
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிர்த்தப்பிய வேளச்சேரி முருகுநகர் சேர்ந்த தம்பதியினர் "இது எங்களுக்கு மறு ஜென்மம் "என்கின்றனர். உயிர் தப்பிய 21 பேரில் கபீர் தாஸ் மற்றும் அவர் மனைவி விஜய புவனேஸ்வரி தம்பதியர் கும்பகோணம் ஏஜென்சி மூலம் சென்ற அந்த 57 பேர்களில் இந்த தம்பதிகளும் ஒருவர். அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர்கள் விவரிக்கிறார்கள்.
"நாங்கள் மூன்று பேருந்துகளில் சென்று கொண்டிருந்தோம். வெள்ளம் ஏற்பட்ட ராசுவா பகுதியில் இரு மலைகளுக்கிடையே கீழே ஆறு ஓடிக் கொண்டிருக்க வளைவான அந்த பாதையில் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே சென்றிருந்தோம். அப்போது திடீரென ஒரு பெரிய ஒலி. யாரும் எதிர்பாராத தருணத்தில் கற்கள் பாறைகள் பாய்ந்து பெரும் சகதியாக வெள்ளம் பாய்ந்து ராசுவா பகுதியே சில நொடிகளில் பேரிடரில் பாதிக்கப்பட்ட பகுதியாக மாறியது. எல்லாவற்றையும் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு என்ன செய்வது என்று திகைத்து கொண்டிருந்தோம். எங்களுக்கு சில நிமிடங்கள் வரை என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எங்கள் பின்னால் வந்து கொண்டிருந்த பேருந்து சாய்ந்ததை பார்த்தோம். அதற்குப் பிறகு அங்கு நடந்த எதையுமே பார்ப்பதற்கு பயம் கலந்த பீதி ஏற்பட்டது.
திடீரென்று குண்டுவெடிப்பு போன்ற பெரிய சத்தம் கேட்டது. கற்கள் வந்து வேன் மீது விழத் தொடங்கின. ஏதோ ஒரு பெரிய அணையை திறந்தது போல் வெள்ள நீர் பாய்ந்து வந்தது .எங்கள் வேனை ஓட்டி வந்தவர் ஒரு நேபாளி. அவருக்கு இந்த சம்பவம் ஒரு புது அனுபவம் போல் தெரியவில்லை .
அவர் ஆபத்தை புரிந்து கொண்டார். வேனிலிருந்து இருந்து இறங்கி எல்லோரும் தப்பி ஓடிவிடுமாறு சொல்லியவர் அருகே இருந்த மலை உச்சியை காண்பித்து அங்கு செல்வது தான் பாதுகாப்பானது என்று சொல்லி முதலில் அவர்தான் ஓடினார். அவர் பின்னால் பயந்தபடி நாங்களும் ஓடினோம். எங்களுடன் ஓடிய 21 பேரில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் 50 வயதை கடந்தவர்கள். உயிர் தப்பிக்க சேரும் சகதியாக இருந்த அந்த மண்மேட்டில் எப்படியாவது ஏற வேண்டும் என்பதை மட்டும் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
அது எந்த அளவுக்கு அவர்களுக்கு சாத்தியம் என்பது அவர்களுக்கு புரியவில்லை. ஓடிக்கொண்டிருந்த நாங்கள் திரும்பிப் பார்த்து எல்லோரும் பாதுகாப்பாக நம்முடன் ஓடி வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தோம் .நானும் மற்றொரு பெண்ணும் பாதி வழியில் சறுக்கிவிழுந்து விட்டோம் என்று அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவரது மனைவி விஜய புவனேஸ்வரி "எங்களுக்கு எந்தப் பிடிமானமும் இல்லை எங்கள் குழந்தைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தார்கள் மரணபயம் என்னைத் தொற்றிக் கொண்டு விட்டது. அப்போது பாதுகாப்பாக மேலே சென்ற ஒரு பெண் ஸ்வெட்டரை இழுத்து மாட்டிக் கொண்டு தன்னுடைய புடவையை கழற்றி நீட்ட அதை இறுக பற்றி கொண்டு மேலே வந்தேன். எனக்கு அப்படி புடவையை கொடுத்து என் உயிரை காப்பாற்றியவர் எனது உறவினர் பூங்கொடிதான்.
அவர் முதலில் பாதுகாப்பாக சென்றுவிட்டார். எங்களுடன் வந்த குழுவில் அவர் மட்டுமே புடவை அணிந்து கொண்டு வந்திருந்தார். அந்தப் புடவை தான் என்னை காப்பாற்றியது. ஒரு பெரிய மாடி அளவு இருந்த அந்த மண் மேட்டை நாங்கள் அனைவரும் ஏறி செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகி இருக்கும். அந்த ஒன்றரை மணி நேரமும் எங்களுக்கு திகில் நிமிடங்கள் தான் அப்போது என்னுடன் வந்த இன்னொரு பெண் ஒரு மரக்கிளையை பிடித்து ஏற முயற்சி செய்ய அந்த மரக்கிளை முறிந்து விழுந்தது. பிறகு அதே புடவையை அந்த பெண்ணிடம் கொடுத்து இடுப்பில் இறுக கட்டிக் கொள்ள சொல்லி அப்படியே தூக்கி காப்பாற்றினோம். "என்கிறார் விஜய புவனேஸ்வரி.
நாங்கள் சற்று தள்ளி சென்றபோது நாங்கள் இருந்த இடம் ஒரு பேரிடர் மீட்பு மையம் என்று தெரிந்தது. அங்கிருந்தவர்கள் எங்களுக்கு தண்ணீர் சிற்றுண்டி கொடுத்து எங்களை தேற்றி ஆறுதல் சொன்னார்கள் எங்கள் குழுவில் வந்த ஒருவரின் உறவினர் தலைமைச் தலைமைச் செயலகத்தில் பணிபுரிகிறார்.
அவர் மூலம்தான் நாங்கள் அரசாங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் என்பதற்கு சாட்சியாக ஒரு புகைப்படம் ஒன்றை அவர்களுக்கு அனுப்பினோம். யாருக்கும் மலையேறி அனுபவம் இல்லை. உயிர் பயத்துடன் அந்த அனுபவத்தையும் நாங்கள் கற்றுக் கொண்டு விட்டோம் என்று கூறுகின்றனர் இந்த தம்பதியினர்.

Leave a comment
Upload