
பசுபதிநாதர் புராணத்தில்,
படித்த பகுதி நினைவினில்...
பணித்தான் பசுபதிநாதர் அன்று
பாதுகாத்திடு இப்பகுதி என்று...!
இமயமலையின் இதயப் பகுதி
நேமுனியின் பொறுப்பென்று,
இறை ஆணை பெற்றதனால்
நேபாளம் பெயர் ஆனதென்பர்...!
பசும்பால் சொரிந்த இடமாய்,
சிவனைக் கண்டார் லிங்கமாய்...
பசுபதிநாதர் என்று பெயரிட்டு,
அதிபதி அவனை வணங்குதற்கு,
அத்தனை பக்தர்கள் வரவழைத்தார்..
எத்தனை சூழல்கள் வந்தாலும்,
பித்தனைக் காணும் போதினிலே,
சித்தம் தெளிவு பெற்றுவிடும்...!
மொத்தமும் மாறிப் போகிவிடும்...!
பக்தனின் மனமும் குளிர்ந்துவிடும்...!
ஏனோ சூழல் மாறியது இம்முறை...?
இயற்கை அன்னையின் சீற்றம்,
வேறு விதமாய் போனது மாற்றம்...!
பசுபதிநாதர் தரிசனம் முடித்து,
கயிலை நாதர் தரிசனம் காண,
காத்துக் கிடந்த தருணத்தில்,
வெடித்துச் சிதறியது பனிப்பாறை...
விழுங்கியது மனித இனத்தவரை..!
எங்கும் இறைத்து ஓடிய நீரோ...
எத்தனை பேரை இழுத்துப் போனது?
வெள்ளக்காடாய் ஆகிய நிலையில்,
விவரம் சொல்ல யாரும் இல்லை...!
எத்தனை தேசத்தின் பயணிகள்...
இறை பணியில் வந்தார்களா..?
இன்பச் சுற்றுலா வந்தார்களா..?
மண்ணின் மைந்தர்கள் எல்லாம்,
மண்ணோடு மண்ணான வாழ்விடம்..
சுவடுகள் தெரியாத வழித்தடம்...
மிரள வைக்கும் காட்சிகள் நடுவே,
மாயம் ஆனவர்களை மீட்டெடுக்க,
மிரண்டு போகாத மீட்புக் குழுவினர்,
துவண்டு விடாமல் தொடரும் பணி..
தொழுது வணங்கத் தோன்றுகிறது..!
ஓவ்வொரு மீட்பும் அதிசயம் தான்...!
பனிரண்டாயிரம் பாதுகாப்பாய்...
முகாமில் மீண்டார்,நிலம் வழியாய்..!
நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளை,
மீட்டது ராணுவம் வான்வழியாய்...!
மூப்பின் வயது தொன்னூற்றுஏழு...
மூதாட்டி மீண்டார் இடிபாடிலிருந்து...!
அறுபது மணிநேர போராட்டம்...
ஐந்து வயது குழந்தை மீண்டது...!
உச்சி மரத்தில் ஏறி தத்தளித்த,
எட்டு வயது பிள்ளையின் மீட்பு,
தாய்க்கு தந்தது புத்தம் புதுமூச்சு...!
எண்ணில் அடங்கா நேசக் கரங்கள்
அண்டை நாடுகள் நீட்டுகின்றனர்...!
மேடும் பாறையும்,சேறும் சிதைவில்
சிக்கி இருக்கும் இடமெல்லாம்,
தேடும் பணியை துரிதப் படுத்த,
நிபுணர்களும், நவீன கருவிகளும்
அள்ளிக் கொடுத்து அயல் நாடுகள்,
மனிதநேய மாண்பை சொல்லும்...!
துயரங்கள் துடைத்து எறிந்து,
உயரங்கள் தொடும் நேபாளம்...!
அந்த நாளும் அருகே வரும்...!
காணாமல் போன உறவுகளும்...
தொடர்பில் இருந்த குரல்களும்...
தொடர்பில் வரும் விரைவில் என,
காத்து இருக்கும் உறவினர்க்கு,
நம்பிக்கை கரம் கொடுப்போம்...!
பசுபதிநாதர் பாதம் பணிவோம்...!
பிரார்த்தனைகள் செய்திடுவோம்...!

Leave a comment
Upload