தொடர்கள்
அனுபவம்
நம்பிக்கை !!! உயிரைக் காப்பாற்றிய நம்பிக்கை !! - மருத்துவர் பரூக் அப்துல்லா

20260805075101526.jpeg

கைகூப்பி காப்பாற்றியதற்கு நன்றி சொல்லும் காட்சி அது மீட்டவர்களுக்கு மட்டுமல்ல... அவரைக் காப்பாற்றிய அந்த நம்பிக்கைக்கும் தான்.

20260805075251290.jpegம்

மீண்டு வந்த சஞ்சய் ஷா மற்றும் கபீர் மஹாஜன்.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரிசூலி 3ஏ என்ற மலையைக் குடைந்து ஆழமான பகுதியில் இயங்கி வரும் நீர் மின் நிலையத்தில் சுமார் 170 மீட்டர் ஆழத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பணி புரிந்து வந்த

இயந்திர இயக்குநர் சஞ்சய் ஷா மற்றும் இயந்திர மேற்பார்வையாளர் கபீர் மஹர்ஜான் ஆகிய இருவரையும் நேபாள இராணுவம் + நேபாள ஆயுதமேந்தி காவல் படை + சர்வதேச வல்லுநர் குழு ஆகியோர் இணைந்து
இன்று மதியம் உயிருடன் வெளிக் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

ஆகஸ்ட் 26 காலை முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி மதியம் எனக் கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆழமான குகைக்குள் பகுதிக்குள் மாட்டிக் கொண்டு அவர்கள் உயிருடன் வந்திருக்கும் நிகழ்வு அரிதினும் அரிதானது.

காரணம் அவசர நிலைகள் மற்றும் பேரிடர் நிலைகளில் "மூன்றின் விதி" (RULE OF 3) என்றொன்று உண்டு.

மூன்று நிமிடங்களுக்கு மேல் உயிர்வளி ( ஆக்சிஜன்) இல்லாவிடிலும் மூன்று மணிநேரங்களுக்கு மேல்
கடினமான சூழ்நிலையில் எந்த அடைக்கலனும் இல்லாமலும் மூன்று நாட்களுக்கு மேல் நீர் இன்றியும்

மூன்று வாரங்களுக்கு மேல் உணவின்றியும் மனிதனால் வாழ இயலாது.

இவையன்றி மூன்று நாட்கள் அதாவது 72 மணிநேரங்கள் என்பது எந்தப் பேரிடர் நிகழ்ந்த பிறகும்
மீட்புக் குழுவுக்கு இருக்கும் முக்கியமான கால அவகாசம்.

நிலடுக்கம், நிலச்சரிவு உள்ளிட்ட எந்தப் பேரிடருக்குப் பின்பும் முதல் 24 மணிநேரத்தில் சிக்கிய 90% பேருக்கு மேல் உயிருடன் மீட்கலாம்.

24 முதல் 48 மணிநேரங்கள் என்றால் அந்த உயிருடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 40-50% ஆக குறைந்து விடும் 48 முதல் 72 மணிநேரங்களில் 20% முதல் 30% ஆகக் குறைந்து விடும் 72 மணிநேரங்களுக்கு மேல் உயிருடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 5% க்குக் கீழ் குறைந்துவிடும்.

இவ்வாறு சிக்கியவர்களைப் பலி கொள்ளும் முக்கியமான விஷயங்களாக நீரிழப்பு ( DEHYDRATION ) இருக்கும் சிக்கிய இடத்தில் ஆக்சிஜன் இல்லாமல் போவது, காயங்கள் காரணமாக உதிரப்போக்கு,
குளிர்ச்சியான இடத்தில் ஹைப்போதெர்மியா, உஷ்ணமான இடத்தில் ஹைப்பர்தெர்மியா ஆகியவை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும்.

சிதைவுகளுக்குள் சிக்குண்டு பத்து நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிருடன் மீட்கப்படுவதற்கான நிகழ்தகவுச் சாத்தியக்கூறுகள் வெறும் 1% மட்டுமே.

ஏதேனும் மனித வெப்பம் தெரிகிறதா என்பதை அறிய தெர்மல் ஸ்கேனிங் ட்ரோன்களை அனுப்பி சோதனை செய்தும் எங்கும் மனிதர்களின் இருப்பை இதுவரை கண்டறிய இயலாவிடினும் விடாப்பிடியாக தங்களது மீட்பு வேலையை கர்ம சிரத்தையாக செய்த வீரர்களுக்கு சல்யூட்.

சரி.. எப்படி இந்த இருவரும் உயிர் பிழைத்தார்கள்?

இவர்கள் சிக்குண்ட இடம் என்பது காண்க்ரீட்டினால் கட்டப்பட்ட கட்டுப்பாட்டு அறை - அந்த அறை 170 மீட்டர்கள் ஆழத்தில் உள்ளது. அந்த அறைக்கு மேலே மொத்தமாக புதை மணல் மூடி "சீல்" வைத்து விட்டது.

முதலாவது முக்கியம் - ஆக்சிஜன் இருந்தாலும் இவர்கள் இருந்த இடத்தைச் சுற்றி இவர்கள் உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனை வைத்து சீல் செய்திருக்கிறது .


அதனால் உயிர்வாழத் தேவையான முதல் தேவை ஆக்சிஜன் இவர்களுக்குக் கிடைத்து வந்துள்ளது.

