
தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, ஜூலை 12-ஆம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணை செப்டம்பர் 1-ஆம் தேதி தான் திறக்கப்பட்டது. முதல்வர் கையால் அணை திறக்கப்பட்டாலும் இப்போதுள்ள நீர் இருப்பு அடிப்படையில் 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறப்பு இருக்கும். அதன் பிறகு நீர்வரத்து அளவைப் பொறுத்து அணைத்திறப்பு நீட்டிப்பு இருக்கும் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாக அணை திறப்பு என்றால் அதை வரவேற்கும் டெல்டா விவசாயிகள், இந்த முறை எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்குக் காரணம் அணையில் இப்போது உள்ள நீர் மட்டமும் திறக்கப்படும் காலமும் தான்.
டெல்டாவில் பொதுவாக குறுவை சாகுபடியை விட சம்பா சாகுபடி பரப்பு அதிகமாக இருக்கும். சம்பா சாகுபடி ஆகஸ்ட் தொடங்கி அக்டோபர் நவம்பரில் நிறைவடையும் .மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் தடையில்லாமல் திறக்கப்படும் என்ற உத்தரவாதம் இருந்தால் விவசாயிகள் ஆடி மாதமே நாற்று விடுவார்கள்.
ஆவணியில் நடவு செய்தால் ஐப்பசி முதலில் அறுவடை முடிந்து கார்த்திகை மாதத்தில், அதாவது வடகிழக்கு பருவமழை இறுதிக் கட்டத்தில் தாளடி சாகுபடி தொடங்குவார்கள். ஆனால், இப்போது மேட்டூர் அணை திறப்பதால் 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் என்றால் அதை நம்பி சாகுபடி ஆரம்பித்தால் கதிர் விடும் நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். எனவேதான் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடி ஏட்டிய பிறகு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு. .
பொதுவாக இது போன்ற அணைத் திறப்புக்கு முன்பு விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தப்படும் .
அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
அரசு தரப்பு இதற்கு சொல்லும் காரணம் 45 நாட்களுக்குள் வடகிழக்கு பருவ மழை தொடங்கி விடும் நிலைமையை சமாளிக்கலாம் என்ற நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை உண்மையில் நடந்தால் நல்லது.

மேட்டூர் அணை திறப்பதற்கென்று முதல்வர் அங்கு செல்ல வேண்டிய சம்பிரதாய சடங்கு என்பது தேவையற்றது. அவர் சேலத்தில் இருந்து மேட்டூர் செல்வதற்கு பாதுகாப்பு ஏற்பாடு என்ற பெயரில் ஆறு கோடி செலவில் தடுப்பு வேலிஅமைக்கப்பட்டது .
இந்த ஆறு கோடி மக்கள் வரிப்பணம். மேட்டூர் அணையை முதல்வர் தான் திறந்து வைக்க வேண்டும் என்பதை சட்டம் அல்ல இதுவும் ஒரு ஓட்டு வாங்கி அரசியல் தான்.

இது போன்ற தேவையற்ற செலவு செய்தார்கள் என்பதால் தான் திராவிட கட்சிகள் வேண்டாம் என்று புதிதாக தொடங்கப்பட்ட ஆட்சிக்கு வாய்ப்பு தந்திருக்கிறார்கள். அவர்களும் அதே பில்டப் தான் செய்கிறார்கள் என்பதை மக்கள் கவனிக்கிறார்கள்.

Leave a comment
Upload