தொடர்கள்
கதை
முகவரியற்ற வீரர்கள்! - ஆர். சுந்தர்ராஜன்

20260805085607206.jpeg

​பதினெட்டாம் நாள் இரவு. குருக்ஷேத்திரப் போர்க்களம் இறுதியாக அமைதியடைந்தது.

​ஆனால், அது அமைதி அல்ல; மரணத்தின் கொடூரமான நிசப்தம். நரிகள், கழுகுகள் மற்றும் பேய்களின் குரல்களைத் தவிர வேறு சத்தமில்லை. காற்றில் குருதியின் நெடியும், வெந்துபோன சதையின் நாற்றமும் அடர்த்தியாகக் கலந்திருந்தன.

​அந்தப் போர்க்களத்தின் ஒரு மூலையில், உடைந்த ஒரு தேர்ச் சக்கரத்தின் அடியில் கிடந்தான் சாம்பன். அவன் எந்த நாட்டு இளவரசனும் அல்ல; அர்ஜுனனைப் போல தேவேந்திரனின் மகனோ, கர்ணனைப் போல சூரியனின் மகனோ அல்ல. யமுனை நதிக்கரையில் இருந்த ஒரு சிறிய கிராமத்து உழவன். வயிற்றுப் பசிக்கும், கிராமத்து தலைவனின் மிரட்டலுக்கும் பயந்து, பாண்டவர் படையில் ஒரு சாமானிய காலாட்படைச் சிப்பாயாக வந்து சேர்ந்தவன்.

​அவனது மார்பில் ஒரு உடைந்த ஈட்டி பாய்ந்திருந்தது. உயிர்ப் பிரியும் தருணத்தில் அவனது கண்கள் விண்மீன்களைப் பார்த்தன. அவன் ஆன்மா உடலை விட்டு வெளியேறி, தனது உடலையே பார்த்தது.

​அங்கே சாம்பனைப் போல லட்சக்கணக்கான உடல்கள்... வெட்டப்பட்ட கரங்கள், பிளக்கப்பட்ட மண்டை ஓடுகள், குடல்கள் சரிந்த வயிறுகள்!

​"யார் வென்றார்? தர்மம் வென்றதா? அதர்மம் வென்றதா?" – சாம்பனின் ஆன்மா அமைதியாகக் கேட்டது.

​சாம்பனின் ஆன்மா போர்க்களத்தின் மேல் மிதந்தது. தூரத்தில், அரச குடும்பத்து வீரன் ஒருவனின் உடலுக்குச் சந்தனக் கட்டைகளால் ஈமக் கிரியைகள் நடந்து கொண்டிருந்தன. வேத மந்திரங்கள் முழங்கின. "வீர சொர்க்கம் அடைந்தான்!" என்று பட்டாச்சாரியார்கள் ஆசி வழங்கினார்கள்.

​அர்ஜுனனுக்குக் கண்ணன் பகவத் கீதை உபதேசித்தான்; அவன் அமரனானான். கர்ணன் தியாகத்தின் சிகரமாகக் போற்றப்பட்டு, இறைவனின் திருவடியைச் சேர்ந்தான். பீஷ்மருக்கு இச்சாமரணம்; துரோணருக்குத் தனி வரலாறு.

​சாம்பன் தன் பக்கத்தில் மிதந்து கொண்டிருந்த மற்றொரு ஆன்மாவைப் பார்த்தான். அவன் கௌரவர் படையைச் சேர்ந்த மாரன்.

​"நீ யாரப்பா?" எனக் கேட்டான் சாம்பன்.

"நான் மகத நாட்டைச் சேர்ந்த ஒரு கொல்லனின் மகன். என் கையில் வாளைக் கொடுத்து 'துரியோதனனுக்காகப் போராடு' என்றார்கள். நான் எதிரே வந்த உன்னைப் போன்ற ஒருவனின் தொண்டையைக் குத்தினேன். அடுத்த நொடி என் தலையை யாரோ சீவி எறிந்தார்கள்" என்றான் மாரன் சோக சிரிப்புடன்.

​"நாம் ஏன் அடித்துக் கொண்டோம் மாரன்? உனக்கும் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்துக்கும் என்ன தொடர்பு? எனக்கும் பஞ்ச பாண்டவர்களின் தர்மத்துக்கும் என்ன தொடர்பு?"

