தொடர்கள்
நெகிழ்ச்சி
மனிதத்தின் கரங்கள் -இந்துமதி கணேஷ்

நேபாளத்தில் பெரு வெள்ளம் நடந்த விபத்துக்கு காரணம் சீனா மற்றும் நேபாள எல்லைக்கு இடைப்பட்ட லெண்டே கோலா பகுதியில், 5200 மீட்டர் உயரத்தில் இருந்து பனி மற்றும் பாறைகளுடன் கூடிய பனிச்சரிவு இடிபாடுகளுடன் சுமார் 2930 மீட்டர் உயரத்திற்கு கீழே இறங்கியது தான் என்கிறார்கள்.

2026080417373484.jpeg

மேலும் அந்த பனி மற்றும் பாறை இடிபாடுகளின் தொகுதி, வெறும் ஏழு நிமிடங்களுக்குள் சுமார் 22 கிலோமீட்டர் தூரம் பயணித்து அஸ்வகந்தா பகுதியை அடைந்ததாகவும், அப்போது அது மணிக்கு தோராயமாக 167 கிலோமீட்டர் சராசரி வேகத்தை எட்டியதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்படி வேகமாக பாய்ந்து வந்த வெள்ளமானது பல பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. இதில் மீட்பு படையினரின் வேலை மிகவும் சிக்கலாகி இருக்கிறது. சாதாரண மீட்பே சவாலாக இருக்க, நீர்மின் திட்ட சுரங்கங்களுக்குள்(Hydro power tunnels) சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்பது மிகச் சிரமமான காரியமாக இருந்து வருகிறது.

வெள்ளம் பாதித்த நீர்மின் திட்ட சுரங்கங்களில் இதுவரை 279 பேர் நேபாள ராணுவத்தால் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சுரங்கத்திற்குள் சென்று மீட்புப் பணியை செய்ய இயலாதவாறு பல சவாலைகளை சந்தித்து வருகின்றனர் மீட்புப் படையினர்.

சுரங்கங்களுக்குள் டூத்-பேஸ்ட் (Toothpaste) போலச் சேறும் சகதியும் அடைத்துக் கொண்டுள்ளதால் மீட்புக் குழுவினர் கைகளாலும், மண்வாரிகளாலும் மட்டுமே தோண்ட வேண்டிய சூழல் நிலவுகிறது பாலங்களும் சாலைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், கனரக இயந்திரங்களைச் சுரங்கப் பகுதிக்குக் கொண்டு செல்வது பெரும் சவாலாக உள்ளது. இதனால் மீட்புப் பணியில் தாமதம் நிலவுகிறது.

20260804173756563.jpeg

ரசுவாகாதி (Rasuwagadhi) நீர்மின் நிலைய சுரங்கத்தில் உள்ள ஒரு பாதுகாப்பான அறை போன்ற அமைப்பில் மேலும் 46 தொழிலாளர்கள் உயிருடன் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அங்கு அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைக்க வாய்ப்புள்ளதால், அவர்களை உயிருடன் மீட்க மீட்புக்குழுவினர் தொடர்ந்து தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

இன்னும் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கப் பாதைகளில் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிசூலி பகுதியில் மட்டுமே கிட்டதட்ட 350க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. நேபாள ராணுவ வீரர்கள் சேறும் சகதியுமாக மாறிய சுரங்கங்களுக்குள் தவழ்ந்து சென்று, சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்டனர்.

சுரங்கங்களின் மேற்பகுதியைத் துளையிட்டு, அமுக்கிகள் (Compressors) மூலம் உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜன் காற்று செலுத்தப்பட்டு வருகிறது. சிலிமேயில் உள்ள ஒரு நீர்மின் சுரங்கப்பாதைக்குள் கடினமான மீட்புப் பணி நடந்து வருகிறது. இந்திய மீட்புக் குழுவினர் நெரிசலான, கடினமான நிலப்பரப்பு மற்றும் சதுப்பு நில சுரங்கப்பாதைத் தளம் ஆகியவற்றை எதிர்கொண்டு வருகின்றனர். அதில் சிறப்பு உபகரணங்கள் எதையும் பயன்படுத்த முடியவில்லை என்பது தான் கூடுதல் சிக்கல்.

