தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் - ஒரே நாடு! ஒரே தேர்தல்!

2018061401254993.png

‘ஒரே நாடு! ஒரே தேர்தல்’ என்கிற பி.ஜே.பி.யின் முழக்கம் கண்டு ‘என்னவோ ஏதோ’ என்று பல அரசியல் கட்சிகள் பதறுகின்றன! நாடாளுமன்றம் - சட்டமன்றம் இரண்டுக்கும் ஒரே சமயத்தில் இந்தியா முழுவதும் ஒரே நேரத் தேர்தல் என்பது புதிதல்ல! வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை வந்த காலகட்டத்திலேயே - சுதந்திரம் வந்தவுடன் நடந்த ஆரம்ப தேர்தலிலேயே அது சாத்தியப்பட்டிருக்கிறது!

மாநில ஆட்சிகள் மத்திய அரசினால் கலைக்கப்பட்டதாலோ, மெஜாரிட்டி இழந்ததால் மாநில அரசு கவிழ்ந்ததாலோ சட்டமன்ற தேர்தல்கள் தனியாக நடத்த நேர்ந்தது! குறிப்பாக எமர்ஜென்சிக்குப் பிறகு இரண்டுக்கும் தனித்தனித் தேர்தல்கள் நடைபெறும் நிலை ஏற்பட்டுவிட்டது! காங்கிரஸ் ஆட்சியால் வந்த வினை!

இரண்டுக்கும் சேர்த்து தேர்தல் நடந்த காலத்தில் ‘மத்தியில் ஜெயிக்கிற கட்சிக்கு மாநிலத்திலும் மக்கள் வோட்டு போட்டால்தான், அதே ஆட்சி இங்கும் வந்தால்தான் திட்டங்கள் நிறைவேற்ற முடியும்’ என்று சொல்லி அகில இந்திய கட்சி - முக்கியமாக காங்கிரஸ் கட்சி வோட்டு கேட்பது வழக்கம்!

தி.மு.க - அ.தி.மு.க. போன்ற மாநில கட்சிகளின் கை ஓங்கிய பிறகு, நிலைமைகள் மாறின! நாடாளுமன்றத்துக்கு அகில இந்திய கட்சிக்கு அதிக இடம் கொடுத்து, சட்டமன்றத்தை தங்கள் வசம் மாநில கட்சிகள் வைத்துக் கொண்டன!

இந்த நிலைமை இப்போதும் நீடிப்பதால்தான் ஒரே நேரத்தில் எம்.பி. - எம்.எல்.ஏ. தேர்தலை நடத்த மாநில கட்கள் விரும்பவில்லை!

நேரு, இந்திரா, போல பிரதமர் மோடியின் செல்வாக்கு மிக உயரத்தில்! இந்த நிலையில் இரண்டுக்கும் தேர்தல் என்றால், மோடியின் செல்வாக்கால் மாநிலத்தில் தாங்கள் பலம் இழப்போம் என்று மாநில கட்சிகள் பயப்படுகின்றன!

தமிழகத்தில் எடப்படி அரசு ‘நித்திய கண்ட’த்தில் இருக்கிறது! மீண்டும் வருமா அவர் ஆட்சி? சந்தேகமே! இந்த நிலையில் சட்டமன்றத்தை கலைக்க விரும்புவார்களா...? மிச்சமுள்ள நாட்களில் அது ஆட்சி செய்ய ஆசைப்படுகிறது!

உண்மையில் தமிழ்நாட்டில் அரசியல் காட்சிகள் மாறிவிட்டன! நாடாளுமன்றத்துடன் சட்டமன்றத்துக்கும் சேர்ந்து தேர்தல் நடத்துவது தமிழ்நாட்டுக்கு நல்லது.

சொல்லபோனால் நாடு முழுவதற்குமே இப்படி ஒரே நேர தேர்தல் மிக நல்லதே! ஆளும் கட்சி - எதிர்க்கட்சி என்ற இரண்டு மட்டுமே எதிர்காலத்தில் உருவாக இது உதவும்!


அமித்ஷா சொன்ன திருக்குறள்!

20180614012627622.jpg

விருந்தினரைப் போற்றி வரவேற்பதின் பெருமை பற்றி திருக்குறள் என்ன சொல்கிறது என்பதை சென்னை வந்த அமித் ஷா தமிழர்களுக்கே எடுத்துச் சொல்ல வேண்டியதாகிவிட்டது!

காரணம்? அமித்ஷா வருவதற்கு எதிராக இங்கே ‘ட்விட்’கள் கொட்டித் தீர்த்தன! முன்பு பிரதமர் மோடி வந்தபோது விசித்திரமான முறையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன! ‘திரும்பிப் போ’ என்ற கோஷம் வேறு!

எந்தவிதமான கருத்து வேறுபாடுகள் இருப்பினும், எந்த தலைவர்கள் மீதும் கடும் கோபம் வரக்கூடிய நிலையிலும், நியாயமே இருந்தாலும், ‘திரும்பிப் போ’ என்ற கோஷமும், கறுப்புக் கொடிகளும் தவிர்ப்பதே நல்லது! அதுவும் பிரதமர் மோடி போன்ற தலைவர்களை அவ்வாறு எதிர்ப்பது ரசிக்கும்படியாக இருக்காது!

கோரிக்கைகளை கூறி பேனர்களை தூக்கிப் பிடித்து முழக்கமிட்டு வரவேற்கலாம்!

‘கறுப்புக்கொடி’, ‘திரும்பிப் போ’ - இவை ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. மாற்றுக் கருத்தை வலியுறுத்த ஜனநாயகத்தில் வேறு எத்தனையோ சக்திவாய்ந்த வழிகள் உண்டு!