​மாரன் அமைதியாக இருந்தான். "நமக்குத் தொடர்பு ஒன்றே ஒன்றுதான்... நாம் இருவருமே 'அக்‌ஷௌஹிணி' என்ற எண்ணிக்கையின் வெறும் எண்கள்!"

​இருவரின் ஆன்மாக்களும் மேல்நோக்கி நகர்ந்தன. அங்கே எமலோகத்தின் வாயிலில் ஆயிரக்கணக்கில் அல்ல, லட்சக்கணக்கில் சாதாரணச் சிப்பாய்களின் ஆன்மாக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தன.

​சித்ரகுப்தன் பெரிய ஏட்டை வைத்துக்கொண்டு எண்களைக் குறித்துக் கொண்டிருந்தான்:

​"18 அக்‌ஷௌஹிணிப் படைகள்... மொத்தம் சுமார் 39 லட்சம் பேர்!"

​சாம்பன் முன்னால் சென்று கேட்டான், "ஐயனே, என் பெயர் சாம்பன். நான் என் தாயையும், மனைவியையும் விட்டுவிட்டுப் போருக்கு வந்தேன். எனக்குச் சொர்க்கமா, நரகமா? என் பெயரை அந்த ஏட்டில் தேடிச் சொல்லுங்கள்!"

​சித்ரகுப்தன் நிமிர்ந்து பார்த்துப் பரிதாபமாகப் புன்னகைத்தான்:

​"அப்பனே! இந்த ஏட்டில் தர்மனின் பெயர் இருக்கிறது, அர்ஜுனனின் பெயர் இருக்கிறது, துரியோதனனின் பெயர் இருக்கிறது. ஆனால் உங்கள் யாருடைய தனிப்பட்ட பெயரும் இல்லை. நீங்கள் அனைவரும் 'பலி ஆடுகள்' என்ற ஒரே தலைப்பில் கணக்கு எழுதப்பட்டிருக்கிறீர்கள்."

​"அப்படியானால் எங்களுக்குச் சொர்க்கம் இல்லையா?" எனக் கூவினான் மாரன்.

​"அரசர்கள் போரிட்டால் அவர்களுக்கு வரலாறும், காவியங்களும், சொர்க்கமும் கிடைக்கும். நீங்கள் அவர்கள் விரித்த சதுரங்க வேட்டையில் செத்துப்போன வெறும் காய்கள். உங்களுக்குச் சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. நீங்கள் மீண்டும் இந்த பூமிக்கே திரும்ப வேண்டும்!" என்றார் எமதர்மன்.

​நூற்றாண்டுகள் உருண்டோடின...

​மகாபாரதம் இதிகாசமாக எழுதப்பட்டது. அதில் கிருஷ்ணனின் லீலைகள் போற்றப்பட்டன. அர்ஜுனனின் வில்லைப் பற்றிப் கவிதைகள் இயற்றப்பட்டன. கர்ணனின் கொடைத் தன்மையைக் கேட்டு உலகம் கண்ணீர் வடித்தது. அவர்கள் அனைவரும் கடவுள்களாகவும், வழிபாட்டுக்குரிய வீராகளாகவும் மாற்றப்பட்டார்கள்.

​ஆனால், வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் மடிந்து போன அந்தச் சாதாரணச் சிப்பாய்கள் என்ன ஆனார்கள்?

​அவர்கள் எந்தச் சொர்க்கத்துக்கும் போகவில்லை. அவர்களின் குருதியும், சதையும், எலும்புகளும் குருக்ஷேத்திரத்தின் கறுப்பு மண்ணோடு மண்ணாகக் கரைந்து போயின.

​சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதே குருக்ஷேத்திர மண்ணில் கோதுமையும் நெல்லும் விளைந்தன. அந்தப் பயிர்களுக்கு உரமாக மாறியவர்கள் அந்த முகவரியற்ற சிப்பாய்களே!

காவியங்கள் எப்போதும் தங்களைச் செதுக்கிய சிற்பிகளான 'அரசர்களை' மட்டுமே நினைவில் கொள்கின்றன; ஆனால், அந்தச் சிற்பங்கள் எழுந்து நிற்கத் தன் உடலையே அடித்தளமாக்கிய லட்சக்கணக்கான 'சிப்பாய்களை' மண் மட்டுமே நினைவில் வைத்திருக்கிறது.