ஸ்பேஸ் எக்ஸ் சுவாரஸ்ய தகவல்...

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் எனும் விண்வெளி வர்த்தக நிறுவனம் ஏஐ ரோபோ ஒன்றையும், 2 எலிகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட கொஞ்சம் உணவுப் பொருட்களையும் அனுப்பி உள்ளது.
விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஒரு சில நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் வைத்துள்ளது. இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் வீரர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இப்பொருட்களை அனுப்புவதற்கு, அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் எனும் விண்வெளி வர்த்தக நிறுவனம் ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
இதற்கிடையே, பூமியில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ரோபோக்களை உருவாக்கலாமா, வேண்டாமா என்ற கேள்வி பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளிடையே இருந்து வருகிறது.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்த, தற்போது ஒரு ஏஐ ரோபோவை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பியுள்ளது. இந்த ‘சீமோன்’ எனும் அதிநவீன ரோபோவை, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஜெர்மன் விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரெஸ்ட்டுக்கு உதவியாக இருப்பதற்காக அந்நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
பெரிய வெள்ளை நிறம் கொண்ட ரோபோட்டுக்கு, ஒரு ஸ்மைலி முகம்கூட உள்ளது. இது கிரெஸ்ட்டுக்கு உதவுவது மட்டுமின்றி, விண்வெளியில் தானாகவும் சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.
விண்வெளிக்கு முதன்முறையாக கொண்டு செல்லப்பட்ட ஏஐ ரோபோ, வரும் டிசம்பர் மாதம் வரை அங்கு பணியில் இருக்கும். அதன்பிறகு பூமிக்கு திரும்பும் ஏஐ ரோபோவை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெறும்.
இவை அனைத்தும் வெற்றி பெற்றால், பின்னர் விண்வெளியிலேயே ரோபோக்கள் நிரந்தரமாக இருக்கும் வகையில் ரோபோவை தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஜெர்மன் விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதேபோல் சில உயிரியல் பரிசோதனைக்காக, இரட்டையர் எலிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இவற்றை வரும் டிசம்பர் மாதம் வரை விண்வெளியில் வைத்து பரிசோதிப்பார்கள்.
இதுபோக, விண்வெளி மையத்தில் இருப்பவர்கள் காபி அருந்த பயன்படுத்துவதற்கு ஒரு காபி மேக்கரும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், கடந்த வாரம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என அந்நிறுவன வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.

Leave a comment
Upload