
இன்று ஆசிரியர் தினம்.
இளைய தலைமுறையை நெறிப்படுத்தி வழி நடத்திச் செல்வதில் ஆசிரியரின் பங்கு மகத்தானது. ஒரு நல்லாசிரியர் இந்த சமூகத்திற்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம். காலங்கள் மாறுகையில் மதிப்பீடுகள் மாறலாம். ஆனால் கல்வி கற்பித்தலுடன், அறம் சார்ந்த வாழ்க்கை நெறியை என்றும் கற்றுத் தருபவர்கள் ஆசிரிய பெருமக்களே,
கல்விக்கான முக்கியத்துவத்தை பெற்றோரும், மாணவர்களும் உணர்ந்துள்ளனர். ஆனால் ஆசிரியர்களின் வேலையை இன்று இணைய வளர்ச்சி, அலைபேசி, ஊடகங்கள் , சமூக வலைத்தளங்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவை கையில் எடுக்கும் சூழல் எழுந்துள்ளது. வழக்கமான வகுப்பறையில் ஆசிரியர் வழியாக கற்கும் நிலைமை மாறி, இணையத்திலும், ஆன்லைனிலும் கற்கும் புதிய தலைமுறை உருவாகி விட்டது.
முன் எப்போதையும் விட ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு சேர்ந்துள்ளது. அவர்கள் சந்திக்கும் சவால்களும் அதிகமாகி உள்ளன. மாணவர்கள் மதிப்பெண்களை மட்டும் நோக்கி செலுத்தப்படுவதும் வகுப்பறை வன்முறை, போதை கலாச்சாரம், இளம் வயது பாலியல் குற்றங்கள், அதீத ரசிக மனோபாவம் பெருகி உள்ளன.
இந்த நிலை குறித்து அனுபவம் மிக்க இரு ஆசிரியர்கள் தம் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்கிறார்கள்.
'ஆசிரியப்பணியின் பொறுப்பு, இச்சமுதாயத்துக்கான இனிய கடமை' என்கிறார். திருமதி.நாகேஸ்வரி, முதல்வர் (ஓய்வு )வாணி வித்யாலயா பள்ளி, வேலூர்

அவர் கூறுகிறார்
"மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஆசிரியர்கள் பெரு முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். மதிப்பெண்கள் மட்டும் ஒரு மாணவரின் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. அதை தாண்டி, நல்லொழுக்கம் கொண்ட மக்களாக உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியருக்கும் உண்டு.
எல்லா மாணவரும் ஒரே மாதிரி அறிவும், ஆற்றலும் , பின்னணியும் கொண்டவர்கள் அல்லர். என்னைப் பொறுத்த மட்டில் என் மாணவர்களை நான் முழுமையாக அறிந்துக் கொள்ள முயற்சிகள் எடுத்துக் கொள்வேன், அவர்களுக்குத் தேவையான உதவிகளை நேரடியாகவும், ஆசிரியர்கள் வழியாகவும் செய்வதும் என் வழக்கம் . படிப்பில் உதவி தேவைப்படும் மாணவருக்கு கூடுதல் நேரம், கூடுதல் கவனம் தந்து பராமரிப்பேன்.
ஒரு முதல்வராக இருப்பதைக் காட்டிலும் என் மாணவர்கள் தம் மனம் திறந்து பேச விரும்பும் நல்ல தோழியாக இருப்பதையே விரும்பினேன். மாணவரின் தனித்திறமையை கண்டுபிடிப்பதும் ,அவரிடத்தில் தனித்துவத்தை வளர்ப்பதும் ஆசிரியரின் கடமையும்,பொறுப்பும் என்று நான் நம்புகிறேன்"
முதல்வர் நாகேஸ்வரியின் அணுகுமுறை எக்காலத்துக்கும் பொருந்தும், எல்லா ஆசிரியருக்கும் வழிகாட்டுதலாக இருக்கும்.
அவரைத் தொடர்ந்து நாம் சந்தித்தவர் முனைவர் பே. அமுதா (உதவி பேராசிரியை ஆக்சீலியம் கல்லூரி (தன்னாட்சி), வேலூர்

ஆசிரியர்கள் தம் பொறுப்பினை நிறைவேற்றுவதில் சந்திக்கும் சவால்களைப் பற்றி அவர் தன் கருத்துக்களைப் பகிர்ந்தார்
"பொதுவாக மகளிர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம் போன்ற கொண்டாட்டங்களின் போது போற்றுதலும் வர்ணனைகளும் இணைந்த அழகு வார்த்தைகள் குறுஞ்செய்திகள் என சமூக ஊடகங்கள் எங்கும் நிறைந்திருக்கும்.