2026080417382249.jpeg

அவர்கள் மிதவைகளைத் தற்காலிகமாகப் பயன்படுத்தி, இருள் சூழ்ந்த சுரங்கத்திற்குள் மேலும் ஆழமாகச் செல்கின்றனர். தற்போது நேபாளத்தில் மேற்கொண்டிருக்கின்ற மீட்புப் பணி மூன்று சவால்களை எதிர்நோக்கியுள்ளது. முதலாவது, போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பெரிய இயந்திரங்களைக் கொண்டு செல்லவதில் தடை ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது, சுரங்கப்பாதையில் அதிகப்படியான வண்டல் மண் படிந்துள்ளதால், மீட்புதவியாளர்கள் கடந்து செல்வது கடினமாக உள்ளது. சுரங்கத்தில் ஒரே ஒரு பாதை மட்டுமே சீர் செய்யப் பட்டிருக்கிறது, மற்றவை பயன்படுத்த முடியாத நிலையிலேயே இருக்கின்றன.

நேபாள ராணுவத்துடன் இணைந்து இந்தியா, சீனா, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறப்பு சுரங்க மீட்புக் குழுக்களும் (Tunnel Rescue Specialists) தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணியில் முக்கியப் பங்காற்றிய உலகத் தரம் வாய்ந்த சுரங்க மீட்பு நிபுணர் பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் (Arnold Dix) மற்றும் இந்தியாவின் சிறப்பு ராணுவத் தரைவழி மீட்புக் குழுவினர் (Tunnel Rescue Team) களமிறக்கப்பட்டுள்ளனர் 163-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அனுப்பப்பட்டுள்ளனர்.

தொடர் வெள்ளத்திற்கு நடுவிலும் மீட்புப் படையினர் தங்கள் உயிரை பணையம் வைத்து தங்கள் பணியை செய்து வருவது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

அர்னால்ட் டிக்ஸ் அவர்கள் பிபிசிக்கு கொடுத்த பேட்டியில், "எங்களது மீட்புப் பணி அதிசய அடுக்குகள் நிறைந்ததாக இருக்கிறது. நான் இதுவரை இப்படி ஒரு மீட்புப் பணியில் ஈடுபட்டதில்லை, சுரங்கப் பாதையின் நுழைவாயில் எங்கே இருக்கிறது என்று கண்டு பிடிப்பதே எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. மலையின் மேல் இருந்த நுழைவாயில் இந்த விபத்துக்கு பிறகு நிலத்திற்கு கீழ் போய்விட்டது.

எப்படியோ இது தான் சரியான வழியாக இருக்க முடியும் என்று நம்பி நாங்கள் தோண்ட தொடங்குகிறோம், எங்கிருந்தாவது மக்களின் குரல் கேட்டால் மட்டுமே எங்களால் தொடர்ந்து இயங்க முடிகிறது" என்று கூறியிருக்கிறார்.

கிட்டத்தட்ட ஒன்பது நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மீட்புக் குழுவினர் இரண்டு பேரை சுரங்க பகுதியில் இருந்து உயிருடன் மீட்டிருக்கிறார்கள், இன்னும் பலர் அந்த மணல் வெள்ளத்தின் கீழ் புதைந்து போயிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

மணல் வெள்ளத்தில் புதைந்து போயிருப்பவர்களை மீட்புப் படையினர் போராடி மீட்கும் காட்சிகள் இணையத்தில் காணக் கிடைக்கிறது, அந்தக் காட்சிகள் நம் ஈரக்குலையை பதற வைக்கிறது.

பல போராட்டங்களுக்கு நடுவே மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் அந்த வீரர்களை போற்றுவோம், அவர்கள் நீட்டும் மனிதத்தின் கரங்கள் தான் இன்று பல உயிர்களை காத்து வருகிறது.

நம்பிக்கை தான் வாழ்க்கை !