தொடர்கள்
தொடர்கள்
எழுத்துக்காரன் வீதி 7 -ராம் கார்த்திக்

20180614015753269.jpg

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

மரணம் சார்ந்த பதைபதைப்பும், பீதியும், அர்த்தமற்ற வாழ்வின் சாரமும், ‘தான்’ என்றக் குரலிலிருந்து எழுபவை.

“எனக்கு நோயும், மூப்பும், மரணமும் ஏற்படலாம். அதனால் என்ன? நான் இளமை இழந்து மூப்படைவதால் மனித குலமே இளமை இழந்து மூப்படைந்து விடுகிறதா? நான் மரணமுற்று விடுவதால் – உலகமே அஸ்தமித்துவிடப் போகிறதா? என் அறிவு நைந்து போவதால், மனித குலத்தின் அறிவே நைந்துவிடப் போகிறதா? அப்படி இருக்கும் பட்சத்தில் எங்கள் அறிவு அதற்கும் ஒரு மார்க்கம் அமைத்திருக்கும். அது அவசியமில்லை என்பதினாலேயே அந்த முயற்சியில் நாங்கள் இறங்கவில்லை. தனி மனிதன் இறந்து படலாம். அவனது அறிவும், அதன் ஆற்றலும் அழிந்துவிடுவதில்லை. மனித அறிவே ஸ்திரமாய், சிரஞ்சீவியாய் இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் சக்தி பெற்றது”

இவ்வரிகள் எவர் வாயிலும் பட்டெழலாம். ஆனால், தடித்த கண்ணாடியும், முறுக்கிய மீசையும், பின் தவழும் வெண் சுருளும், உறைந்த தேன் குரலும், கன்னத்தில் தம் விரல் பொதித்து, புன்னகைத்து அமர்ந்தபடி, மானுடத்தோடு பேசிய ஜெயகாந்தன் குரலில் தான் அதற்கான கம்பீரத்தையும் முழுமையையும் பெறுகிறது.

ஜே. கே. வின் நாவல்கள், கவிதைகள், சிறு கதைகள் யாவும் மனிதத்தின் குரலாக ஒலிக்கின்றன. அந்த குரலின் உன்னதத்தாலோ என்னவோ ஜே. கே தொட்ட உச்சங்களை எவரும் தமிழ் இலக்கியத்தில் தொடவில்லை.

‘இல்லாதது எது’ என்ற சிறுகதையில் அறிவெனும் கூரின் உச்சத்தைத் தொட்டு, இறப்பின் முன்னால் மனிதனின் கையாலாகத்தனத்தை அறிவால் வெல்வதற்கு ஒரு வழி மொழிகிறார்..

“ஆம்; மனிதனின், அவன் அறிவின் மிகச் சிறப்பான அம்சமே இந்த சந்தேகப்படும் குணம்தான். சந்தேகம் ஆராய்ச்சிக் கருவியாய் அமைகிறது. அதிலிருந்தே யூகம் பிறக்கிறது; செயல் விளைகிறது.

ஆகையால் ‘உன் சித்தத்துக்கு ஏற்ப எதையாயினும் எடுத்துக் கொள்’ என்று கூறி விடலாமா, என்று யோசித்தான். அவ்விதம் சொன்னால் அடுத்த வினாடியே தான் இழக்கப் போவது தன் அறிவு என்பதையும் அவன் உணர்ந்தான்.“

அக்கதையில் வரும் மரண தூதுவன் ஓர் கிழட்டு விஞ்ஞானியை தன் பிடியில் மாளச் செய்கிறான்.

‘மரணம்’ என நாம் சொன்னாலும், சமய சான்றோர், ‘ஒடுங்கிய நிலை’ என மரணத்தை சொல்கின்றனர்.

பிறப்பும் இறப்பும் சுழற்சியின் இரு கரை. ஒருவனின் உடலும் ஞானமும் வரையறைக்கு உட்பட்டதே என்பது மரபில் நமக்கு பொதுவாக காணக் கிட்டும் கருத்து. மேலும், ‘விஸ்மயம்’ என்னும் பிரமிப்பு ரஸமே பல வேத சூக்தங்களில் நிரம்பியுள்ளதைக் காண்கிறோம். இந்திரன், வாயு, சோமன், இவைகளைப் பனிந்தேத்தியப் பாடல்களே மிகுதியானவை.

இயற்கையின் இக்கூர்களை வணங்க, பயமும், அதீத மதிப்பும் காரணமாக அமையக் கூடும். எதை நம்மால் எளிமையாக அணுக முடியுமோ, அவற்றை நம் மனம் துதிப்பதில்லை. அறிந்தவன், உணர்ந்தவன், எதைப் பார்த்து வணங்கப் போகிறான்? அவனை வணங்கச் செய்யும் பொருள் ஏது?

ஜே. கே. 'இல்லாதது எது' வில் சித்தரிக்கும் கிழட்டு விஞ்ஞானி மரணப் பிடியில் விழ, அவன் இடத்தை ஓர் இளைஞன் நிரப்புகிறான்.

“அந்த ஆராய்ச்சிக் கூடத்தில், கரு கருவென சுருண்ட சிகையுடன் ஒரு இளைஞன் முன்னவனின் சந்ததி, இப்பொழுது அமர்ந்திருந்தான். அவன் விழிகள் ஏகாந்த வெளியில் சுழலும் எண்ணற்ற ரகஸியங்களின் புதிய உண்மைகளைக் கண்டு கொண்டிருக்கின்றன. அவன் செவிகளை அடைத்திருந்த கருவியின் மூலம், புதிய புதிய செய்திகளை முதன் முதலில் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்.”

ஜே.கே மிக அழகான சாரத்தை மொழிகிறார். கடவுள் என்னும் ‘அது’ பல பாஷைகளில் பேசிக் கொண்டிருக்கட்டும். அப்போதும் அம்மொழிகளைக் கற்று, அதன் பெருமையை அதற்கே உணர்த்துவான் மானுடன் என! கொஞ்சம் அசாத்தியமாகத் தோன்றினாலும், இக்கனவுகளே மரணம் வென்று, வாழ்வை வாழ்வோடு நமக்குக் கோர்த்தன.

ஜே.கே விற்கு விருப்பமான பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகின்றன.

“சாத்திரம் கோடி வைத்தாள் அவை தன்னிலும் மிக்கதோர் ஞானம் வைத்தாள்”


தொடரும்