ஆனால் பொது சமூகத்திற்கு பெண்களைக் குறித்தோ ஆசிரியர்கள் குறித்தோ முழுமையான புரிதலோ அல்லது அவர்களின் பங்களிப்பிற்கான அங்கீகாரம் தருதல் குறித்த தேவை பற்றியோ தெளிவு இருக்கிறதா? என்பது கேள்விக்குறிதான்.
குறிப்பாக ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் "ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி" என்ற முழக்கங்களுக்கு இடையிலும் ஆசிரியரின் தகுதி, அவர்களின் பணிச்சுமை அவர்களின் கடமை உணர்வு, குறித்த விவாதங்கள், விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
ஒரு ஆசிரியர் கால சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டே இருந்தால் மட்டுமே ஆசிரியப்பணியைத் தொடர இயலும். அதுவும் இன்றைய நவீனமயமாக்கப்பட்ட, தொழில் நுட்ப மையம் ஆக்கப்பட்ட அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் சமூக சூழலில் ஒரு ஆசிரியர் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. ஒரு ஆசிரியரிடமிருந்து பெறக்கூடிய அறிவினை செயற்கை நுண்ணறிவு சில வினாடிக்குள் தந்துவிட இயலும் போது ஒரு ஆசிரியரின் தேவை எதற்கு என்று தர்க்கம் செய்யக்கூடிய இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர் பணி நிச்சயம் பல சவால்களை சந்திக்க கூடியதாகவே இருக்கிறது.
இன்றைய GenZ மாணவர்கள் தொழில்நுட்பத்தை மிக வேகமாக கற்றுக்கொண்டு கையாளக்கூடிய அசாதாரணமான ஆற்றல் பெற்றவர்கள்.
கேட்டு உள்வாங்கிக் கொள்வதை விட பார்த்து புரிந்து கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகிற இன்றைய மாணவர்களுக்கு கற்பித்தல் கூடுதல் சவாலானது. இரண்டிலிருந்து ஐந்து நிமிடத்திற்குள்ளாக கவனச் சிதறலுக்கு உள்ளாகும் மனநிலை கொண்டவர்களாக அவர்கள் வகுப்பில் தென்படுகிறார்கள். பழைய வகுப்பறை கோட்பாடுகள் இனி எடுபட போவதில்லை. இன்றைய மாணவர்களை ஈர்க்க புதிய செயல் திட்டம் கற்றல் கற்பித்தலில் தேவைப்படுகிறது. இதை நோக்கி ஆசிரியர் சமூகம் கவனம் செலுத்த வேண்டும்.
இயந்திரங்களோடு மிக இயல்பாக வாழ பழகிக் கொண்ட இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்து நவீன மயமாக்கப்பட்ட வகுப்பறைகள் மட்டும் போதாது ஜனநாயகப்படுத்தப்பட்ட வகுப்பறைகள் தேவை அங்கே விளக்கங்களைவிட கேள்விகளும் விவாதங்களும் தேவைப்படுகிறது,
உரையாட தயங்குகிற இன்றைய மாணவர்களை பேச செய்கிற வகுப்பறைகளாக மாறுவது மிகவும் அவசியமானது. அறிவைத் தேட வேண்டுமானால் தொழில்நுட்பம் உதவக்கூடும் ஆனால் அறிவைத் தூண்ட ஒரு நல்ல ஆசிரியரால் மட்டுமே முடியும். ஆசிரியரின் பங்கு மாணவரை உருவாக்குவதில் அன்றும், இன்றும், என்றும் இன்றியமையாதது!" என்றார்.
நாம் சந்தித்த ஆசிரியர்கள் இருவரும் இளைய தலைமுறை சிறந்து விளங்க சிந்திப்பவர்கள். நாளைய தலைமுறை நலமுடன் வாழ உழைப்பவர்கள் .
Once a teacher, always a teacher என்னும் கருத்துக்கு ஏற்ப தம் வாழ் நாள் முழுவதையும் மாணவருக்காக அர்ப்பணிக்கும் ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும் வந்தனங்கள்.
‘விகடகவி’யின் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Leave a comment
Upload