்ட்டா இருந்த நீயா ?”

லோகேஸ்வரன் திடுக்கிட்டுப் போனார்.

கிருஷ்ணன் நிதானமாக உடைந்த தமிழில் சொன்னான்:

“அம்மா... நான் தான். உங்க ஸ்வர்கா பிளாட்ஸ்ல வாட்ச்மேனா இருந்தேன்.”

சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

“என் பேரு கிருஷ்ண பகதூர் ஷெர்பா.”

லோகேஸ்வரனின் கண்கள் அவனை விட்டு நகரவில்லை.

கிருஷ்ணன் மெதுவாகச் சிரித்தான்.

“கிருஷ்ணன்னு பேர் வர்ரதால... சார் நான் திருடனா இருக்க வாய்ப்பு இருக்குனு சொல்லிட்டு வேலைவிட்டு என்னை விரட்டிட்டாரு .”

சிறிது இடைவெளி.

“அதனால்தான் நான் எங்க ஊருக்குத் திரும்பி வந்துட்டேன்.”

அவன் கீழே கொந்தளித்துக்கொண்டிருந்த வெள்ளத்தைப் பார்த்தான்.

பிறகு லோகேஸ்வரனைப் பார்த்தான். “எல்லாத்துக்கும் ரீசன் இருக்கு சார். நான் இங்க வரதுக்கு.....”

லோகேஸ்வரன் தலை குனிந்தார்.

கிருஷ்ணன் சிரித்தபடியே சொன்னான்:

“நேபாளி திருட மாட்டான் சார்.”

ஒரு கணம் நின்று, பின்னர் சொன்னான்:

“தேவை வந்தா... பகவான் கிருஷ்ணன் மாதிரி மலையைக்கூட தூக்கிப் பிடிச்சு மனுஷங்களைக் காப்பாத்துவான்.”

அவர் கிருஷ்ணனின் இரு கைகளையும் தன் கைகளால் பற்றிக்கொண்டார்.

வாழ்க்கையில் முதல் முறையாக லோகேஸ்வரனின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

அந்த மலைச்சரிவின் மேலே, மொழி தெரியாத பத்து தமிழர்களும், அவர்களைக் காப்பாற்றிய மனிதாபிமானம் கொண்ட சில நேபாளிகளும் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.

கீழே இன்னும் வெள்ளம் பொங்கிக்கொண்டிருந்தது.

ஆனால் அந்தப் பத்து பேரின் மனதிலும் ஒரு நிம்மதி நிறைந்திருந்தது.

ரொம்ப எளிமையான காரணம் தான்.

சக மனிதர்களிடம் ஏற்பட்ட நம்பிக்கை.!

லோகேஸ்வரனுக்கு நம்பிக்கை மீது ஏராள நம்பிக்கை வந்தது. !!!!