
இன்றைக்கு நாம் பருகப்போகும் தமிழமிழ்து நற்றிணையிலிருந்து கபிலர் பாடிய பாடல்.
இது குறிஞ்சித் திணையில் அமைந்த ஆச்சரியமான பாடலாகும்.
பாடலின் களம்;
பாடல் சொல்ல வருவது ஒரு எளிய களவொழுக்க நிகழ்வைத் தான்.
இதைப் பேசும் கபிலரின் வரிகளில் தெறிக்கும் அற்புதமான உவமைகளும் குறிப்புணர்த்துதலும் இதை வேறு தளத்திற்கு ஏற்றி, வாசிப்பை இன்புறச் செய்கின்றன.
இந்தப் பாடலின் தலைவி தன் தோழியுடன் தினைப்புனம் காக்க புனத்தின் பரணில் இருக்கின்றாள்.
அவள் தன் தலைவனோடு கூடி களவொழுக்கத்தில் ஈடுபட்டதால், உடற் சோர்ந்தும் தலைவனை நீங்கிய பிரிவை தாங்கவொண்ணாது அழுதபடியும் இருக்கிறாள்.

தன் ரகசிய உறவை தலைவி மறைத்தாலும், தோழிக்கு அவளுடைய நிலை கண்ட மாத்திரத்திலேயே தெள்ளென விளங்குகின்றது. தலைவி அழுவதால் பிறரின் தேவையற்ற பார்வைக்கும் சந்தேகத்திற்கும் ஆளாவாள் என்று தோழி பதைக்கிறாள்.
இந்த சங்கதி சங்கத்தமிழ் வழியே பாடலாக நம்மை அடையும்போது தான் எத்தனை எண்ணங்களைச் சுமந்து வருகிறது? எவ்வளவு நயத்தை அள்ளித் தருகிறது! எத்தனை ரசனையுள்ளவர்களாக நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்?!
இனி, பாடலும் அதையடுத்து விளக்கமும் இதோ கீழே :
பாடல்
எழாஅ யாகலின் எழில்நலந் தொலைய
வழாஅ தீமோ நொதுமலர் தலையே
ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த
பகழி யன்ன சேயரி மழைக்கண்
நல்ல பெருந்தோ ளோயே! கொல்லன்
எறிபொற் பிதிரின் சிறுபல் காய
வேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சி
மயிலறிபு அறியா மன்னோ;
பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே!
விளக்கம்
தலைவியே! தினையைக் களவாடும் கிளிகளை நீ எழுந்து ஓட்டாவிடினும் பரவாயில்லை. ஆனால் அழாமல் இரு! நீ அழுதால் முதலில் உன் அழகின் நலம் கெடும். அயலார்க்கோ வீண் சந்தேகமும் அலரும் தோன்றும்.
பார்! உன் கண்கள் சிவந்து கிடக்கின்றன. மழவர்கள் தினைப்புனம் காக்கும்போது, அங்கு சேதம் செய்ய வரும் காட்டுப்பன்றிகளின் மேல் அம்புகளை எய்துவார்கள் அல்லவா? தைத்த அந்த அம்புகளைப் பிடுங்குகையில், அவ்வம்புகளின் இலையனைய நுனி பன்றிகளின் குருதி தோய்ந்து, செவ்வரியோடிய உன் கண்களைப் போல சிவந்து இருக்கும். (தலைவியின் கண்களும் அந்த அம்பின் நுனியைப் போன்று கூர்மையுடையவை தானே? அந்தக் கண்களே தலைவனாகிய வீரனை வேட்டையாடியதையும் தோழி இவ்விதம் குறித்தாற் போலவும் தோன்றுகிறது)

அழகிய அகன்ற தோள்களை உடைய தலைவியே!
கொல்லனின் உலைக்கூடத்தில் இரும்புத் தளவாடங்களைத் தணலிலிட்டு தயாரிக்கையில் சிதறும் தீப்பொறிகள் போன்று, சிறு காய்கள் காய்க்கும் நேரம், வேங்கை மரத்தின் பூக்கள் சிதறுகின்றன.
அத்தகு வேங்கை மரங்கள் மிகுந்த மலையின் மேல் உள்ள கூடுகளில் மயில்கள் இருக்கின்றன. அந்த.உயரத்திலிருந்து மயில்களும் கீழே தினைப்புனத்தில் தினைக் கதிர்களை கிளிகள் களவாடிச் செல்வதை கவனிக்கின்றன.
எனினும்ல அந்த கிளிகளோ யாரும் தாம் திருடுவதை அறிய மாட்டார்கள் என்ற நினைப்பில் களவாடத்தான் செய்கின்றன. (தலைவி தலைவனுடன் கனவில் கலந்திருப்பது தோழி அறியாத ரகசியம் அல்ல! அதை குறிப்பால் உணர்த்துவது போல தோழி மயில்களையும் கிளிகளையும் பற்றி இங்கு உரைக்கிறாள்).
தலைவியே! அந்த கிளிகளை விரட்டும் பணியை செய்யாது அழாதே!

Leave a comment
Upload