
நேபாளம் திரிசூலி பள்ளத்தாக்கில் உள்ள திரிபுவன் பள்ளியின் தலைமையாசிரியராகவும் ஆங்கில ஆசிரியராகவும் இருக்கும் 47 வயதான ராஜேந்திர டவாடிக்கு கிடைத்துள்ள சிறப்பு பெயர் ' 1643 குழந்தைகளின் கவசம். இது ஆகஸ்ட் 26 வெள்ளப் பேரிடரின் போது, உடனடியாக செயல் பட்டு பள்ளி மாணவர்களை பாதுகாத்ததற்காக கௌரவிப்புதான் இந்த சிறப்பு பெயர்.
அன்று என்ன நடந்தது என்பதை அவரே விவரிக்கிறார்
. "ஆகஸ்ட் 26 காலை 9. 20 மணிக்கு ஒரு நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. அவரது பேச்சில் பதற்றம் தெரிந்தது."பயங்கர வெள்ளம் உடனடியாக வெளியேறுங்கள் "என்று சொன்னார்..
நான் முதலில் பள்ளி 60 அடி உயரத்தில் இருப்பதால் எந்த பாதிப்பும் வராது என்று நினைத்தேன். ஆனால், அதற்குள் இன்னொருவர் "சுனாமி பேரலை போல் வெள்ளம் சீறுகிறது குழந்தைகளை காப்பாற்றுங்கள்" என்று கதற ஆரம்பித்தார் எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தை ஒருவரின் தந்தை.
நான் நிலைமை ஏதோ ஆபத்து என்பதை மட்டும் தெரிந்து கொண்டு பள்ளி மணியை அடித்தேன். எங்கள் பள்ளி மூன்று மாடி கட்டிடம். குழந்தைகளை பத்திரமாக வெளியேற்றி மலையின் உயரமான பகுதிக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினேன்.
கடைசி மாணவர் வரை வெளியேறுவதை உறுதிபடுத்தினேன். கடைசியாக அவர்களுடன் நடந்தேன் மலையை நோக்கி.
குழந்தைகளை அழைத்து வருவதற்கு சென்றிருந்த பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு மலை உயரமான பகுதிகளுக்கு திருப்பி விடுமாறு சொன்னேன். யாரும் பள்ளிக்கு வரக் கூடாது என்று திருப்பி விட்டேன்.

ஒரே ஒரு பேருந்து டிரைவர் மட்டும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருப்பதால் பேருந்தை இயக்க முடியவில்லை. அவரை திரும்பி செல்லுமாறு சைகை செய்தேன். அவர் பாதுகாப்பாக மறுகரைக்கு எடுத்துச் சென்றார்.
அந்தப் பேருந்து சென்ற அடுத்த நொடி அந்தப் பாலம் நொறுங்கி விழுந்தது. அந்த பேருந்தை தவிர மற்ற எல்லா பேருந்துகளும் விரைந்து சென்றன. நடப்பது எல்லாவற்றையும் நேரில் பார்த்த குழந்தைகள் மயங்கி விழுந்தனர் பயந்து அலறினார்கள்.
ஒரு குழந்தையை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று உயரமான மலை மேல் உட்கார வைத்தோம்.
சில நிமிடங்களில் 1643 மாணவர்களை பாதுகாப்பாக உயரமான இடத்தில் கொண்டு சென்று பத்திரப்படுத்தினோம். இது எப்படி நடந்தது என்பது இன்று கூட வியப்பாக தான் இருக்கிறது. சில நிமிடங்கள் தாமதித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
நாங்கள் எல்லோரும் தஞ்சம் அடைந்தது ஒரு போதி மரத்தின் கீழ். புத்தருக்கு போதி மரம் எப்படியோ அப்படி எங்களுக்கு என்பது மட்டும் எனக்கு அன்று புரிந்தது. எங்கள் பள்ளி முழுமையாக தகர்ந்து விட்டது. ஒரு ஆசிரியரும் ஒரு ஊழியரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் என்பது எனக்கு தீராத வருத்தம்.
கிராமமே மூழ்கியது.

பல குழந்தைகளின் குடும்பங்கள் மாயம் இப்படி பல சோக நிகழ்வுகளுக்கு இடையே இந்த குழந்தைகளை காப்பாற்றினேன் என்று நிம்மதி அடைந்தேன்.
சந்தோஷப்படவில்லை.
எந்தப் பாராட்டும் என் தலைக்கு ஏறவில்லை.
எனக்கு அந்த இழப்புகள் தான் இன்னும் நினைவில் இருக்கிறது "என்கிறார் அந்த ஆசிரியர்.
நன்றி: தினமலர்
எல்லோரும் தலைமையாசிரியரை பாராட்டும் நேரத்தில் கடவுள் போல அவருக்கு தொலைபேச வேண்டும் என்று தோன்றிய அந்த மனித கடவுளையும் பாராட்ட வேண்டும்.
அந்த ஒரே ஒரு தொலைபேசி மட்டும் வரமால் இருந்திருந்தால்..அல்லது அந்த தலைமையாசிரியர் அந்த தொலைபேசியை எடுக்காமல் இருந்திருந்தால்......
இறைவா....
இது போன்ற நேரங்களில் தான் நம்பிக்கை தோன்றுகிறது. !!!!

Leave a comment
Upload