அடுத்து நீர்.. மனிதனால் மூன்று நாட்களுக்கு மேல் நீரின்றி வாழ முடியாது. காண்க்ரீட் குழாய்களில் கசிந்த நீர் / அங்கு நிலவிய அதிக ஈரப்பதம் அதனால் நீர்ம நிலை அடைந்த காற்று ( Condensation) உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பருகி உயிர்வாழ்ந்துள்ளனர்.

மூன்றாவது கீடோசிஸ் என்ன கீடோசிஸா?

அப்படி என்றால் என்ன?

நாம் எந்த உணவையும் உண்ணாத போது நமது உடல் நம்மை இறக்காமல் காக்கும் தந்திரமே கீடோஸிஸ்.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி இவர்கள் இருவரும் கடைசியாக சாப்பிட்டார்கள்

ஆகஸ்ட் 28 ஆம் தேதியோடு இவர்களின் கல்லீரலில் உள்ள க்ளைகோஜென் சேமிப்பு முழுவதும் க்ளூகோஸாக மாறி உடலின் தேவைக்காகக் கரைக்கப்பட்டிருக்கும். இதை க்ளைகோஜீனோலைசிஸ் என்கிறோம்.

இதற்கடுத்து ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 30 க்குள் இவர்களது உடல் " பட்டினியால் உண்டான கீடோஸிஸ்" (STARVATION KETOSIS) நிலைக்குள் சென்றிருக்கும்.

உள்ளுக்குள் எந்த உணவும் எடுக்காததால் இன்சுலின் அளவுகள் மிகவும் குறைவாக இருக்கும்.

அப்போது இவர்கள் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பை உடல் பெரிய அளவில் எரிக்கும். இதை லிப்போலைசிஸ் என்கிறோம்.

கொழுப்பு எரியும் போது கொழுப்பு அமிலங்களாக மாறும். இந்த கொழுப்பு அமிலங்களை கல்லீரல் "கீடோன் பாடிகளாக" மாற்றும்.

சாதாரணமாக உணவு கிடைக்கும் நேரங்களில் நமது தலைமைச் செயலகமான மூளை க்ளூகோஸ் மூலமே பிரதானமாக இயங்கும்.

ஆனால் கீடோஸிஸ் நிலையில் நமது மூளை 70% கீடோன்கள் மூலம் இயங்க ஆரம்பிக்கும். இதனால் உணவு சாப்பிட்டு க்ளூகோஸ் கிடைக்க வேண்டும் என்ற தேவையின்றி மூளை இயங்கும்.

இத்தோடு கீடோசிஸ் நிலையில் பசியும் நன்றாக மட்டுப்படுத்தப்படும்.

பசி மட்டுப்படுத்தப் படுவதால் அது தரும் வலியும் இராது.

இந்த உயிர்காக்கும் கீடோஸிஸ் நிலையில் இதயத்துடிப்பு குறையும் வளர்சிதை மாற்ற விகிதம் குறையும்
ஆக்சிஜன் தேவை குறையும் எனவே நீண்ட நாட்கள் உயிருடன் இந்த கீடோஸிஸ் வைத்திருக்கும்.

இவற்றுடன் முக்கியமான நான்காவது விஷயம் மன தைரியம் தீராத நம்பிக்கை

அந்த இடத்தில் கரு கும்மென்ற இருட்டு சூழ்ந்திருக்கும்.. ஒரு அடி தூரத்தில் இருப்பது கூட எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அந்த சூழ்நிலையிலும் மனம் அமைதியாக வைத்திருந்து.
பதட்டப்படாமல் இருக்க வேண்டும். அப்போது தான் மூச்சு விடுவது குறைவாக விட முடியும். ஆக்சிஜன் தேவையும் குறையும். இத்தனையையும் பொருத்துக் கொண்டு இருப்பது தனி உளவியல் சோதனை.

மேற்கூறிய அத்தனை விஷயங்களும் ஒரு சேர இவர்கள் இருவருக்கும் நடந்தது.
தங்களை காப்பாற்றுவார்கள் என்ற அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

இதில் இன்னும் மகிழ்ச்சியான விஷயம் யாதெனில் இதற்கடுத்த நிலை ஆழத்தில் இன்னும் பலரின் குரல்கள் கேட்கிறதாம் எனவே அவர்களும் கூடிய விரைவில் மீட்கப்படும் சாத்தியம் அதிகரித்திருக்கிறது.

காற்று + நீர் + கீடோசிஸ் + மனதைரியம் + நம்பிக்கை கூடவே மீட்புப்படை வீரர்களின் அர்ப்பணிப்பு
ஆகியன இந்த இருவரின் வாழ்க்கையை மீட்டுத் தந்திருக்கின்றன.

ஆழமான குகைக்குள் இருட்டான சூழலுக்குள் இருக்கும் போதும் மனிதர்கள் கொண்ட நம்பிக்கை எனும் ஒளிக் கீற்று அவர்களைக் காப்பாற்றி வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

முகநூல் பதிவர்

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

இந்த வார நம்பிக்கை ஸ்பெஷலுக்காகவே பதிவிட்டது போல இருந்ததால் வலையேற்றியிருக்கிறோம்.

மேலும் உள்ளே குகையில் கேட்ட குரல்கள் மீட்கப்பட்டு விரைவில் வெளியே வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருப்போம்.

நமது நம்பிக்கை