தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் 20 -ஜி.ஏ.பிரபா

20260805093440442.jpeg

​ஹரப்ரியா

​ஹகார ரூபா ஹலத்ருத் பூஜிதா ஹரிணேக்ஷனா I

​ஹரப்ரியா ஹராராத்யா ஹரி ப்ரஹ்மேந்த்ர-வந்திதா II

மனித வாழ்வின் துன்பத்திற்குக் காரணம் காமம், குரோதம், பேராசை, துரோகம் ஆகியவைகளே. அம்பிகையை உபாசிப்பதன் மூலம் இந்தச் சத்ருக்களை அழித்துவிடலாம். அதற்கான 'ஹ'கார வடிவமாக இருப்பவள் அம்பிகை.

அம்பிகை வழிபாட்டில் ஈடுபட்டவர் பலராமர். அவளைப் பூஜித்ததனாலேயே பல அற்புதமான சக்திகளைக் கைவரப் பெற்றவர். அவருடைய ஆயுதமாகக் கருதப்படுவது கலப்பை. அவரால் உபாசிக்கப்பட்டவள் அம்பிகை என்பதுடன், அன்னையை"மான்விழியாள்" என்கிறது த்ரிசதீ.

மான், விழி அழகும், மருண்ட பார்வையும் உடையது. அன்பும் கருணையும் கொண்ட அந்தக் கண்கள் பல மந்திரத் திறன்களை உடையவை; ஆளுமைத் திறன் கொண்டவை. அம்பிகையின் கண்கள் மானின் விழிகளைப் போல் அழகும் அன்பும் நிறைந்து காணப்படுகின்றன.

அந்த விழிகளால் அவள் உலகைப் பார்க்கும்போது, குளிர் நிலவைப் போல் பக்தர்களின் உள்ளத்தை மகிழ்விக்கிறாள்.

"ஹரப்ரியாயை" என்கிறது த்ரிசதீ. ஈஸ்வரனுக்குப் பிரியமானவள். ஈஸ்வரனில் பாதியாகத் திகழ்பவள் அன்னை. அவளின் மான் போன்ற விழிகள் ஐயனை நோக்கும்போது, அதன் அன்பில் குளிர்ந்த ஈசன் அவள் கேட்பதையெல்லாம் தந்துவிடுகிறார் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

பக்தர்களின் நலனைத் தவிர அம்பிகை வேறு என்ன கேட்கப் போகிறாள்?

அம்பிகையின் சக்தியால் சிவன் இந்த உலகைப் படைக்கிறார். எனவே அவரால் ஆராதிக்கப்படுபவள் அன்னை. அம்பிகையை வணங்கினால் மற்ற தெய்வங்கள் தானாக நம்மைத் தேடி வரும் என்கிறது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.

"காமேஸ்வர பிரேம ரத்னமணி" என்றும் சகஸ்ரநாமம் போற்றுகிறது.

உலகங்களின் சம்கார காலத்தில் (ஊழிக்காலத்தில்) தேவர்கள் அமிர்தத்தை அருந்தியிருந்தாலும் அழிகிறார்கள். ஆனால், பாற்கடலில் இருந்து உண்டான ஆலகால விஷத்தை உண்ட பரமேஸ்வரன், அம்பாளுடைய மகிமையால் அழிவதில்லை. அம்பாள் பரமேஸ்வரனின் ஜீவநாடியாக இருக்கிறாள். எனவே பரமேஸ்வரனுக்கு மட்டும் அழிவில்லை என்கிறது சௌந்தர்ய லஹரி.உலகில் வாழ்பவர்கள் செய்யும் அனைத்துக் காரியங்களையும் அம்பிகை அறிவாள். ஐம்பூதங்கள் மற்றும் ஒன்பது சாட்சிகள் மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் சாட்சியாக இருக்கிறார்கள் என்கிறது வேதம்.

இந்த ஒன்பது சாட்சிகளாக இருப்பதும் அம்பிகையே. நாம் செய்ய நினைக்கும் நல்ல காரியங்களுக்கு வெகுமதியாக ஞானத்தை அளிப்பவள் அம்பிகை. காமேஸ்வரருடைய அன்பெனும் சிறந்த ரத்தின மணிகளைப் பெற்றவள் அன்னை. அவருடைய அன்பின் பரிபூரணத்தில் மகிழ்ந்தே அம்பிகை அனைவருக்கும் நலன் அளிக்கிறாள். தேவி, காமேஸ்வரருக்குத் தன்னிடம் இருக்கும் விலைமதிப்பில்லா அன்பைத் தருகிறாள் என்பதையே "காமேஸ்வர பிரேம ரத்னமணி" என்னும் நாமம் குறிக்கிறது.

காமேஸ்வரரின் முகத்தைப் பார்த்ததினாலேயே ஸ்ரீ கணேஸ்வரரைச் சிருஷ்டி செய்தவள் அம்பிகை. பண்டாசுர வதத்தின் போது, அசுரன் தன் மாயையால் உண்டான ஓர் எந்திரத்தைத் தேவியின் படைகளுக்கு நடுவில் வைக்கிறான். இதனால் படைகள் யுத்தம் செய்வதில் உணர்வுகள் பாதிக்கப்பட்டுப் பணிகள் தடைப்படுகின்றன. மந்திரிணி தேவி இதை அம்பிகையிடம் முறையிட, தேவி தன் அருகில் இருந்த காமேஸ்வரரை நோக்கினாள்.

புன்னகையுடனும் பிரேமையுடனும் கூடிய இருவரின் பார்வைகளும் ஒன்றுசேர, யானை முகத்துடன் ஸ்ரீ கணபதி வல்லபையான சித்தலட்சுமியை ஆலிங்கனம் செய்தவராகத் தோன்றினார்.

இவரே அனைத்துத் தடைகளையும் நீக்கி வெற்றி பெறச் செய்கிறார். விக்கினங்களைப் போக்குபவர் என்பதால் 'விக்னேஸ்வரர்' என்றும், தடைகளை நீக்கி ஞானத்தை அருளும் குருவாகவும் இவர் குறிக்கப்படுகிறார்.

தேவர்களின் துன்பத்தைப் போக்கவே சிதக்னி குண்டத்தில் தோன்றுகிறாள் அம்பிகை. அவளை "அய்யன் திருமனையாள்" என்று குறிப்பிடுகிறார் அபிராமி பட்டர். பராசக்தியை வணங்குவதன் மூலம் என்னென்ன கிடைக்கும் என்று ஒரு பாடலில் அவர் பட்டியலிடுகிறார்:

"வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை,

பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்..."

இவையெல்லாம் யாருக்குக் கிடைக்கும் என்றால், பிறைமுடி தரித்த ஐயனின் திருமனையாள் அடித்தாமரைக்கு முன் அன்பு செய்யும் தவமுடையவர்க்கே கிடைக்கும் என்கிறார்.

அம்பிகையின் அருள் இருந்தால் எதுதான் கிடைக்காது?

அவள்மேல் பரிபூரண பக்தி மட்டுமல்ல, நம்பிக்கையும் வேண்டும். பலனை எதிர்பார்த்து பக்தி செய்யக் கூடாது என்கிறது கீதை. ஆனால், அம்பிகையின் மேல் உண்மையான பக்தி வைத்துவிட்டால், அவள் எல்லாப் பலன்களையும் நமக்குத் தந்துவிடுவாள்.